எம்.ஜே.எம்.சஜீத்-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களுக்கு உதவி செய்வதற்கு தனவந்தர்கள் முன்வரவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பிர் சுபையிர் தெரிவித்தார்.
உறுகாமம் மீள்குடியேற்றக் கிராமத்துக்கு நேற்று (15) திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்பிரதேச பள்ளிவாசல் நிருவாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் 1990ஆம் ஆண்டு உறுகாமக் கிராமத்தில் இருந்த மக்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். இக்கிராமம் பழமைவாய்ந்த பல வரலாறுகளைக் கொண்டது. இங்குள்ள மக்கள் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டு மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலே வாழ்ந்து வந்தனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இக்கிராம மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தற்போது மீள்குடியேறி வருகின்றனர். இக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் என்னாலான உதவிகளைச் செய்துள்ளேன்.
குறிப்பாக இக்கிராம மக்களுக்காக மின்சாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற விடயங்களுக்கு கோடிக்கணக்கான நிதிகளை கொடுத்து உதவியுள்ளேன். விசேடமாக இக்கிராம மக்களுடைய வீட்டுப்பிரச்சிணைகளை தீர்ப்பதற்காக இந்திய வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்தக் கோரிய போது அது தொடர்பிலான சில நிருவாக அதிகாரிகளுடைய கழுத்தறுப்புக்களினால் அத்திட்டத்தினை மேற்கொள்ள முடியாமல் போனது அது மிகவும் கவலையான விடயமாகும்.
ஆகவே முஸ்லிம் தனவந்தர்கள் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏனைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கு எடுக்கும் ஆர்வத்தைினை கைவிட்டு விட்டு ஏழைச் சமூகத்து உதவி செய்ய முன்வர வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.