ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 'சிப்தொற' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப்பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 'சிப்தொறபுலமைப்பரிசில் காசோலைகள்' வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி. எம்.எம்.சஃபீர், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன், திட்ட முகாமையாளர் ஏ.எல்.றகுமத்துல்லாஹ், கணக்காளர் ஏ.எம்.மஃறூப் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினத்தில் 71 மாணவர்களுக்கு சிப்தொற நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 100க்கு மேற்பட்டமாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசில் மாணவர்களுக்குக் கிடைத்த ஒருவரப்பிரசாதம்' என்று சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
இந்த நல்லாட்சி அரசில் யாராவது குற்றங்களைப் புரிந்து விட்டு, அல்லது அனியாயங்களைச் செய்து விட்டு, அரசியல்வாதிகளின் செல்வாக்கைக்கொண்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அந்தக் காலம் மலையேறி விட்டது. குற்றங்களைப்புரிந்தவர்கள் எந்தத் தரப்பினரானாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதை இந்த நல்லாட்சி அரசில்நாளுக்கு நாள் ஊடகங்கள் வாயிலாகக் காண்கிறோம். குற்றவாளிகளை அரசியல் ஊடாகத் தப்பிக்கச் செய்யும் ஒருஅரசியல் தலைமையாக நான் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்' எனத் தெரிவித்தார்.