வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான காலம் இன்னும் கனிந்து வரவில்லை. எனவே அது தொடர்பாக இப்போது யோசிக்க அவசியமுமில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பினருடனான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை காலை கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தோடு வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த அடிப்படையில் 1988ஆம் ஆண்டு இணைந்த வட கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை இயங்கத் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டுவரை இணைந்திருந்த இந்த வட கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் முஸ்லிம் சிங்கள மக்கள் திருப்தியடைவில்லை. இந்த சபையினால் வழங்கப்பட்ட நியமனங்கள் அபிவிருத்திகள் என்பவற்றில் இந்த இரண்டு இனத்தினருக்கும் அநீதிகள் பல இழைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு கூடுதல் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு என்ற பெயரோடு பல அபிவிருத்தித் திட்டங்கள் அக்காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. நெக்கோர்ட் நெக்டெப் நேஹ்ர்ப் போன்ற பெயர் கொண்டு இத்திட்டங்கள் அழைக்கப்பட்டன. இத்திட்டங்களின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர்களாக முஸ்லிம் சிங்கள இனத்தவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே தெரியாமலே சில புறக்கணிப்புகள் நடந்துள்ளன. இப்போதும் கூட சில தமிழ் அரசியல்வாதிகளிடமும் சில தமிழ் அதிகாரிகளிடமும் முஸ்லிம் விரோத எண்ணங்கள் உள்ளன. அவர்களது அறிக்கைகள்செயற்பாடுகள் என்பவற்றிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இதற்காக பல உதாரணங்களையும் கூற முடியும். இப்படி ஒரு சூழ்நிலையில் வடக்கும் கிழக்கும் இணையுமாக இருந்தால் அதே புறக்கணிப்புகள் முஸ்லிம் சிங்கள இனத்தவருக்கு மீண்டும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகையினால் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் அதிகாரிகளும் தங்களது நடத்தைகள் மூலம் முஸ்லிம் மக்களது மனங்களை முதலில் வெல்ல வேண்டும்.1983 க்கு முன் எப்படி அந்நியோன்யமாக தமிழ் - முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்களோ அப்படி ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் தான் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி சிந்திக்க முடியும். பேச முடியும். இதனை விடுத்து ஒரு சிலரின் நலனுக்காகவோ அல்லது ஒரு சமூகத்தின் நலனுக்காகவோ வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது. எனவேவடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசுவோர் முதலில் சமூகங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதுதான் காலத்தின் இன்றைய தேவையுமாகும் என்றார்.