யாழ் பல்கலைக்கழக சம்பவம் - சிங்கள மாணவர்கள் மத்தியில் பாரிய அச்சம்

நீண்டகால குழப்பங்களின் பின்னர் நாட்டில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பலமான நல்லிணக்க பயணத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளை தமிழ், சிங்கள இனவாதிகள் தடுக்கக்கூடாது என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரே தெரிவித்தார். 

யாழ். பல்கலைக்கழக சம்பவத்தை அடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் பாரிய அச்சம் நிலவுகின்றது. மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரே கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

மூன்று தசாப்தகாலம் நாட்டில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் இப்போது அவை அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து இன்று நல்லிணக்கம் ஒன்றை பலமாக உருவாக்க முயற்சித்து வருகின்றோம். நாட்டில் நல்லிணக்கம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையான தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. இதேபோல் இனவாதமும் இல்லாமல் இல்லை. தெற்கில் சிங்கள மக்களை குழப்பவும், வடக்கில் தமிழ் மக்களை குழப்பவும் ஒருசில குழுக்கள் உள்ளன. அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் ஊடகங்கள் மிகச்சரியான பங்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். 

எனினும் ஒருசில ஊடகங்கள் எனது கருத்துக்களை இனவாதமாக மாற்றி பிரசுரித்து வருகின்றன . இது சிங்கள ஊடகங்களில் மட்டும் அல்லது தமிழ் ஊடகங்களிலும் உள்ளன. இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் செல்லும் போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. 

நயினைதீவில் பெளத்த சிலை உருவாக்குவதிலும் எனது பங்களிப்பு அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். இந்த நடவடிக்கைகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் என்னை தவறான வகையில் சித்தரித்து வருகின்றனர். நான் இனவாதி அல்ல. நான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றேன். அத்துடன் இன்று நாம் பலமான நல்லிணக்க பயணத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளை தமிழ், சிங்கள இனவாதிகள் தடுக்க வேண்டாம். 

யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் இப்போது பல்கலைக்கழக உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புபட்டதாக மாணவர் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிசாரின் எதிர்ப்பின் மத்தியிலும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் சிங்கள மாணவர்கள் இன்றும் அச்சத்தில் தான் உள்ளனர். ஆகவே அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இனவாத அரசியல் விமர்சனங்களை பெரிது படுத்தாது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும். யாருடைய மத நிகழ்வாக இருப்பினும் எந்த பகுதியிலும் அவற்றை நடத்த இடமளிக்க வேண்டும். சகல மக்களுக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டும். மக்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட எந்த நகர்வும் இல்லை என்றே நான் நம்புகின்றேன். மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் தான் இந்த மோதலுக்கு காரணமாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -