கிழக்கு முதல்வர் தவறிழைத்து விட்டார் என்பது உண்மைக்கு புறம்பானது



அப்துல் கபூர் ஆதம்
சிறுபான்மை அரசியல் தலைமைகள் பல்லின சமுகம் வாழ்கின்ற நாட்டில் பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். வட கிழக்கு முதலமைச்சர்களோடு ஆளுனர்கள் முரண்படுவது நல்லாட்சிக்கு பகையாகும், மாகாண அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனும் கருத்து சம்பூர் சம்பவம் வலுச்சேர்க்கின்றது
டந்த 20.05.2016 அன்று சம்பூர் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து கிழக்கு முதலமைச்சர் தவறிழைத்து விட்டார் எனும் தோரணையில் கருத்துக்கள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்ட முறை மற்றும் அழைக்கப்பட்டிருந்த அதீதிகள் நிகழ்வை நடாத்திய குழு அதீதிகளின் நெறிமுறை (Protocol) என்பன குறித்து ஆராய்வது பொருத்தமானதாகும்.

கிழக்கு முதல்வர் நிகழ்விற்கு உரிய முறையில் அழைக்கப்பட்டிருக்காவிடினும் ஆளுனர் அவர்களின் அழைப்பின் நிமித்தம் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அதீதிகளில் ஒருவராக இருந்தார்.

சம்பூர் தமிழ் வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணினி அலகு திறந்து வைத்தல் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு ஆளுனர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிசாப் முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி உட்பட அதீதிகள் அழைக்கப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இந்நிகழ்வினை கடற்படையினரின் ஏற்பாட்டில் நடாத்துவதற்கான அனுமதியினை வழங்கியது மாகாணத்தின் ஆளுனர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கல்வியோடு தொடர்புபட்ட நிகழ்விற்கு கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சர் மாகாண கல்வித் திணைக்களம் என்பன இயங்கு நிலையில் இருக்கும் போது மாகாணத்தில் நடைபெறும் இந்நிகழ்வினை கடற்படை பொறுப்பேற்று நடாத்தியதற்கான காரணம் என்ன? எனும் வினாவுக்கு விடை இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.

குறிப்பிட்ட பாடசாலை கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் (2016.03.25) பல வருடங்கள் இருந்ததனால் அதனை படையினர் விடுவித்து விட்டனர் என்பதனை பறைசாற்றும் முகமாகவே இந்நிகழ்வு கடற்படையினரால் அரங்கேற்றப்பட்டதா? என்றும் சிந்திக்கக் தோன்றுகின்றது.

மாகாணத்தின் முதலமைச்சர் அதீதியாக அழைக்கப்பட்டும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் சந்தர்ப்பத்தில் மேடைக்கு அழைக்கப்படாமல் நிகழ்வினை நடாத்திச் செல்ல முற்பட்டமையானது சந்தேகத்தினை உண்டு பண்ணுகின்றது. நிகழ்வின் பிரதான அங்கம் அரங்கேற்றப்படும் வேளையில் மகாணத்தின் கல்வியமைச்சர் மற்றும் முதல்வர் அழைக்கப்படாமை ஏன் என்ற வினாவுக்கும் விடை காண வேண்டியுள்ளது.

முதலமைச்சரை மாகாண ஆளுனர் சைகை மூலம் மேடைக்கு வருமாறு அழைத்தததாகவும் முதலமைச்சர் கல்வியமைச்சரினையும் அழைத்துக் கொண்டு மேடைக்கு செல்லும் போது கடற்படை அதிகாரி முதலமைச்சரினை மேடைக்கு ஏற விடாமல் தடுத்ததற்கான காரணம் என்ன?

ஆனால் இங்கு நிகழ்வினை நடாத்தியவர்கள் ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவரினை மாத்திரம் அழைத்துவிட்டு பின்னர் முதலமைச்சரினையும் கல்வியமைச்சரினையும் அழைத்து உபகரணங்களினை வழங்கலாம் என நிகழ்வினை நடாத்திய குழு சிந்தித்து இருக்கக்கூடும் என்பதற்கும் அங்கு சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே உள்ளது.

ஏன்எனில் நிகழ்வை நடாத்தியவர் முதலில் ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவர் உபகரணங்களினை வழங்குவர் பின்னர் முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சர் உபகரணங்களினை வழங்குவர் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் முதலமைச்சரினை ஆளுனர் மேடைக்கு அழைத்திருக்க வாய்ப்புமில்லை இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கவும் மாட்டாது. ஆதலால் இங்கு மிக நுட்பமான முறையில் நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தமையும் அதன்படி அது நடைபெற்றமையும் நிருபணமாகின்றது.

முதலமைச்சரினை கடற்படை அதிகாரி தடுத்தபோது மாகாணத்தின் ஆளுனர் கடற்படை அதிகாரியின் செயற்பாட்டினை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது கண்டும் காணாதது போல இருந்தாரா என்பதுவும் சிந்திக்க வேண்டிய விடயங்களாகும். முதலமைச்சர் மேடையில் ஏறுகின்ற போது அமெரிக்க தூதுவர் மற்றும் அதீதிகள் பெற்றோர்கள் மாணவர்கள் முன்னிலையில் முதலமைச்சரை ஏறவிடாமல் தடுத்த சம்பவமானது மிகவும் மனவேதனைக்குரியதும் வெட்கித் தலைகுனியக் கூடியதொரு நிகழ்வுமாகும்.

சாதாரண மனிதனுக்குக் கூட இவ்வாறானதொரு நிகழ்வு நடந்திருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாதபோது மாகாணத்தின் முதலமைச்சர் அவமானப் படுத்தப்பட்டபோது அதனை பொருட்படுத்தாமல் மேடையில் ஏறிய விடயமானது பாராட்டப்பட வேண்டியதாகும்.

இச்சம்பவத்திற்கு காரணமான கடற்படை தளபதியினை முதலமைச்சர் மேடையில் வைத்து அமெரிக்க தூதுவருக்கு முன்னிலையில் கடிந்து கொண்டார் என்பதற்காக முதலமைச்சரினை முப்படை தளங்களுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையும் முதலமைச்சர் பங்குகொள்ளும் எந்த நிகழ்வுகளிலும் முப்படைகள் பங்கு கொள்ளாது என அறிவிக்கப்பட்ட தீர்மானம் குறிப்பிட்ட கடற்படை தளபதிக்கு நிவாரணமளிப்பது நோக்கமாக இருந்தாலும் பாதிக்கப்ப்பட்ட மற்றுமொரு நபரை சிறிதளவேனும் கணக்கில் எடுக்காதது மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்நிகழ்வு நடைபெற்றது கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் ஆனால் அண்மையில் எதிர் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்று இனவாத சக்திகள் கோஷமெழுப்பியபோது சம்மந்தனுக்கு சார்பாக இராணுவ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டதும் அந்த நிகழ்வினையும்; கிழக்கு முதலமைச்சரின் இச் சம்பவத்தினையும் இணைத்து முடிச்சுப்போடுவது இனவாத மற்றும் நல்லாட்சி அரசிற்கு எதிரான சக்திகளின் வெளிப்பாடாகும்.

இரா. சம்பந்தன் அவர்கள் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார் என்பது வேறு கிழக்கு முதலமைச்சர் கடற்படை தளபதியினை கடிந்து கொண்டார் எனும் சம்பவம் வேறு. இங்கு இனவாத சக்திகள் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் தமிழர்களும் முஸ்லிம்களும் யுத்த வெற்றியினை ஈட்டித்தந்த இராணுவ வீரர்களினை அவமானப் படுத்துகின்றார்கள் எனும் தமிழ் முஸ்லிம் மக்களைப் பற்றி பிழையானதொரு தோற்றப்பாட்டினை சிங்கள மக்கள் உண்டுபண்ணும் நோக்கில் அரங்கேற்றப்பட்ட விடயமாகவே இக்கருத்தினை நோக்க வேண்டியுள்ளது.

நாட்டின் பிரதமர் அவர்கள் குறித்த சம்பவமானது ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்த G7 பொருளாதார வல்லரசு நாடுகளினது மாநாட்டினை திசைதிருப்பு முகமாக ஏற்படுத்தப்பட்ட விடயமா என்பதனை ஆராய வேண்டும் என தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்நாட்டின் தலைமை இது விடயத்தில் எந்த கருத்தினையும் அவர் விடுக்கவில்லை அதேவேளை ஜனாதிபதியின் அதிகாரிகளினையும் இது விடயத்தில் எந்த வித அறிக்கையினை விடுக்குமாறும் ஜனாதிபதி கோரி இருக்கவுமில்லை என்பது ஜனாதிபதினது அரசியல் சாணக்கியத்தினை காட்டுகிறது எனலாம்.

ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் நாட்டில் தங்கிருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாதிருந்த வேளையில் முப்படை அதிகாரிகள் தீர்மானம் எடுத்து முதலமைச்சரினை முப்படை தளங்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை எனவும் முதலமைச்சர் பங்கு கொள்ளும் எந்த நிகழ்விலும் முப்படை பங்கு கொள்ளாது என தீர்மானம் நிறைவேற்றியது ஒரு பக்க சார்பான விடயமாகும்.

கிழக்கு முதலமைச்சு விடயத்தில் பெரும் பங்காற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சம்பூர் சம்பவத்தினை பயன்படுத்தி முதலமைச்சிரினது அதிகாரங்கள் எதனையும் பறித்துகொள்ள்க்கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கிழக்கு முதலமைச்சரினது விடயமானது நடுநிலையாக அணுகி ஆராயப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சரத்பொன்சேகா கிழக்கு முதலமைச்சருக்கு அநீதி ஏற்படாத வகையில் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதேவேளை நல்லாட்சி அரசுக்கு எதிரான சக்திகளிள் இது விடயத்தில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த படைவீரர்களை பகிரங்க மேடையில் வைத்து அவமானப்படுத்தியதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுவது மிகவும் நியாயமான நிலைப்பாடாகும் ஏன்எனில் முதலமைச்சர் முறையாக அழைக்கப்படாத நிகழ்விற்கு ஆளுனருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் சம்பூர் மாணவர்களுக்கும் மரியாதை செலுத்தும் முகமாகவே கலந்து கொண்டார் என்றாலும் ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவரும் மேடையில் அழைக்கப்பட்டவுடன் நிதானமாக சம்பவத்தினை உருவகப்படுத்தி குறிப்பிட்ட இடத்தினை விட்டு வெளிநடப்பு செய்திருந்தால் மாகாண ஆளுனருக்கும் அமெரிக்க தூதுவரையும் அவமானப்படுத்துவதாக அமையும் என்று முதலமைச்சர் எண்ணியதனால் தான் தனது ஆதங்கத்தினை முதலமைச்சர் மேடையில் நேரடியாக படை அதிகாரியிடம் வெளிப்படுத்தியிருக்கலாம் ஆனால் அந்நிகழ்வு நடந்திருக்க்கூடாது.

உண்மையில் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் திட்டமிட்ட செயற்பாட்டால் தான் என்பதும் இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பும் நாட்டுப்பற்றுமே காரணம் என்பதனை எவரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு முஸ்லிம் என்பதற்காகாகத்தான் இந்த விடயம் மிகவும் பிரசித்தப்படுத்தப்பட்டது என்பது மட்டுமல்லாமல் கடற்படை தளபதியும் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டது பிரச்சினையினை தணிக்கும் முகமாக அரசு மேற்கொண்டதொரு உடனடி நடவடிக்கையாகும்.

இவ்விடத்தில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு செயற்பட்டவிதம் குறித்தும் சற்று அலசுவது சிறப்பானதாகும் ஏன் எனில் முதலமைச்சர் கடற்படை அதிகாரியினை கடிந்து கொண்ட காட்சி ஊடகங்களில் வெளிவந்தபோது முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெறத் தொடங்கின. ஆனால் முதரமைச்சரின் ஊடகப்பிரிவு முதலமைச்சர் மேடைக்கு ஏறும் போது படை அதிகாரி தடுக்கின்ற காட்சியினை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தால் ஒருபக்கச் சார்பான வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

சர்வதேச நெருக்கடிக்குள் இருந்து படிப்படியாக மீண்டுவரும் இவ்வரசு கடற்படை அதிகாரியின் இந்நடவடிக்கையினை சிறுபான்மை தலைவர்களை மீண்டும் இராணுவ அடக்கு முறைக்குள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற தொனியில் இலங்கை அரசபடை செயலாற்றுகின்றது. இராணுவ அடக்குமுறை இன்னும் முற்றுப்பெறவில்லை அத்தோடு இலங்கை அரசு சிறுபான்மையினை தொடர்ந்தும் அவமதித்து வருகின்றது என்பது சர்வதேச நாடுகளுக்கு எளிதில் புலனாகி விடும் அதன் மூலம் அரசின் தற்போதய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அது அமைந்;துவிடும் எனும் அச்சத்தில் முதலமைச்சுருக்கு சாதகமாக தற்பொழுது தீர்மானங்கள் எடுக்கப்படுவது அமையக்கூடும்.

இதன் ஒரு அங்கமாகவே கடற்கடை அதிகாரியின் இடமாற்றம் மற்றும் முதலமைச்சுருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுவதும் அவதானிக்கப்படுகின்றது.

கிழக்கு முதல்வர் தவறிழைக்கவில்லை என்பது நிரூபணமாகிறது

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை சேர்ந்தவர் என்பதால் அதற்கு எதிரான சக்திகள் இது விடயத்தில் சமூகத்தினது முதலமைச்சர் பதவி பறிபோனாலும் பறுவாயில்லை முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கைகள் விடுவது சமூகம் எக்கேடு கெட்டு போனாலும் பறுவாயில்லை நமது அரசியல் பயணம் வீறு நடைபோட இதனை சாதகமாக பயன்படுத்த நினைப்பது தவறாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இது விடயத்தில் பகிரங்கமாக எந்தவிதமான ஊடக அறிவிப்புக்களை விடுத்திருக்கா விட்டாலும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அறிக்கை விட்டிருப்பது முதலமைச்சருக்கு மன வேதனையினை அளிக்கலாம் என்பதற்கு மாற்றமாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா அமைச்சர் ஹக்கீமின் இவ்வறிக்கையினை வரவேற்றிருப்பதும் இது இனவாதிகளுக்கு சாட்டை அடியாகும் என அமைச்சர் ஹக்கீமை முதலமைச்சரோடு முரண்பாட்டினை ஏற்படுத்துவது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நோக்கமாகவும் இருக்கலாம்.

சம்பூர் சம்பவமானது முதலமைச்சரின் தவறில்லை என்ற கோணத்தில் பார்க்கப்பட்டால் ஹக்கீமின் அறிக்கையும் ஹிஸ்புல்லாவின் அறிக்கையும் அர்த்தமற்றதாகிவிடும் ஆனாலும் இனவாதிகளின் மூச்சினை சற்று குறைக்கக் கூடிய வல்லமை மன்னிப்பு என்ற வார்த்தைக்கு உண்டு என்பதையும் மறைப்பதற்கில்லை. ஏன் எனில் பேருவளை அளுத்கம போன்ற சம்பவங்களினை கட்டவிழ்த்துவிட்ட இனவாத அமைப்புக்களுக்கு தீனிபோடுகின்ற ஒரு நிகழ்வாகக் கூட மன்னிப்பு கேட்கும் விடயத்தினை கருத வேண்டியுள்ளது.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் அதிகாரங்கள் ஆளுனர்களின் கைகளில் காணப்படுவதாக இரு மாகாணங்களின் முதலமைச்சர்களும் குற்றம் சாட்டிவரும் இந்நிலையில் தான் அரசு வடக்கின் ஆளுனரினை மாற்றியமைத்த விடயம் நடந்தேறியது. அதேபோல் கிழக்கு மாகாண ஆளுனரும் அரசினால் மாற்றியமைக்கப்பட்டால் அது முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அரசியல் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற பொழுது அது மத்திய அரசிற்கு பெரும் தலையிடியாக அமைந்து விடும் எனும் நோக்கில் அதிகார பரவலாக்கம் நடைபெறாமலும் இதுவரையில் இவ்விரு மாகாணங்களுக்கும் தமிழரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ ஆளுனராக நியமிக்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தமதகும்.

வடக்கு கிழக்கு முதலமைச்சர்களினது ஆளுனர்கள் மீதான வெறுப்பும் மத்திய அரசு பெரும்பான்மையினத்தவர்களை ஆளுனர்களாக நியமித்திருப்பதும் இரு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம்களில் இருந்து ஆளுனர்கள் நியமிக்கப்படுகின்ற பொழுது தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வட கிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்தி விடுவார்கள் என்பதனால் இவ்விரு மாகாணங்களுக்கும் அரசு சிறுபான்மை இனத்தவர்களினை ஆளுனர்களாக நியமிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

முதலமைச்சரினதும் கடற்படை அதிகாரியினதும் செயற்பாட்டின் மூலம் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர்களிடம் பிழையான கோணத்தில் பார்க்கப்படுவதற்கும் சம்பூர் சம்பவத்தினை எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இராணுவ முகாமுக்குள் சென்ற சம்பவத்தோடு தொடர்பு படுத்தி இனவாத சிந்தனைகளை ஊக்குவித்து சிறுபான்மை சமூகங்களினை பெரும்பான்மை சமூகத்தோடு மோதவிட இனவாத சக்திகள் எடுக்கின்ற முயற்சிக்கு சிறுபான்மை அரசியல் தலைமைகள் தங்களது முன்மாதிரியான செயற்பாடுகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

கிழக்கு முதல்வர் தவறிழைத்து விட்டார் என்பது உண்மைக்கு புறம்பானது 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -