இனவாதத்தை தோற்கடித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத செயற்பாடுகள் குறித்து பல வாக்குறுதிகளை வழங்கினோம். அவை நிறைவேற்றப்பட வேண்டுடிய தேவை தற்போது எழுந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கடந்த திங்கட் கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை குறித்து ஆராயும் அந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, முற்போக்கு தமிழ் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அங்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிற்கு பின்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் சகவாழ்வை ஏற்படுத்துக்கும் நல்லதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மஹிந்த அரசாங்கம் அதனை தவறவிட்டது.
அத்துடன் கடந்த ஆட்சியில் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் மேலெழுந்தன. இவற்றை கட்டுப்படுத்தாத மஹிந்த அரசு அவர்களை போசித்தது. இதன் காரணமாக சிறுபான்மையினர் மஹிந்த அரசை வெறுக்க ஆரம்பித்தனர்.
அத்துடன் மனிதநேயமிக்க பெரும்பான்மையினப் பௌத்த மக்களும் இனவாத செயற்பாடுகளை விரும்பவில்லை. இதனால் அந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என நாட்டு மக்கள் விரும்பினர். இதற்கமைய 2015 ஜனாதிபதி தேர்தலில் எமக்கு மக்கள் வாக்களித்தனர்.
நாம் அந்த தேர்தலில் பல வாக்குறுதிகளை வழங்கினோம். இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்த எமது வாக்குறுதி முக்கிய இடத்தை வகித்தது.
குறிப்பாக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோத மனப்பான்மையை தோற்றுவித்தல், மற்றும் மதத்தலைவர்களை நிந்திக்கும் வகையில் செயற்படுவதை தடுப்பதற்கான சட்டமூலம் அமைப்பது பற்றிபேசினோம். அத்துடன், மத ஸ்தாபனங்களை பாதுகாக்காக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தோம்.
எமது பிரச்சாரங்களில் இவற்றை முதன்மைப்படுத்தி பேசியதனால் மக்கள் எமக்கு வாக்களித்தனர். அதற்கமைய இனவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டிய அவசர தேவை தற்போது எழுந்துள்ளது.
ஏனெனில் நல்லாட்சியில் மீண்டும் இனவாதிகளின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் மீண்டும் மதங்களை நிந்திக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. இதனை உடனடியாக கட்டுப்படுத்தி நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றார்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படும். அத்துடன் நாட்டின் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
எமது ஆட்சியில் எந்தவொரு மதமும் பாதிக்கப்படுவதனை நாம் விரும்பவில்லை. எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்றார்.
இதேவேளை, தற்போது முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்டுவரும் காழ்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார்.