இன,மத பேதமின்றி அவர் பணியாற்றியதனால் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். 03 மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த போதும் ஆங்கிலத்திலும்,சிங்களத்திலும் அடுக்கு மொழியில் பேசும் நாவன்மை கொண்டிருந்ததினால், அனைத்தின மக்களிடமும் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றவர்.
அலவி மௌலான அவர்கள் தனது அரசியல் பணியை தொழிற்சங்கவாதியாக ஆரமபித்து தொழிலாளர்களின் உரிமைக்காகவும், இனங்களுக்கிடையில் பலமான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் பல தசாப்தங்களாக பாடுபட்ட தலைசிறந்த மூத்த அரசியல் தலைவர்.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்றவர். அவர் முஸ்லிம் சமூகத்துக்காக ஆற்றிய சேவைகள் ஒருபோதும் மறக்க முடியாதவை.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, இறைவன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தை வழங்குவானாக எனவும் பிரார்த்திக்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்