மோசடி விவகாரம் : ஜனாதிபதிக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவசரக் கடிதம்


கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், கடந்த ஒரு வருடமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 2010 ஜனவரி 10 ஆம் திகதி தொடக்கம் 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த ஆணைக்குழு, தனது விசாரணைகளை நடாத்தி வருகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் சதொச நிறுவனம், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின், அமைச்சுக்குக் கீழ் வருவதனால், இது தொடர்பில் அமைச்சரின் கருத்தை அறிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அழைப்புக் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளது.

எனினும் நேற்று 19 ஆம் திகதி, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச என்பவரால் கையெழுத்திடப்பட்ட அழைப்புக் கடிதம், நேற்று வெள்ளிக்கிழமை மாலையே அமைச்சரின் கைக்குக் கிடைக்கப் பெற்றது. ஆனால், இதற்கு முன்னைய தினம் (வியாழக்கிழமை 18 ஆம் திகதி) பத்திரிகை நிறுவனங்களுக்கு, அமைச்சர் மீது அபாண்டங்களை சுமத்தி, அழைக்கப்பட்ட நோக்கம் திரிவுபடுத்தப்பட்டு, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், தலைப்புச் செய்திகளாக பல ஊடகங்களில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) எழுதப்பட்டுள்ளது.

இதே பொய்யான செய்தி கடந்த 14 ஆம் திகதி வெளிவந்த லங்கா தீப பத்திரிகையிலும், பெரிதுபடுத்தப்பட்டு எழுதப்பட்டிருந்தது.

அமைச்சரின் அரசியல் எதிரிகள், இந்த இனவாத ஊடகங்களினூடாக, ஆணைக்குழுவின் அழைப்பு தொடர்பிலான திரிவுபடுத்தப்பட்ட அவதூறான செய்தியுடன், இந்தக் கடிதம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கையொப்பமிடுவதற்கு முன்னரே, அழைப்புத் திகதியும் எவ்வாறு ஆணைக்குழுவிலிருந்து ஊடகங்களுக்குச் சென்றடைந்தது என்பது குறித்து, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -