‘புலிகளுக்கு வேண்டும் மீள்வருகை காலம் அதற்கு வேண்டும் மைத்திரி காலம்’ என்று நாங்கள் கடந்த வருட ஜனவரி 8 ஆம் திகதிக்கு முதல் கூறினோம் அது இப்போது நடக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாங்கள் கூறினோம் புலிகள் மீண்டும் வருதற்கு இடம் உள்ளது என, ஆனால் அப்போது சொன்னார்கள், சம்பிக்க இருக்கின்றார், ரத்ன தேரர் இருக்கின்றார்கள் என்று, இவர்கள் இவ்வாறு நடக்க விட மாட்டார்கள் என தெரிவித்து மக்கள் மனதை மாற்றினார்கள்.
ஆனால் இன்று முழு நாட்டுக்கும், இனங்களுக்கும், கண் தெரியாதவர்களுக்கு கூட தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த ஒன்றரை இரண்டு வருடங்களுக்குள் எந்த வகையில் தமிழ் தீவிரவாத போக்குடையவர்கள் வளர்ந்து இருக்கின்றார்கள் என்று.
உங்களுக்கு தெரியும் அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்று சுரேன் சுரேந்திரன் உட்பட புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசின் 14 பேருடன் விடுதியில் தங்கி இருந்தமை. இன்று இலங்கை அரசின் செலவில் தான் புலிகளின் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறு மங்கள சமரவீர நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயற்படும் இதே வேளை, முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கின் இனவாதம் இல்லாமல் இருந்த மக்களை இப்போது மீண்டும் இனவாதம் பேசும் அளவுக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த அரசாங்கம் அதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கியுள்ளது. திலீபன் என்பவர் புலிகளின் முக்கியவர் அவரின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலைகளை அகற்றுமாறு சொல்லும் விக்னேஸ்வரன் அதை செய்கின்றார். சிங்கள மக்களை குடியேற்ற வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இந்த அமைப்புக்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார். ஆதவன்.