ஆர்ப்பாட்டம் முஸ்லிம் மக்களிற்கு நன்மையளிக்காது - அஸ்மின் விளக்கம்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற திட்டமிடல் அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம்; முஸ்லிம் மக்களிற்கு நன்மையளிக்காது. அ.அஸ்மின் விளக்கம்

கடந்த 27 ஆகஸ்ட் 2016 அன்று இடம்பெற்ற யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற திட்டமிடல் அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமொன்று திருவாளர் முபீன், ஷரபுல் அனாம் மற்றும் ஜமால் மொஹிதீன் ஆகியோராலும் அவர்களது ஆதரவாலர்கள் மற்றும் அடியாட்களாலுமே மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்படி எதிர்ப்பு நடவடிக்கை யாழ் முஸ்லிம் மக்களுடையதல்ல என்ற காரணத்தினால் மேற்படி விடயம் குறித்து நான் எதுவித கருத்துக்களையும் இதுவரை முன்வைக்க விரும்பவில்லை. ஆனாலும் யாழ் முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பலரும், அரசியல் ஆர்வலர்கள் பலரும் இதுவிடயத்தில் மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு அறிக்கையினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு சில அடிப்படையான கருத்துக்களை இங்கு முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக பலமான சமூகங்கள் அல்ல என்கின்ற காரணத்தினால் சிவில் சமூகச் செயற்பாடுகளே இங்கு பிரதானமானது என்பதை மீள்குடியேற்றத்தின் ஆரம்பகாலம் முதல் நான் வலியுறுத்தி வந்திருக்கின்றேன், இதன் ஒரு வெளிப்பாடாகவே 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் நாள் யாழ்ப்பாணம் சிவில் சமூகப்பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி “யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்” என்னும் அமைப்பை ஸ்தாபித்தோம், அதனது ஸ்தாபக செயலாளராகவும் நானே கடமையாற்றினேன், எனவே சம்மேளனத்தின் முக்கியத்துவமும், அதனை எவ்வாறு மக்கள் நலன்சார்ந்து இயக்க வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தி வழிநடாத்திய எனக்கு; சம்மேளனத்தை புறக்கணிக்க அல்லது இல்லாமல் செய்யும் நோக்கங்கள் எதுவும் இருந்ததில்லை.

2013ம் ஆண்டு முபீன் தலைமையிலான குழுவினர் சம்மேளனத்தின் நிர்வாகத்தை முறைகேடா பலாத்காரத்தைப் பிரயோகித்து கைப்பற்றிய சந்தர்ப்பத்திலும் சம்மேளனத்திற்கு பிரதியீடாக ஒரு அமைப்பை ஏற்படுத்த பலர் ஆலோசனைகளை வழங்கிய சமயத்திலும் நான் அதற்கு முயற்சிக்கவில்லை. 2013 ஜூன் முதல் 2016 ஆகஸ்ட் நிறைவு வரை 38 மாதங்களுக்கும் அதிகமாக “யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்” புதிய நிர்வாகத்தினால் ஒரு பிரதிநிதிகள் கூட்டத்தை அல்லது பொதுக் கூட்டத்தையேனும் நடாத்த முடியாமல் இருக்கின்றது. 38 மாதங்களாக எவ்விதமான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை, நிதி அறிக்கைகள் சம்ர்ப்பிக்கபப்டவில்லை, தலைவர் செயலாளர் தெரிவு நடாத்தப்படவில்லை. முபீன் என்பவருக்குத் தேவையான சந்தர்ப்பங்களின் மாத்திரம் செயற்குழு என்ற பெயரில் முபீன் என்பவரின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை நடாத்தி ஜனநாயகத்திற்கு எவ்வித இடமும் வழங்கப்படாமல் கருத்துச் சுதந்திரம் பேணப்படாமல் யாழ்ப்பாண முஸ்லிம் என்ற பெயரில் சுயநல அரசியல் நடவடிக்கைக்கான அடையாளமாக “யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்” பயன்படுத்தப்படுகின்றது என்ற கசப்பான உண்மையை நீண்டகாலம் சமூக நன்மை கருதி வெளியில் தெரியப்படுத்தாத கருத்தை இவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட காரணத்தினால் இவ்விடத்தில் முன்வைக்கின்றேன்.

கடந்த 38 மாதங்களாக யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எதிலுமே எவ்விதமான பங்களிப்புகளையும் வழங்குவதற்கு சம்மேளனம் தவறியிருந்த சந்தர்ப்பத்தில் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் நாள் சனிக்கிழமை யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகளை அழைத்து யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடாத்தியபோது முபீன் என்பவர் இதே போன்ற ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தார்; இந்த வருடம் நடாத்தப்பட்ட கூட்டத்திற்கு முன்பும் இதே மாதரியான ஒரு குழப்பத்தை அவர் தலைமையில் உண்டுபண்ணியிருக்கின்றார். யாழ்ப்பாண முஸ்லிம்கள் முபீன் என்ப்வருக்கு அடிமைச்சீட்டு எழுதப்பட்ட அடிமைகளும் அல்ல; யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்களை கையாள்வதற்கான உரிமை முபீன் அல்லது அவரது ஆளுகையின் கீழ் இருக்கின்ற ஒரு நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்ட விவகாரமும் அல்ல என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன். இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயக விரோதமானது, அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது, யாழ் முஸ்லிம் மக்களின் நலன்களுக்கு விரோதமானது.

2016 ஆகஸ்ட் 27ம் திகதி ஒன்றுகூட்டப்பட்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான திட்டமிடல் அமர்விற்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ஆர்வமுள்ள ஈடுபாடுள்ள அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொஹிதீன் அவர்களுக்கும், செயலாளர் சுனீஸ் அவர்களுக்கும், ஷரபுல் அனாம், அல்-ஹாஜ் அமீன், ஆகியோருக்கு நிகழ்ச்சி நிரலில் முக்கியமான தலைப்புகளில் கருத்துரை வழங்குவதற்கான நேரம் ஒதுக்கித்தரப்பட்டு, அவை முன்கூட்டியே அவர்களுக்கு அழைக்கப்பட்டு மூன்றுதடவைகளுக்கு மேல் அவர்களோடு கதைத்து உத்தரவாதமும் பெறப்பட்டது இறுதியாக 25-8-2016 அன்று இரவு அவர்கள் அனைவரோடும் தொலைபேசியில் பேசியபோது நிகழ்வில் தமது உரைகள் இடம்பெறும் என்பதை உறுதி செய்திருந்தார்கள். எவரும் தமக்கு மேற்படி நிகழ்வில் ஆட்சேபனைகள் இருப்பதாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நான் எந்தவொரு நிறுவனத்தையும் அழைத்திருக்கவில்லை; இவ்வாறான நிலையில் சம்மேளனத்தை அழைக்கவில்லை என்ற கருத்து அல்லது அவர்களுக்குத் தெரியாமல் திரைமறைவில் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற கருத்து முற்றிலும் பொய்யானது. மேலும் அபாண்டமானதும் கூட.

முபீன் என்பவரை நான் ஏற்பாடு செய்கின்ற எந்தவொரு நிகழ்விற்கும் அழைப்பதில்லை; காரணம் என்னவென்றால், 2010ம் ஆண்டுமுதல் 2015ம் ஆண்டுவரை நான் ஏற்பாடு செய்த யாழ் முஸ்லிம் மக்களின் நலன்கள் கலந்துரையாடப்படுகின்ற 10ற்கும் அதிகமான கூட்டங்களுக்கு அவரை அழைத்திருகின்றேன், எல்லாக் கூட்டங்களும் என்னுடைய தனிப்பட்ட பணச் செலவு, பொருட்செலவு என்பவற்றோடு பங்கேற்கின்ற பிரதிநிதிகளினதும் பணச்செலவு நேரச் செலவோடும் நடாத்தப்பட்ட கூட்டங்களாகும் இத்தகைய எல்லாக் கூட்டங்களிலும ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கருத்துமுரண்பாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இறுதியில் அந்தக் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட நோக்கத்தை அடையாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. எனவே அவரை அழைப்பதால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அவருக்கு இவ்வாறான நிகழ்வுகளுக்கு எவ்விதமான அழைப்பிதழ்களும் வழங்கப்படுவதில்லை, மேற்படி திட்டமிடல் அமர்விற்கும் அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை, இதுவே அவரும் அவரது அடியாட்களும் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பட்டத்திற்கான ஒரேயொரு காரணமாகும்.

முபீன் என்பவர் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுக்கு எவ்விதமான அழிவுகளை ஏற்படுத்தியவர் என்பதும், எவ்வாறான கிரிமினல் குற்றங்களோடு தொடர்புடையவர் என்றும், எவ்வாறான பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திவருகின்றவர் என்பது குறித்தும், தனிப்பட்ட ரீதியில் எனக்கும் எனது நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தியவர் என்பதும், விரிவாகப் பேசப்படவேண்டியவையாகும். என்னுடைய இந்த அறிக்கை வெளிவந்தவுடன் தனிப்பட்ட ரீதியில் அவருடைய அச்சுறுத்தல்களையும் ஆபத்துக்களையும் நான் எதிர்நோக்க வேண்டிவரும் என்பதும் எனக்குத் தெரியும், யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் பலர் இவரது அநியாயங்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் அஞ்சியவர்களாகவே மௌனிகளாக இருக்கின்றார்கள். அந்த மௌனங்கள் பயனற்றவையாகும்.

ஜமால் ஷரபுல் அனாம் ஆகிய இருவரையும் 27ம் திகதி காலை சந்தித்து இன்றைய நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் அடங்கிய தொகுப்பை நான் எழுத்து மூலம் அவர்களுக்கு வழங்கி; இதிலே யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்ட முடியும் உங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்வைக்க முடியும் என்று கூறியிருந்தேன்; யாழ்ப்பாண முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட சாதாரண மிகவும் இயல்பான கருத்துமுரண்பாடுகளை பூதாகரபப்டுத்தி உலகிற்குத் தெரியபப்டுத்தி யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்த இவர்களை யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் சரியான தருணத்தில் கவனித்துக் கொள்வார்கள், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) தலைவர் முன்னால் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா அவர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் விதத்தில் மேற்குறித்த இருவரும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தவறாக வழிநடாத்தி அவர்களை கேவலப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்களை பாரப்படுத்த வேண்டாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவரை முஸ்லிம்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றம் சுமத்துகின்றனர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிக மக்கள் ஆதரவைக் கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவர்களாக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவர்களாக அவர்களே செயற்படுகின்றார்கள், இவர்களிடம் எமது பிரச்சினைகளையும் தேவைகளையும் சுட்டிக்காட்டுவதில் அவர்களுடைய ஒத்துழைப்புகளோடு எமது பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் நாம் முயற்சியெடுப்பதில் என்ன தப்பும் தவறும் நிகழ்ந்துவிடப்போகின்றது.

இத்தகைய சுயநலாமன எதிர்ப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் ஏற்படுத்தாது என்பதோடு; இவற்றின் மூலம் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் பாதிக்கப்படும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாங்கள் மக்களோடு இருக்கின்றோம், மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிந்து புரிந்து வைத்திருக்கின்றோம். மக்களின் நலன்களுக்காக எமது அர்ப்பணிப்பான உழைப்புகள் தொடரும், மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்ற திட்டமிடல் அமர்வின் நன்மைகளை விரைவில் எமது மக்கள் கண்டுகொள்வார்கள் என நான் நம்புகின்றேன்.

இந்தக் கருத்துக்களை நான் மிகவும் பொறுப்புணர்வோடு இங்கு தெரிவித்திருக்கின்றேன், ஒரு சில தனிநபர்கள் குறித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் சமூக நலன் சார்ந்தே நோக்கப்படுதல் அவசியமாகும், அவை தனிப்பட்ட நலன்களுக்கானதல்ல என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இவ்வண்ணம்
அ.அஸ்மின்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -