இந்திய பிரதமரான மோடி அணிந்த விலையுயர்ந்த உடை தற்போது வரலாறு காணாத வகையில் 4.31 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது மட்டுமின்றி கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்க இழைகளால் நெய்யப்பட்டு பிரதமர் மோடியின் பெயர் பொறிக்கப்பட்ட அந்த உடையை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா பயணத்தின்போது மோடி அணிந்தது தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
மேலும், மோடி உடுத்திய அந்த விலையுயர்ந்த ஆடை ஏலம் விடப்பட்டு அப்பணம் பொதுப்பணிக்காக பயன்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் கடந்தாண்டு தெரிவித்தது.இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் அந்த ஆடை கடந்தாண்டு பெப்ரவரி 20ம் திகதி ஏலம் விடப்பட்டது.
சூரத் நகரை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரியான லால்ஜிபாய் பட்டேல் என்பவர் ரூ.4.31 கோடிக்கு வாங்கியுள்ளார். இதுமட்டுமில்லாமல், மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் அவருக்கு கிடைத்த சுமார் 400 பரிசு பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டது. மேலும், இத்தொகை முழுவதும் கங்கையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
இந்நிலையில், இதுவரை அதிக விலைக்கு விற்பனையான ஆடைகளில் பிரதமர் மோடி அணிந்திருந்த அந்த ஆடை கின்னஸ் புத்தகத்தில் இடன்பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.