கல்முனை அபிவிருத்தி தொடர்பில் நாபீர் பௌண்டேசனின் தலைவர் உதுமாங்கண்டு நாபீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கிமுக்கு எழுதியுள்ள திறந்தமடல்
அமைச்சரே! கல்முனை எப்போது அபிவிருத்தி செய்யப்படும் எனும் கேள்வி அப்பிரதேசத்தில் மட்டுமல்ல முழுநாட்டிலும் ஏன் சர்வதேசத்திலும் உள்ள கல்முனையை நேசிப்போரிடமுள்ள பிரதான கேள்வி.
இந்தக்கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர் என்ற முறையில் அவர்களது சார்பில் உங்களிடம் எனது திறந்தமடலின் மூலம் வினவுகிறேன்.
ஒருகாலத்தில் கல்முனை அரசியலிலும் அபிவிருத்தியிலும் முன்னணியில் திகழ்ந்தது. ஆனால் இப்போது இவை இரண்டிலும் இது சோபையிழந்து காணப்படுகின்றது. மர்ஹும் அஷ்ரபுடன் அந்த நிலை கண்மறைந்து விட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அரசியல் தலைமைகள் கல்முனையை அபிவிருத்தி செய்யும் என்ற கனவுடன் இலவுகாத்தகிளி போல கல்முனை மக்கள்.... கேட்பவன் கேனயன் என்றால் எருமைமாடுகள்கூட ஏரோப்ளேன் ஓடுமாம் என்ற பழமொழிக்கு ஒப்ப 600 மில்லியன் 500 மில்லியன் அபிவிருத்திக்கதைகள். இன்னும் இந்த மக்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.
அமைச்சரே! மறைந்த தலைவர் உருவாக்கிய கட்சி என்பதற்காக அதனை பாதுகாக்க வேண்டும் என்ற அபார அபிமானத்தில் இன்னும் இந்தமக்கள் இலவுகாத்தகிளியாகவே இருக்கின்றனர்.
கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம், சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கை அம்மக்களின் தோணா அபிவிருத்தி வேலிவோரியன் கிராம விஸ்தரிப்புக்கு அரச அங்கீகாரம் நற்பிட்டிமுனை விளையாட்டு மைதான அபிவிருத்தி கல்முனைக்குடி மக்களின் அத்தியாவசிய தேவையான வீதிகள் அபிவிருத்தி என எவ்வளவோ!.....
தேர்தல் காலங்கள் என்றால் கட்சி அரசியல்வாதிகள் இப்பிராந்தியத்தில் முகாமிட்டு ஆக்ரோஷமாக பேசி இம்மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்று அவர்களது சிம்மாசனத்தை தக்கவைதுக்கொள்கின்றனர். பின்னர் தொலைபேசிகள் கூட இயங்க மறுப்பதாக அந்த அப்பாவிமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை விமர்சித்தால் ஆத்திரப்பட்ட அப்போதைய இளைஞர்கள் இன்று எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கமுடியாமல் தத்தளிக்கின்றனர். இந்நிலை நீடித்தால் கட்சியின் நிலை...... சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அதேபோன்று கட்சி ஆதரவாளர்களை இழப்பத்து என்பது அதன் வீழ்ச்சிக்கே வழிசமைக்கும்.
உங்களை சாய்ந்தமருது மக்களே தலைவராய் முடிசூட்டினர் அதே இடத்தில் உங்களது கொடும்பாவிக்கும் ஒரு சிலரால் கேடு விளைவிக்கப்பட்டது. அன்று மறைந்த தலைவர் தனக்கு அரசியல் எதிரிகள் வளர்வதை விரும்பாதவராக இருந்தார். இப்போது அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படுகின்றன.
இம்மக்களுக்கு வாக்களித்த அபிவிருத்திகளை செய்ய முன்வாருங்கள். உங்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அபிவிருத்திகள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட அபிவிருத்திகளை உடனடியாக செய்ய நடவடிக்கை எடுங்கள். சாய்ந்தமருது மக்களுக்கு உங்களால் பிரதமர் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட உள்ளுராட்சிசபை வாக்குறுதியை உடன் நிறைவேற்றுங்கள்.
இனிமேலும் அரசியல்வாதிகளால் இப்பிராந்திய மக்கள் ஏமாறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மீண்டும் ஒருமடலில் சந்திப்போம்.
ஊடகப் பிரிவு
அல்ஹாஜ்.நாபீர் உதுமான் கண்டுதலைவர், நாபீர் பவுண்டேஷன்
முகாமைத்துவ பணிப்பாளர், ECM Pvt Ltd.
