பைஷல் இஸ்மாயில் -
வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ளவர்கள் சிறுநீரக நோயினால் அதிகம் பாதிகப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
தொற்றாநோய் சிகிச்சை தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்வும், வைத்திய சிகிச்சையளிக்கும் சேவையும் இன்று (28) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
பொலநறுவ, கஹட்டகஸ்கிரிய, அனுராதபுரம், புல்மோட்டை மற்றும் பதவிய போன்ற பிரதேசங்களில் இந்த சிறுநீரக நோய் அதிகம் உள்ளதாகவும், இந்த நோய் வருவதற்கு மிக காரணமாக அமைவது அங்குள்ள உப்பு கலந்த நீராகும். இதை தடுப்பதற்கான சகல முன்னெடுப்புக்களையும் சுகாதார அமைச்சி மேற்கொண்டு வருகின்றது.
அதுமாத்திரமல்லாமல் இன்று மனிதனை ஆட்டிப் படைக்கின்ற ஒரு நோயாகவும், சமூகத்தை அழிக்கின்ற ஒரு கொடிய நோயாக தொற்றா நோய் காணப்படுகின்றது. இந்த நோயால் மரனிப்போரின் வீதம் அதிகரித்துக்கொண்டும் வருகின்றது. இன்று மனிதனின் ஆயுட்காலம் குறைந்து, இறப்பின் வீதம் அதிகரித்து வருகின்றது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக எமது நல்லாட்சி அரசு பெறும் தொகையான பணத்தினை ஒதுக்கீடு செய்து செலவும் செய்து வருகின்றது. இதனால் வைத்தியத்துறை இன்று பாரிய சவால்களை எதிர்கொண்டும் வருகின்றது.
இதேபோன்றுதான் இன்று சமூகத்தில் மிகப் பகிரங்கமாக பரவிவருகின்ற ஒரு நோயாக சமூக சீர்கேடு காணப்படுகின்றது. இந்த சமூக சீர்கேடு உலகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், இது வருவதற்குக் காரணம் ஒவ்வொருவரும் இன்றைய வாழ்க்கையை மிக ஆடம்பரமாக அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று விரும்பி வருவதனாலேயே ஆகும்.
இதனால் இளம் வயதில் திருமணம், விவாகரத்து, மது, புகையிலை போன்ற பாவனை, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்ற பல தீய செயற்பாடுகளில் இன்றைய இளம் சமூகம் சொன்று கொண்டிருப்பதை நாம் அறிகின்றோம். இந்த நோயை கட்டுப்படுத்த மருத்துபவர்களால் எதுவுமே சீர் செய்யமுடியாது. இதை ஆத்ம ரீதியாகத்தான் கட்டுப்படுத்தமுடியும்.
இந்த சமூக சீர்கேடு விடயங்களை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் சமூக நல வள நிலையங்கள் உறுவாக்கப்படவேண்டும். இதற்கான முன்னெடுப்புக்களை எமது நல்லாட்சி அரசு முன்னெடுக்குமாக இருந்தால் இதன் மூலம் சமூகத்தின் இழப்புக்களை குறைக்கமுடியும் என்றார்.