அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபையின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இன்று புதன்கிழமை கல்முனைக்குடி பிரதேசம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து அகற்றும் முழுநாள் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் மேற்பார்வையில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இப்பணியில் ஈடுபட்ட சுகாதாரத் தொழிலாளர்களுக்கு கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பு, உபசார அனுசரணை வழங்கியதுடன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்பு அலுவலகம், கல்முனை பொலிஸ் நிலையம் என்பன ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
இதில் சுகாதார வைத்திய அதிகாரிகளான டாகடர் கே.எல்.எம்.ரயீஸ், டாகடர் எம்.எம்.பாறூக், பள்ளிவாசல் தலைவர் டாகடர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவர் எஸ்.அப்துஸ் சமத் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்று முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கினர்.