எம்.ஏ.றமீஸ்-
அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தான் எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை எட்டிப் பிடிக்க நினைப்பது கனவிலும் கூட முடியாத காரியமாகும். அவ்வாறு அவர் இனிமேல் பாராளுமன்றம் செல்ல வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று இளைஞர் செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம் அக்கரைப்பற்று மாநகர சபையின் நீர்த்தடாகப் பூங்கா விடுதியில் இடம்பெற்றது. இதன்போது பிரதம பங்கேற்பாளாராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த மஹிந்த ராஜபக்ஷவின் சால்வையில் தொங்கிக் கொண்டு இறுதி வரை அவருடன் இருந்த அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது சுயநலத்திற்காக தற்போது நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார். முஸ்லிம்களுக்கு பல்வேறான இன்னல்களும் கொடுமைகளும் இழைக்கப்பட்டபோது வாய்மூடி மௌனியாக மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த இவர் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றி பெறுவார் என கனவு கண்டு கொண்டிருந்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியினை குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் இக்கட்சியினை வைத்துக் கொண்டு இதன் மூலம் தான் நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை எட்டிப்பிடிக்க முடியாதது. இனிமேல் அப்பதவியானது அவருக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். அவர் இனி வரும் காலங்களில் பாராளுமன்றம் செல்ல வேண்டுமாக இருந்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் தேசிய கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்.
தேசிய காங்கிஸரஸ் கட்சியின் தலைவர் அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வாராக இருந்தால் நாம் விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்யவுள்ளோம். மக்கள் ஆதரவு பெறவேண்டுமானால் இவர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்கள் பேரியக்கத்தில் இணைகின்ற போதுதான் மக்கள் இவரை இனி ஆதரிப்பார்கள் இல்லாது போனால் அடிபட்ட மின்குமிழைப் போல் இவர் ஆகிவிடுவார். என்றும் ஒளிர முடியாமல் பிரகாரமற்று மறைந்து விடுவார்.
மக்களுக்கும் நமது முஸ்லிம் சமூகத்திற்கும் பல்வேறான நன்மைகளைப் புரிந்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் யார் வேண்டுமாக இருந்தாலும் இணைந்து கொள்ளலாம். அதற்காக நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளத் தயாரா இருக்கின்றோம். முஸ்லிம் காங்கிரஸின் கதவுகள் என்றுமே திறந்தே இருக்கும் யாரும் அஞ்சாமல் இதற்குள் உள் நுழைய முடியும் என்றார்.