ஜெம்சாத் இக்பால்-
யுத்த காலப்பகுதியில் புல்மோட்டை முஸ்லிம் மையவாடியில் எலும்புக்கூட தோன்றிய சம்பவம் தொடர்பில் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து உடனடியாக கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் புல்மோட்டை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு அப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைப் பெற்றுத்தந்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் தெரிவித்தார்.
புல்மோட்டை பிரதேசத்தில் 450 குடும்பங்குக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (17) புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் புல்மோட்டை மக்களுக்கு முள்ள தொடர்பு மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவருடைய காலம் தொடக்கம் தற்போதைய தலைவவருடைய காலம் வரை சிறப்பாகவுள்ளது. இப்பிரதேசத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் என்னவென்று அறிந்து அதை தலைவரூடாக நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.
யுத்த காலத்தில் புல்மோட்டை முஸ்லிம் மையவாடியில் எலும்புக்கூட தோன்றிய சம்பவம் தொடர்பில் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து உடனடியாக கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் புல்மோட்டை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு அப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தமை நீங்கள் அறிவீர்கள்.
தற்பொழுது மாற்றுக் கட்சிக்காரர்கள் கேட்கின்றார்கள் உங்களுடைய தலைவர் என்ன செய்திருக்கின்றார், உங்களுடைய கட்சி என்ன செய்திருக்கின்றது என கேள்வி கேட்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
2001ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக்கு மாத்திரம் சுமார் 150ற்கும் மேற்பட்ட நியமனங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். அதுமாத்திரமல்ல எங்களுடைய தலைவரும் கூட இப்பகுதியிலுள்ள கூட்டுத்தாபனத்தில் கூட இளைஞர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளார். தற்பொழுது மாற்றுக் கட்சிக்காரர்கள் 5 நியமனங்களை வழங்கிவிட்டு நாங்கள்தான் நியமனம் வழங்கியுள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைவர் உட்பட உறுப்பினர்கள் கூட இப்பிரதேச இளைஞர்களுக்கு நியமனங்களை வழங்கி புல்மோட்டையை கௌரவித்தனர் என்பதை இங்கு சட்டிக்காட்ட வேண்டும்.
எனவே தொடர்ந்து புல்மோட்டை பிரதேசத்திற்கு மீதமாகவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறப்படுத்தி தருவதாகவும் இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோன்று தான் புல்மோட்டை பிரதேசத்தில் 450 குடும்பங்குக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு இச்சந்தர்பத்தை வழங்கிய எமது தலைவருக்கும், இந்நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி லாஹிர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முபாரக், முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர், சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ், அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் நிதா நிறுவனத்தின் பொறுப்பாளர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.