
வடக்கும் கிழக்கும் என்பது பாட்டி சுட்ட வடையை காகம் கொண்டு சென்ற கதையல்ல என்பதை தெளிவுபடுத்த இன்னும் காலம் தேவையில்லை. இலங்கையில் ஏனைய மாகாணங்கள் தனித்தியங்குகின்ற நிலையில் வடக்கும் கிழக்கும் தனித்தியங்குவதில் இன்றைய நடைமுறையில் பாரியளவில் எப்பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகள் நிர்வாகிகளின் மனோபாவங்களில் உள்ளதேயாகும் என்பதுடன், குறிப்பிட்ட சில அதிகாரங்களின் மீதூன சட்டபூர்வ நிலையுமாகும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கும் கிழக்கும் இரவோடு இரவாக இணைக்கப்பட்ட பின்னரே முஸ்லிம்களின் இரத்தம் அதிகளவில் இவ்மண்ணில் ஓடியது என்பதை யாராவது மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இணைந்த வடக்கிழக்கில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக திட்டமிட்டு குறைக்கப்பட்டது மட்டுமன்றி முஸ்லிம்களை ஒரு தனி இனமாக அங்கீகரிக்கத் தவறியதுடன், பேச்சுவார்த்தைகளில் கூட ஒரு இனத்துக்கு சமமான இடம் ஒதுக்கப்படாது ஒரு தமிழ் பேசும் குழுவாக நோக்கப்பட்ட சரித்திரங்களின் பரம்பரைதான் இன்றுள்ளனர்.
நோர்வே போன்ற வெளிநாடுகளில் இடம்பெற்ற பேச்சுக்களில் முஸ்லிம் சமூகம் பல்வேறு வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கும், அரசியல் அழுத்தங்களுக்கும் ஊடாகத்தான் ஓரளவு கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பது வரலாற்றுச் சான்றுகளாகவே இன்றும் உள்ளது. மேலும் போராடி நாங்கள் சிங்கள மக்களிடம் இருந்து எமக்கான தீர்வினைப் பெற்ற பின்னர் முஸ்லிம்களாகிய உங்களுக்கு தீர்வினை வழங்குகின்றோம் என்பது எவ்வகையிலும் ஜனநாயகத்தன்மையையோ நியாயத்தையோ வெளிப்படுத்தவில்லை மாறாக மாற்றாந்தாய் மனப்பான்மையினையும் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கியொடுக்குவதற்கான உள்நோக்கத்தையுமே வெளிக்காட்டிநிற்கின்றது என்பது கசப்பான உண்மையாகும்.
அண்மைக்காலமாக தமிழர் பேரவை, தமிழ்க்கட்சிகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் எவையும் முஸ்லிம்களின் உரிமையை ஏனைய இனங்களுக்கு சமமாக நிலைநாட்டுவதாக அமையவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் தலைமைகள் கூட வடக்கையும் கிழக்கையும் இணைப்பதில் உள்ள சாதக பாதகங்களை பல மேடைகளில் இணைப்போம், பிரிப்போம், நிபந்தனையுடன் இணைப்போம் என்றெல்லாம் கொக்கரிக்கின்றனர் - ஆனால் தெளிவான முடிவில்லை. அதேவேளை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வடகிழக்கு இணைப்பினை வண்மையாக எதிர்ப்பதனை தெளிவாகக் காணமுடிகின்றது.
ஒரு இனம் வாழ்வதற்கான இன்னொரு இனம் அழியவேண்டும் என்பது உலக நியதில்ல. ஒவ்வொரு இனமும் அதனதன் உரிமைகள், சமத்துவங்களைப் பெற்று சுதந்திரமாக வாழ்வதையே உலக நியதி எடுத்துக்காட்டுகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் இன்று எதிர்பார்க்கும் அளவுக்கு அரசும், அரசாங்கமும் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கின்றது இருந்த போதிலும் அரசியல்வாதிகளின் சுயநலன்களினாலும், சில சிற்றுக் குழுக்களினால் ஆங்காங்கே கட்டவிழ்த்துவிடப்படுகின்ற இனமுரண்பாடுகளினாலும் அவை கேள்விக்குறியாவதுடன், மிகவும் கொடூரமானதாகவே காணப்படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
எவ்வாறாயினும் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதையே புராதன காலம் தொடக்கம் கடைப்பிடித்து வருகின்றனர். அதனையே இன்றும் விரும்புகின்றனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடகிழக்கு இணைக்கப்பட்டபோதும், அதன் பின்னரும் முஸ்லிம் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் திட்டமிட்ட வகையில் கொன்று குவிக்கப்பட்டதும், பூர்வீக குடிமனைகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதும், இன்று கூட பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரை, மன்னார் தொடக்கம் வவுனியா வரை காணிகளை இழந்து நிர்க்கதியாகி நிற்பதும் வெள்ளிடை மலை. அந்நிலை வடகிழக்கு பிரிக்கப்பட்டதன் பின்னர் கூட தீர்க்கப்படாத பிரச்சினையாக புற்றுநோய்போல் புரையோடிப் போயிருக்கும் நிலையில் இன்றும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் தொற்றியதுபோல் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென விரும்புவது மீண்டும் முஸ்லிம் மக்கள் தங்கள் தாயகத்தை இழக்கச் செய்வதற்கான திட்டமிட்ட ஒரு சதியாகவே நோக்கவேண்டியுள்ளது.
பேச்சுவார்த்தை மேசைகளில் முஸ்லிம்களையும் இலங்கையின் சரிசமமான இனமாக இனங்கனாண்பதற்கே தயக்கம் காட்டுபவர்கள் இணைந்த வடகிழக்கு அப்பால் முஸ்லிம்கள் கோரிநிற்கும் தென்கிழக்கு அலகையோ? முஸ்லிம் மாகாணத்தையோ வழங்குவதற்கு எவ்வாறு முன்வருவர்? அது தொடர்பாக சிங்கள சமூகமோ தமிழ் சமூகமோ வாய்திறக்கவில்லை. இதுவிடயத்தில் முஸ்லிம் தலைமைகள் கூட தெளிவான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கவுமில்லை.
இந்நிலையில், பெரும்பான்மை இனத்திடம் இருந்து தமிழ் மக்கள் தங்களுக்கு என ஒரு தீர்வுத்திட்டத்தை முன்னோக்கி பெற்றுக்கொண்டு, தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகத்துக்கென ஒரு தீர்வுத்திட்டத்தை அதன் பின்னர் பேசிக் கொடுப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியமற்ற ஒன்றே.
வடக்கு – கிழக்கு என்பது தனித்தனி மாகாணங்களாக இருப்பதே இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் பாதுகாப்பானதாகும். அல்லது முழு இலங்கைக்கும் புதிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் வருகின்றபோது சிங்கள – தமிழ் - முஸ்லிம் என மூன்று தரப்பினரும் பொது மேசையில் தங்களது இருப்புக்களை எந்த ஒரு சமூகத்துக்கும் அநியாயமோ, இழப்போ வராத வகையில் பங்கிட்டுக்கொள்வதே மேல். அத்தீர்வு என்பது மக்களின் எண்ணக்கருக்களை பிரபதிலிக்க வேண்டுமே அன்றி இனத்துவேசங்களை அல்ல.