ஒலுவில் மக்களை மு.கா. ஏமாற்றுகிறது - கலாநிதி ஜெமீல்

லுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு தேவையான பாரிய திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்பகுதி மக்களை ஏமாற்றி வருகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒலுவில் மக்கள் மீது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு உண்மையான கரிசனை இருக்குமானால், தம்மால் செய்ய முடியாத இந்த வேலையில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, அதற்கான திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற செயல் வீரரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு வழி விட முன்வருவாரா என சவால் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"ஒலுவில் கிராமத்தை கடல் காவு கொள்ளும் அளவுக்கு கடலரிப்பு கடுமையாக ஏற்பட்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் அதனைத் தடுத்து, அக்கிராமத்தை பாதுகாப்பதற்கான பாரிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர், துறைமுக அமைச்சர் போன்றோருடன் பேசி, அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் தாமக்குரியது என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் அதில் மூக்கை நுழைத்து, அத்திட்டத்தை குழப்பியடிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாகவே தனது ஏற்பாட்டில் ஒலுவில் கடலோர பகுதியில் 220 மீட்டர் கடலோரத்திற்கு பாறாங்கற்களை போடுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் 17 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களில் பறைசாற்றியுள்ளார். இது வெறும் பம்மாத்தாகும். முழுக்கிராமமும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் ஒரு சிறிய தூர இடைவெளிக்கு மாத்திரம் பாறாங்கற்களை போடுவதன் மூலம் கடல் சீற்றத்தில் இருந்து இக்கிராமத்தை பாதுகாக்க முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாகும்.

உண்மையில் இப்பாரிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக பலம்வாய்ந்த தடுப்புச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கில் அதற்கான முயற்சிகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமது கட்சி அரசியல் சுயநலத்திற்காக இத்திட்டத்தை திசைதிருப்பும் சூழ்ச்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது.

இப்பிரச்சினை குறித்து அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை தம்வசம் வைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதனாலேயே அப்பகுதி மக்களின் அழுகுரல் கேட்டு, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு, கடலரிப்பு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைக்காணும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

இதனால் நிலை குழம்பிப்போன முஸ்லிம் காங்கிரஸ் ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்குடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னெடுத்து வருகின்ற பாரிய தடுப்புச் சுவர் திட்டத்தை குழப்பியடிக்க முற்பட்டிருக்கிறது.

தனது கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி.க்கள் மூவரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இது விடயத்தில் தலையிடுமளவுக்கு எதுவும் செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமைச்சர் ஹக்கீம் அவர்களை கண்டித்து, தள்ளி வைத்து விட்டு, இதனைக் கவனிப்பதற்காக திருகோணமலையை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை பொறுப்பாக்கியிருந்தார். 

இதுவே முஸ்லிம் காங்கிரஸ் உரிய தருணத்தில் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு சான்றாகும். இது விடயமாக அண்மையில் அங்கு சென்ற மு.கா.வின் மாகாண அமைச்சர் ஒருவரை, தமது பிரதேசத்தவர் என்று கூட பார்க்காமல் வழிமறித்து, கண்டித்து, துரத்தியடித்த நிகழ்வும் இதன் எதிரொலிதான். அது மாத்திரமல்லாமல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கடலரிப்பு குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் சகிதம் அப்பகுதிக்கு சென்றபோது ஏட்டிக்கு போட்டியாக அமைச்சர் ரவூப் ஹக்கீமும் ஓடோடிச் சென்றார். அதன்போது தனது அம்பாறை மாவட்ட எம்.பிக்கள் மூவரையும் அழைத்துச் செல்லாமல், புறக்கணித்து சென்றதன் காரணம் யாதெனில் மக்கள் கொதித்தெழுந்து தன்னையும் துரத்தி விடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அது மாத்திரமன்றி கடலரிப்பை தடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்து அடுத்த ஒரு சில தினங்களில் கடையடைப்பு, ஹர்த்தால் செய்வதற்கு ஒலுவில் மக்கள் தீர்மானித்ததுள்ளத்தைத் தொடர்ந்தே 17 மில்லியன் செலவில் 220 மீட்டர் கடற்கரையோரத்திற்கு பாரங்கள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரவூப் ஹக்கீம் செய்தி வெளியிட்டுள்ளார். 

அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, எந்தவொரு விடயத்திலும் எதுவும் செய்ய முடியாமல் வெறும் கோஷம் மட்டும் போடுகின்ற முஸ்லிம் காங்கிரஸ், வேறு விடயங்கள் போன்று கடலில் மூழ்கும் ஒலுவில் கிராமம் தொடர்பிலும் அமைச்சர் ஹக்கீம் நாடகமாடி, பம்மாத்து காட்டாமல் அக்கிராமத்தை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வழி விட்டு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்த மக்கள் சார்பில் மன்றாட்டமாய் கேட்டுக்கொள்கின்றேன்" என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -