வட, கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும் முஸ்லிம் மக்களின் பொறுப்பும் - அ.அஸ்மின்

“வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்ற அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தொடர்தேர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இதுவரை தீர்க்கமான எவ்வித பதில்களும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் பூரண உடன்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவிற்கு முன்னதாக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.

எனினும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வடக்குக் கிழக்கு இணைவு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்மறையாக நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது, அத்தோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்ற அச்சமும் சமூகவலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மேற்படி விடயத்தை மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் கருத்தாடவும் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

இந்த விடயம் இரு சமூகங்கள் சார்ந்த விடயமாகும். வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவெறுமனே நிலங்களுக்கிடையிலான இணைப்பு சார்ந்த விடயமல்ல; இரு சமூகங்களின் இணைவு சார்ந்த விடயம். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே நிலத்தில் வளங்களையும் வாழ்வையும் பகிர்ந்து வாழ்கின்ற சமூகங்களாகும். எனவே இங்கு இரண்டு சமூகங்களினதும் நல்லிணக்கமும், சகவாழ்வும் எல்லா விடயங்களைவிடவும் முக்கியத்துவமானதாகும். ஒரு சமூகம் அடுத்த சமூகத்தின் மீது நிரந்தரமான கோபத்தோடும், முரண்பாடுகளுடனும் வாழ்கின்ற சூழல் ஏற்படுமிடத்து குறித்த பிரதேசத்தின் நிரந்தர அமைதி முற்றாக கேள்விக்குள்ளாக்கப்படும். இலங்கை சமூகங்களிடையே இனத்துவ ரீதியான முரண்பாடுகள் எளிதாக கூர்மையடையக்கூடிய சமூக நிலையே காணப்படுகின்றது. எனவே இவ்விடயத்தில் தூரநோக்கோடு செயற்படுதல் அத்தியாவசியமானது. 

அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய கௌரவ.இரா.சம்பந்தன் அவர்களோடு வடக்குக் கிழக்கு இணைப்பு தொடர்பில் அவரிடம் இருக்கும் நியாயங்களைக் கேட்டறியும் ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது, அவற்றை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வது சிறப்பானது என்று கருதுகின்றேன். இவை என்னுடைய நிலைப்பாடுகளோ அல்லது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிலைபாடுகளோ அல்ல என்பதை குறிப்பாக சொல்லிக்கொள்கின்றேன். ஆனால் தமிழ்த் தலைவர்கள் இதனை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை எமது மக்களும் தலைவர்களும் அறிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாக மாத்திரமே இதனை நான் நோக்குகின்றேன்.

வடக்குக் கிழக்கு இணைப்போ அல்லது பிரிவோ சட்டரீதியானதல்ல, அது இயற்கையானது; காலனித்துவ ஆதிக்கம் எமது தேசத்தில் ஏற்படுவதற்கு முன்னர் எமது தேசம் 3 பிரிவுகளாக ஆட்சி செய்யப்பட்டமை எல்லோரும் அறிந்திருக்கும் வரலாறாகும். 1829 களில் கோல்புரூக்- கமரூன் அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கை 5 மாகாணங்களாகப் பிரித்து நிர்வாக ஒழுங்குகளை முன்வைத்தார்கள், வடக்கு, கிழக்கு, மத்திய, தென், மேல் ஆகிய 5 மாகாணங்களே அவையாகும். 1845ல் வடமேல் மாகாணமும், 1873ல் வட மத்திய மாகாணமும் 1886ல் ஊவா மாகாணமும், 1889ல் சபரகமுவ மாகாணமும் நிறுவப்பட்டன. இவை அனைத்தையும் காலணித்துவ ஆட்சியாளர்கள் தங்களுடைய நிர்வாக மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காகவே ஒழுங்கமைத்தார்கள். அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, வரலாறு, அபிலாஷைகள், மக்களுடைய உறவுமுறைகள் போன்றவிடயங்களை அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கவில்லை. 

வடக்குக் கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையானது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே முன்வைக்கப்பட்டுவரும் ஒரு கோரிக்கையாகும். பிரித்தானியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தமிழ் மக்களின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்கள். 1948 வரை இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1948களுக்குப் பின்னரே இதன் உண்மையான தாக்கங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருந்தது. பல்லினசமூகங்கள் வாழ்கின்ற தேசமொன்றில் ஒரு இனம் எண்ணிக்கையிலும் அதிகாரத்திலும் பலம் மிக்கதாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது இயல்பானதொன்றாகிவிட்டது. அந்தவகையில் 1948ம் ஆண்டு வடக்குக் கிழக்கில் சிங்கள மக்களின் சனத்தொகை 0.5% ஆகக் காணப்பட்டது. பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் 1956களில் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தின் சிங்கள மக்களுடைய சனத்தொகை 9%மாக இருந்தது, 1965களில் 13%மாகும். 1981ம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சிங்கள மக்களின் சனத்தொகையானது 25%மாக அதிகரித்திருந்தது. இது எப்படி நிகழ்ந்தது? அவர்களுக்கு எமது மக்களுக்கு உரிய வளங்களையும் நிலங்களையும் வழங்கியே இக்குடியேற்றங்களும் குடித்தொகை அதிகரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1948-1981வரையான காலப் பகுதியில் நாட்டினுடைய சிங்கள மக்களுடைய சனத்தொகையானது 238%மாக அதிகரித்தது; அதே சிங்கள மக்களின் சனத்தொகை வடக்கு கிழக்கு மாகாணங்களில் 885% அதிகரிப்பைக் காட்டி நிற்கின்றது.

இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும். இந்நிலை தொடருமாக இருந்தால் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் தம்முடைய நிலங்களை இழந்து, காலப்போக்கில் எமது நிலத்திலே சிறைவைக்கப்படுகின்ற நிலை தோன்றமுடியும். எனவே வடக்குக் கிழக்கு இணைப்பைக் கோருவதில் மிகப்பிரதானமான காரணியாக “நிலத்தைப் பாதுகாத்தல்” என்ற விடயம் இருக்கின்றது.

இந்த ஆபத்தை முன்னைய தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் நன்கு உணர்ந்திருந்தார்கள்; 1956 களில் கிழித்தெறியப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும் என்ற விடயத்தில் உடன்பாடுகள் காணப்பட்டிருந்தன. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திலே வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுதல் என்ற விடயம் காணப்படுகின்றது. இதனை நாம் தமிழ் மக்களுடைய அபிலாஷையாக மாத்திரம் நிறைவேற்றியிருக்கவில்லை, மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இதுவிடயத்தில் பல சுற்றுப் பேச்சுக்களை எம்மோடு நடாத்தியிருந்தார், அதன் விளைவாக அவர் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்.

1987 வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. 4 நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுடைய காலங்களில் அதனைப் பிரிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களும் முயற்சிக்கவில்லை. சிங்கள கடும்போக்காளர்கள் முன்வைத்த வழக்கொன்றின் மூலம் வடக்குக் கிழக்கு இணைப்பில் நடைமுறை ரீதியான தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி முன்னைய நாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா அவர்கள் வழங்கிய தீர்ப்பொன்றின் மூலமே அது பிரிக்கப்பட்டது. இது மக்கள் அபிப்பராயத்திற்கு முரணானது என்பதை நான் பாராளுமன்றத்திலே சுட்டிக்காட்டியிருந்தேன்

நிலத்தொடர்பற்ற மாநிலம், தென்கிழக்கு அழகு, இணைந்த வடக்குக்கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு போன்ற விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன; தமிழ்த் தலைவர்கள் அண்ணன் அமிர்தலிங்கள், சிவசிதம்பரம் போன்றவர்கள் வடக்கு கிழக்கு விடயத்தில் முஸ்லிம் மக்களை உள்வாங்கும் விடயத்தில் எந்த எல்லைக்கும் போவதற்கு தயாராக இருந்தார்கள். இது எங்களுடைய அரசியல் நிலைப்பாடாகும். தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம் மக்களை ஒரு தேசியமாக ஏற்றுக்கொண்டு அங்கீகரித்திருந்தார்கள்.

2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் முஸ்லிம் காங்கிரஸை எம்மோடு இணையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்தோம். முதலமைச்சர் பதவியைத் தருகின்றோம் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தோம். ஆனால் இறுதி நேரத்தில் ஹக்கீம் அவர்கள் அதனைக் கைவிட்டுவிட்டார். ஐ,ம,சு.கூட்டமைப்பு 14 ஆசனங்கள், த.தே.கூ 11 ஆசனங்கள், முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள், தேசிய சுதந்திர முன்னணி 01 ஆசனம். த.தே.கூ வோடு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இணைநிதிருந்தால் 22 ஆசனங்களோடு ஆட்சி அமைத்திருக்க முடியும், ஆனால் மஹிந்தவோடு இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சியை 21 ஆசனங்களோடு முதலமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுத்து மஹிந்தவோடு இணைந்து ஹக்கீம் ஆட்சி அமைத்தார்.

2015ல் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பில் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் எங்களோடு வந்து பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அவர்களோடு இணைந்து ஆட்சியமைக்கும்படி எம்மை அழைத்தார்கள்; இங்கு எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை; முஸ்லிம் மக்களோடு இணையாத ஆட்சியை எம்மால் கிழக்கில் அமைக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து அவர்களுடைய அழைப்பை நாங்கள் நிராகரித்தோம். இப்போது இருக்கின்ற கிழக்கு மாகாண ஆளும் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களை, ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஒரு சிலரும் இருக்கின்றோம். எங்களிடத்திலேயே பொரும்பான்மை இருக்கின்றது; ஆனால் நாங்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுக்கொடுத்திருக்கின்றோம். முஸ்லிம் காங்கிரஸை பழிதீர்க்க வேண்டும் என்று நாடியிருந்தால் இதனைவிட நல்ல சந்தர்ப்பம் எதுவுமில்லை. ஆனால் நாங்கள் முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட்டு கிழக்கில் ஆட்சியமைக்க விரும்பவில்லை. இதுவே எம்முடைய அரசியல் நிலைப்பாடு.

வடக்குக் கிழக்கு இணையுமாக இருந்தால் ஒரு நன்கு படித்த பண்புள்ள நடுநிலையாக நீதமாகச் செயற்படக்கூடிய ஒரு முஸ்லிமை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்; முஸ்லிம் மக்களுக்கு எங்களோடு இணைந்து செயற்படுவதில் நம்பிக்கையீனங்கள் இருக்குமாக இருந்தால் அவற்றை தெளிவுபடுத்தி எழுத்து மூலமான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளமுடியும். ஒரு தமிழர் முதலமைச்சராக இருந்தால் ஒரு முஸ்லிம் துணை முதலமச்சரை நாம் நியமிக்க முடியும்; ஒரு முஸ்லிம் முதலமைச்சராக இருந்தால் ஒரு தமிழரை நாம் துணை முதலமைச்சராக ஏற்படுத்த முடியும். நிர்வாக ரீதியான விடயங்களில் பல்வேறு ஒழுங்குமுறைகளை எம்மால் ஏற்படுத்த முடியும். இவை பேசப்படவேண்டிய விடயங்களாகும்.

வடக்கு கிழக்கு விடயத்தில் நான் இவ்வளவு உறுதியாக இருப்பதற்கு எனக்கு முன்னால் பல காரணிகள் கிடையாது. எனக்கு முன்னால் இருப்பது ஒரேயொரு நியாயமாகும் ; “பல்லின சமூகங்கள் பூகோளரீதியில் பரந்து வாழ்கின்றபோது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒரு சமூகத்தின் ஆதிக்கம் நிலவுகின்றபோது அதனைச் சமப்படுத்துகின்ற இன்னுமொரு சமூக ஆதிக்கம் இன்னுமொரு நிலப்பரப்பில் அவசியப்படுகின்றது. அதுவே அமைதியை சமாதானத்தை, சகவாழ்வை உறுதிசெய்யும். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்தோடு இணைந்திருந்தால் எமது பிராந்தியத்தில் ஒரு பலமான சக்தியாக நாம் ஒருமித்து இருந்தால்; அது இந்த நாட்டிலே ஏனைய பிரதேசங்களிலே வாழ்கின்ற எமது சிறுபான்மை மக்களுக்கு ஒரு பலமாகவும் பாதுகாப்பாகவும் அமையும்; எம்முடைய மக்களுக்கும் அது நன்மையாக அமையும்” இதை விடுத்து வேறு எந்த நியாயங்களை நான் முன்னிறுத்த விரும்பவில்லை.

அமையவிருக்கின்ற அரசியலமைப்பின் ஊடாக இதனை மேற்கொள்வதனையே நான் விரும்புகின்றேன். அதற்கான ஏதுநிலைகளை நாமே ஏற்படுத்த வேண்டும். இது புதிய விடயம் அல்ல, ஏற்கெனவே பேசப்பட்டு உடன்பாடுகள் எட்டப்பட்ட விடயமாகும்; இதனைத் தள்ளிப்போடுவது தீர்வுத்திட்டத்தின் முழுமையைப் பாதிக்கும். எது எவ்வாறாயினும் அமையவிருக்கின்ற அரசியல் யாப்பில் “நிலத்தொடர்புள்ள இரண்டு மாகாணங்கள் தமக்கிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் இணைய முடியும் என்ற விடயம் உள்ளடக்கப்படும்”. அதன் மூலம் இணைவதற்கான வாய்ப்பை நாம் உறுதி செய்ய முடியும். முஸ்லிம் தலைவர்களோடு இதுவிடயமாக நாம் பேசவுள்ளோம்.

வடகிழக்கிற்கு வெளியில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் (முஸ்லிம்கள், தமிழர்கள், இந்தியத் தமிழர்கள்) சிங்களப் பெறும்பான்மையினரோடு வாழ்கின்றார்கள். அவர்கள் சம அந்தஸ்த்தோடும், எல்லா விடயங்களையும் சம அளவில் பகிர்ந்து வாழ்கின்றார்களா என்ற கேள்விக்கும் நாம் விடைதேடும்போது வடக்குக் கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பலமான அமைப்பு பல்வேறு வழிகளிலும் இதுவிடயத்தில் உதவி செய்யும் என்று நம்புகின்றேன். என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய கௌரவ.இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் மாற்றுக் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கின்ற முஸ்லிம் மக்கள் தம்முடைய நியாயங்களை வெளிப்படையாகவும் தெளிவாகவும் முன்வைக்கவேண்டும். அது இரண்டு சமூகத்தளங்களிலும் கருத்தாடலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

எது எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கு இணைவும் பிரிவும் அங்கு வாழ்கின்ற அனைத்து மக்களின் உடன்பாட்டுடனேயே இடம்பெறவேண்டும். இதனையே வடக்கு மாகாணசபையின் அரசியலமைப்பு முன்மொழிவில் உள்ளடக்கவேண்டும் என்றும் நான் கோரியிருந்தேன்; இவ்விடயம் உள்ளடக்கப்படாதவிடத்து என்னுடைய ஆதரவு மேற்படி அரசியலமைப்பு மீதான வடக்கு மாகாணசபையின் ஆலோசனைகள் விடயத்தில் இருக்காது என்றும் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கு மாகாண தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்தே மேற்படி விடயத்தில் ஒருமித்துத் தீர்மானத்தைப் பெறவேண்டும் என்பது எம்முடைய எதிர்பார்ப்பாகும். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -