உலகின் மிகப்பெரிய விமானமான ’ஏர்லேண்டர் 10’ வெற்றிகரமாக தனது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் பிரிட்டைன் நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சாதாரண ஹெலிகாப்டரைப் போல் எவ்வித தரையிலும் இறங்கும் ஆற்றல் கொண்ட இந்த விமானம் மணிக்கு 92 மைல் வேகத்தில் சுமார் 9 ஆயிரம் டன் சரக்குகளை சுமந்தபடி தொடர்ந்து 5 நாட்கள்வரை பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக இந்த விமானத்தை வடிவமைக்கும் திட்டத்தை செயல்படுத்திய அமெரிக்கா, பின்னர் நிதி பற்றாக்குறையால் அந்த முயற்சியை கிடப்பில் போட்டது. இதையடுத்து, பிரிட்டன் நாட்டை சேர்ந்த ’ஹைபிரிட் ஏர் வெஹிகில்ஸ்’ என்ற நிறுவனம் இந்த கனவை நனவாக்கியுள்ளது.
உள்நாட்டு நேரப்படி புதன்கிழமை முன்னிரவு 7.40 மணியளவில் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பெட்போர்ட்ஷைர் பகுதியில் இருந்து தனது கனமான இடுப்பை அசைத்தபடி இந்த விமானம் புறப்பட்டு சென்ற காட்சியை கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஜெட் ரக பயணிகள் விமானத்தைவிட சுமார் 50 அடி அதிக நீளம் கொண்ட ’ஏர்லேண்டர் 10’ விமானம் நான்கு என்ஜின்களை கொண்டது.
தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்பட்டாலும், இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.