மட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்துதல்..!

முகம்மது தம்பி மரைக்கார்-
ட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்துதல்' என்கிற ஒரு சொற்றொடர் வழக்கில் உள்ளது. கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதில் சொல்லப்படுவதை சுட்டிக்காட்டுவதற்கு, மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பதில் சொல்கின்றவர்கள் எல்லோரும், கேள்வியினை விளங்கிக் கொள்ளாதவர்கள் என்று அர்த்தமாகி விடாது. உரிய விடையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களும், தொடர்பற்ற பதில்களைச் சொல்வதுண்டு. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் உள்ளன. அண்மையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம், அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் 'மட்டக்களப்புக்கு' வழி கேட்டார். அதற்கு பதிலாக ரவூப் ஹக்கீம் 'கொட்டைப் பாக்கு', 'வெற்றிலை', 'சுண்ணாம்பு', 'புகையிலை'க்கெல்லாம் விலை சொல்லிக்கொண்டிருந்தார். கடைசிவரை, 'மட்டக்களப்புக்கு' மட்டும் 'வழி' சொல்லவேயில்லை.

சாந்தி இல்லமும், சர்ச்சைகளும்

'தாருஸ்ஸலாம்' என்கிற அறபுச் சொல்லுக்கு 'சாந்தி இல்லம்' என்று பொருளாகும். கொழும்பு - 02, வோக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடத்துக்கும் 'தாருஸ்ஸலாம்' என்றுதான் பெயர். 'சாந்தி இல்லம்' என்று பொருள்படும் பெயரைக் கொண்ட இந்தக் கட்டிடம் தொடர்பில், அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையொன்று எழுந்துள்ளமை குறித்து, கடந்த வாரங்களில் நாம் எழுதியிருந்தோம். முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகக் கட்டிடத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தனதும் தனக்கு விருப்பமான இன்றும் சிலரின் பெயர்களிலும் எழுதியெடுத்துக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கடிதமொன்றினை எழுதியிருந்தார். இந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. மு.காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் தனக்குள்ள சந்தேகங்களை, அந்தக் கடிதத்தில் பஷீர் - கேள்விகளாகப் பட்டியலிட்டிருந்தார். தாருஸ்ஸலாம் கட்டிடம் - கட்சியின் பெயரில் உள்ளதா, அல்லது வேறு யாரின் பெயரிலாவது எழுதப்பட்டுள்ளதா என்றும், குறித்த கடிதத்தில் அவர் கேட்டிருந்தார். ஆனாலும், பஷீரின் கடிதத்திலுள்ள எந்தவொரு கேள்விக்கும், தலைவர் ரவூப் ஹக்கீம் இதுவரை பதிலளிக்கவில்லை.

கண்டி - கட்டுக்கஸ்தோட்ட பிரதேசத்தில் கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஹக்கீம்ளூ தம்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்று கூறியதோடு, தாருஸ்ஸலாம் தொடர்பில் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை என்றும் தெரிவித்திருந்தார். அப்போதும் கூட, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலை வழங்க - ஹக்கீம் முயற்சிக்கவில்லை. இன்னொருபுறம், அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி முக்கியஸ்தர்களும், தாருஸ்ஸலாம் தொடர்பில் பதிலளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, தலைவர் ஹக்கீமுக்கு சுட்டிக்காட்டவில்லை. 

நம்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அது முடிகிற காரியமுமல்ல. அப்படி முயன்றால் அதுவே பின்னர் வாழ்க்கையாகிவிடும். ஆனாலும், எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் இப்படி ஒதுக்கிவிட முடியாது. சில குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்தே ஆக வேண்டும். மௌனம் காப்பது ஆபத்தானது. அதற்காக, பதில் அல்லாதவற்றினையெல்லாம் கூறுவது கூடாது. அப்படிச் செய்தால், அந்தச் செயற்பாடுகளே நம்மை குற்றவாளியாகக் காட்டத் தொடங்கிவிடும். மு.கா. தலைவரின் நிலை, கிட்;டத்தட்ட இப்படித்தான் மாறிப்போயிருக்கிறது. 

மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாமினுடைய உரித்து தொடர்பில் சந்தேகங்களையும் கேள்விகளையும் முன்வைத்து, பசீர் எழுதிய கடிதத்தை ஊடகங்களில் பலரும் படித்தனர். அந்தக் கடிதத்தினைப் படிக்கும் போது, தாருஸ்ஸலாம் கட்டிடத்தின் உரித்து என்கிற விவகாரத்தில், ஏதோ மர்மம் இருக்கிறது என்கிற எண்ணம் பலரிடமும் உருவாகியுள்ளது. அதிலும், கட்சித் தலைவரோடு மிக நெருக்கமாக இருந்தவரும், கட்சியின் தலைவருக்கு அடுத்த தரத்தையுடைய தவிசாளர் பதவியில் இருப்பவருமான பஷீர் சேகுதாவூத், உத்தியோகபூர்வமாக கடிதம் எழுதுமளவுக்கு நிலைமை பாரதூரமாகி விட்டிருப்பதால், அதில் ஏதும் விவகாரம் இல்லாமலிருக்க முடியாது என்கிற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

எனவே, தாருஸ்ஸலாம் தொடர்பில் கிளப்பி விடப்பட்டுள்ள சந்தேகங்களுக்கும், முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கும் மு.கா. தலைவர் ஹக்கீம் பதிலளித்தேயாக வேண்டும். ஏனெனில், அந்தக் கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கான நிதியின் ஒருபகுதி, மு.காங்கிரஸ் ஆதரவாளர்களிடமிருந்து உண்டியல் குலுக்கி நன்கொடையாகப் பெறப்பட்டதாகும். எனவே, தாருஸ்ஸலாமினுடைய உரித்து தொடர்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு ஹக்கீம் பதிலளிப்பதென்பது, பஷீர் சேகுதாவூத்துக்கு மட்டுமானதல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சமரசம்

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலியுடனும், தவிசாளர் பசீருடனும் தலைவர் ஹக்கீமுக்கு வெளிப்படையான மோதல் உருவானதையடுத்து, கட்சியுடனும் தலைவருடனும் தொடர்புபட்ட பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தாருஸ்ஸலாம் விவகாரமாகும்.

இந்த நிலையில், ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோருடன் முட்டி மோதி வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து மு.கா. தலைவர் ஹக்கீம் - காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். ஆனால், முன்னேற முடியவில்லை. சாண் ஏற முழம் சறிக்கியது. அதனால், இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்வதுதான், தன்னைக் காத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஹக்கீம் உணர்ந்துள்ளார். இதனையடுத்து மு.கா. செயலாளர் ஹசனலியிடம் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை ஹக்கீம் தூது அனுப்பினார். இதற்கிணங்க, அண்மையில் ஹசனலியை ஹாபிஸ் நசீர் சந்தித்தார். 'செயலாளர் பதவியிலிருந்து பிடுங்கியெடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்பவும் தருவதற்கு தலைவர் தயாராக உள்ளார்' என்கிற சேதியை ஹாபிஸ் நசீர் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. கட்சி அலுவலகத்துக்கு ஹசனலி வந்து, செயலாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் மீளவும் பெற்றுக்கொள்வதற்குரிய ஆவணங்களை தயாரிக்குமாறும், அந்த ஆவணங்களில் தலைவர் கையெழுத்திடுவார் என்றும் இதன்போது ஹாபிஸ் நசீர் கூறியதாக அறியமுடிகிறது.

ஹசனலியுடன் இவ்வாறானதொரு இணக்கத்துக்கு வர ஹக்கீம் தயாராகின்றமை குறித்து எல்லையற்ற கேள்விகள் உள்ளன. மு.கா.வின் சார்பில் தேர்தல் ஆணையாளருடன், அதிகாரமளிக்கப்பட்ட அதன் செயலாளர்தான் தொடர்புகளைப் பேணுவார். தேர்தலொன்றின் போது மு.காங்கிரசின் வேட்புமனுவில் அந்தக் கட்சியின் செயலாளர்தான் கையெழுத்திடுவார். ஆக, இத்தனை மோதல்களுக்குப் பின்னர், ஹசனலியிடம் இவ்வாறான அதிகாரங்களையெல்லாம் ஹக்கீம் ஒப்படைப்பாரா என்பதில் பாரிய கேள்விகள் உள்ளன. 

இன்னொருபுறம், செயலாளர் ஹசனலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோரின் கூட்டினை உடைப்பதற்காகவும், பசீர் சேகுதாவூத்தை தனிமைப்படுத்துவதற்காகவும், ஹசனலியுடன் சமரசம் செய்துகொள்ளும் முடிவினை ஹக்கீம் எடுக்கக் கூடும். ஆனால், அந்தத் தந்திரம் பலிப்பதற்கான சாத்தியம் குறைவாகவே தெரிகிறது. 

இதேவேளை, ஹசனலியுடன் சமரசம் செய்து கொள்வதற்குத் தயாராகவுள்ள மு.கா. தலைவர், அப்படியே - தவிசாளர் பசீருடனும் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஏன் ஈடுபடக் கூடாது என்கிறதொரு கேள்வி, வாசகர்களுக்கு இங்கு எழக்கூடும். பசீருடன் இணக்கப்பாடொன்றுக்கு வர ஹக்கீம் விரும்பினாலும், அவருடன் இப்போது நெருக்கமாக இருக்கும் சிலர், அதனை அனுமதிக்கப் மாட்டார்கள். ஒரு காலத்தில் ஹக்கீமிடம் பசீருக்கு இருந்த இடத்தை, தாங்கள் பிடித்துக் கொள்வதில், குறிப்பிட்ட சிலர் ஆர்வமாக உள்ளனர். அதனை நிறைவேற்றக் கிடைத்திருக்கும் 'பொன்னான' சந்தர்ப்பத்தை அந்த நபர்கள் இழக்க மாட்டார்கள்.

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, தன்னை பணயக்கைதியாக்கியவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வேறு சிலரிடம் - ஹக்கீம் தன்னை மீண்டும் பணயக் கைதியாக்கிக் கொண்டுள்ளாரா என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

முஸ்லிம் காங்கிரசுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான மோதல்களால், அந்தக் கட்சி மிக மோசமானதொரு பின்னடைவினை எதிர்கொண்டுள்ளது. அதனைச் சரி செய்யாது விட்டால், எதிர்வரும் தேர்தல்களில் இதன் விளைவுகளை மு.கா. நிச்சயம் சந்திக்கும்.

கட்சிக்குள் மிகவும் மோசமானதொரு பின்னடைவு உருவாகியிருப்பதை மு.கா. தலைவரும் அறிவார். ஆனால், அதைச் சரிசெய்வதற்காக ஹக்கீம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் கோமாளித்தனம் நிறைந்தவையாக இருக்கின்றன என்று, கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன. மு.காங்கிரசின் சின்னம் மரமாகும். எனவே, 'வீட்டுக்கு வீடு மரம்' என்கிறதொரு திட்டத்தினூடாக, கட்சியை மீளவும் கட்டியெழுப்பப் போவதாக ஹக்கீம் கூறுகின்றார். அதாவது, 'ஒவ்வொரு வீட்டுக்கும் முஸ்லிம் காங்கிரசின் தொண்டர்கள் சென்று, அங்கு மரமொன்றினை நட்டு, அதனைப் பராமரிப்பார்கள். இதன் மூலம் கட்சியை மீளவும் கட்டியெழுப்ப முடியும்' என்பது ஹக்கீமுடைய வாதமாகும். இதற்கிணங்க, நேற்றைய தினம் ஓகட்ஸ் முதலாம் திகதி, நாடளாவிய ரீதியில் 'வீட்டுக்கு வீடு மரம்' என்கிற திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது. மு.கா. தலைவரின் இந்த செயற்பாடானது, தலையில் பட்ட அடிக்கு, காலில் மருந்து பூசுவதற்கு ஒப்பானதாகும். மு.காங்கிரசின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினை சரிசெய்வதாயின், முதலில் தலைவர்களுக்கிடையிலான மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும். எனவே, அதற்கான சமசர நடவடிக்கைகள் இதயசுத்தியுடன் இடம்பெறுதல் அவசியமாகும். ஆனால், அதனையெல்லாம் செய்யாமல், கட்சியை பின்னடைவிலிருந்து காப்பாற்றுவதற்காக, வீட்டுக்கு வீடு மரம் நடுவதென்பது கோமாளித்தனமன்றி வேறு என்னவாக இருக்க முடியும். 

மாடேறி மிதித்த கதை

முஸ்லிம் காங்கிரசின் 'தலை'களுக்கிடையிலான மோதல்களால் அந்தக் கட்சிக்குள் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகியுள்ள நிலையில், மு.காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியிலும் நடந்து கொண்டிருக்கும் வேறு சில விடயங்கள் - அந்தக் கட்சியை இன்னும் கஷ்ட நிலைக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் காங்கிரசின் ஒரு பிரிவான - இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் வகித்து வந்த - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவி, அவரிடமிருந்து அண்மையில் பறிக்கப்பட்டது. இந்த சம்பவமானது, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலையினை மு.கா.வுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஆரிப் சம்சுதீன் - முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் - அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது, ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது. இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஆரிப் சம்சுதீன் - வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு - முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆதரவு வழங்கினார். இது ஆரிப் சம்சுதீனுக்குப் பிடிக்கவில்லை. அவர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆரவு வழங்கத் தீர்மானித்தார். இதனால், மைத்திரிக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரசுடன் ஆரிப் சம்சுதீன் இணைந்து கொண்டார். இதனையடுத்து, ஆரிப் சம்சுதீனுக்கு இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியது. ஆரிப் சம்சுதீன் - முஸ்லிம் காங்கிரஸ்காரரானார்.

மாகாணசபைத் தேர்தலொன்றில் போட்டியிட்டு, குறித்த சபைக்குத் தெரிவாகும் நபரொருவர், அவர் போட்டியிட்ட கட்சியிலிருந்து விலகிக்கொண்டால் அல்லது விலக்கப்பட்டால், குறித்த கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக - அவருடைய மாகாணசபை உறுப்பினர் பதவியினை வறிதாக்க முடியும். அந்த வகையில், ஐ.ம.சு.முன்னணியிலிருந்து ஆரிப் சம்சுதீனை விலக்கியுள்ளதாக, அந்த முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர - கிழக்கு மாகாணசபைக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் அண்மையில் எழுத்து மூலம் அறிவித்திருந்தார். மேலும், ஆரிப் சம்சுதீனின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியினை வறிதாக்குமாறும் இதன்போது மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, ஆரிப் சம்சுதீனின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளதாக, அவருக்கு - கிழக்கு மாகாணசபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்த விடயமானது மு.கா.வுக்குப் பாரியதொரு அடியாகும். ஆரிப் சம்சுதீனின் மாகாணசபை உறுப்பினர் பதவி, சட்ட ரீதியாக வறிதாக்கப்படக் கூடிய நிலையொன்று இருப்பது குறித்து, ஆரிப் சம்சுதீன் அறிவார். ஆரிப் சம்சுதீன் ஒரு சட்டத்தரணியென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ஆபத்துத் தொடர்பில், மு.கா. தலைவரிடம் ஆரிப் சம்சுதீன் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தார். ஆயினும், இதுகுறித்து பயப்படத் தேவையில்iலை என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் ஆறுதல் கூறினார். ஐ.ம.சு.முன்னணியின் தலைவர் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதாலும், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தாம் உழைத்தவர்கள் என்பதாலும், ஆரிப் சம்சுதீனுக்கு எதிராக ஐ.ம.சு.முன்னணி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை, ஜனாதிபதியிடம் சொல்லி தவிர்க்க முடியும் என்று, ஆரிப் சம்சுதீனை ஹக்கீம் நம்ப வைத்தார். ஆரிப் சம்சுதீனும் ஹக்கீமுடைய கதையை மலைபோல் நம்பினார்.

இந்த நிலையில்தான் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியுடன், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காஙகிரஸ் கட்சி - அண்மையில் பங்காளியாக இணைந்து கொண்டது. இதன் பின்னர்தான், ஆரிப் சம்சுதீனுடைய மாகாணசபை உறுப்பினர் பதவியை வறிதாக்கும் முடிவினை ஐ.ம.சு.முன்னணி எடுத்தது.

ஆயினும், தனது மாகாணசபை உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டமைக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்போகிறேன் என்று - ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார். அப்படியொரு வழக்கினை தாக்கல் செய்தாலும், அதன் முடிவு தனக்குச் சாதகமாக அமையாது என்பதை, ஒரு சட்டத்தரணியாக ஆரிப் சம்சுதீன் மிக நன்றாக அறிவார். கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான 2016ஆம் ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கீடு, இன்னும் உறுப்பினர்களின் கைகளுக்கு வந்து சேரவில்லை. அத்தோடு, கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் நிறைவடைவதற்கும் ஒரு வருடம்தான் எஞ்சியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், தனக்கான நிதியொதுக்கீட்டினைப் பெற்றெடுத்துக்கொள்ள, ஆரிப் சம்சுதீனுக்கு சிறிது காலம் தேவையாக இருக்கிறது. அவர் தாக்கல் செய்யப்போகும் வழக்கு, அந்த வகையில் - அவருக்கு உதவக்கூடும்.

பலமடையும் குதிரை 

இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு வரையிலும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, மீளவும் அரசியல் ரீதியாகப் பலமடையத் தொடங்கியுள்ளார். அவரின் குதிரைச் சின்னத்தைக் கொண்ட தேசிய காங்கிரஸ் கட்சி, மீண்டும் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியுடன், அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் - பங்காளியாக இணைந்து கொண்டதன் பின்னர்தான் இந்த நிலை உருவாகியுள்ளது. 

இதனையடுத்து, அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பைக்கு அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சிறிது நாட்களின் பின்னர் கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராகவும் உதுமாலெப்பை நியமிக்கப்பட்டார். இந்த நிலைவரம் மு.கா.வுக்கு கவலையளிப்பதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், கிழக்கு மாகாணசபையிலே இரண்டு தடவை உதுமாலெப்பை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சுப் பதவியை இழந்த உதுமாலெப்பைக்கு மீளவும் அதிகாரங்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன. 

இந்த நிலையில், மு.காங்கிரசுக்கு வசந்த காலம் பிறந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி கூறிவருகின்றார். ஆனால், அந்தக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்து கொண்டிருக்கின்றவற்றை கவனிக்கும்போது, மு.கா.வுக்கு இது - இலையுதிர் காலம் போலவே தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -