சுலைமான் றாபி-
நிந்தவூர் அல் அஷ்றக் தேசியப் பாடசாலையின் 70வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதன் பழைய மாணவர் சங்கத்தினரால் மாபெரும் சிரமதானப் பணிகள் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
2016ல் சுத்தமான பாடசாலையும், ஆரோக்கியமான மாணவர்களும் எனும் தொனிப்பொருளில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்த சிரமதானப்பணிகளில் பாடசாலை ஆசிரியர்கள், நிந்தவூர் நலன்புரிச்சபை மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், சமூகசேவை அமைப்புக்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தாங்கள் கற்றுத்தேறிய பாடசாலையின் வளங்களைப் பாதுகாத்து அதன் மூலம் ஆரோக்கியமான கல்விச் சூழுலுக்கு வித்திட்டனர்.
இதேவேளை இவ்வாறான சிரமதானப்பணிகள் மூலம் பாடசாலையும் அதன் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுவதோடு, எல்லா சந்தர்ப்பங்களிலும் பாடசாலை பற்றிய சிந்தனைகளால் அங்கு நிலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு இவ்வாறான பழைய மாணவர் சங்கங்கள் அமையப் பெறுவதும், அது இயங்கு நிலையில் இருப்பதும் காலத்தின் தேவையாகும்.
இதேவேளை நிந்தவூர் அல் அஷ்றக் தேசியப் பாடசாலையின் 70வது ஆண்டு நிறைவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.