ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா?அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா? மொஹிடீன் பாவா

நேர்காணல்: எம்.வை.அமீர் -
ற் கால ஊடகம்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகரும் கல்வியாளரும் சமூக சிந்தனையாளருமான மொஹிடீன் பாவாவிடம் வினவினோம் அவர் தனது கருத்தை மிக ஆதங்கத்துடன் கூறினார். 

ஒரு ஊடகவியலாளனின் பேனாவின் வலிமை எத்தகைய வீரியம் மிக்கது என்பது உங்கள் அ னைவருக்கும் தெரியும். ஊடகவியலாளனின் மிக முக்கியமான பணி, எச்சந்தர்ப்பத்திலும் விலை போகாத நடு நிலமையுடன் கூடிய செய்திகளைப் பகிர்வது தான் என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மொஹிடீன் பாவா, பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஊடகவியல் என்கிற போது அது மனிதர்களுக்கிடையில் கருத்துக்களை தகவல்களை காவிச் செல்கின்ற பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது, மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது, அரசியல் தத்துவம், விஞ்ஞானம், சட்டம்,மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம் என்றார்.

அரண்மனை அல்லது அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிக்கவே முதன்முதலில் இதழ்கள் தோன்றின என்றும் கி.மு.60 இல் எகிப்து நாட்டை ஆண்ட ஜூலிய சீசர் தனது ஆணைகளையும் அரண்மனைச் செய்திகளையும் எழுதித் தெருக்களில் வைத்தார்.இதுவே உலகின் முதல் செய்தித்தாள் என்று கூறப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் நடக்கும் செய்திகளை சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினைச் செய்வதில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. 

இன்று நடப்பதென்ன? ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.

ஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல,உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப் போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா?

தொழிற் புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம்,மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே. 

தற்போது சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை! சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.

ஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா?அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா?

அந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. 

நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. 

மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா?

அமெரிக்காவில் சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி? நாம் வழங்கிய சுதந்திரம் அது.ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.

இவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.

ஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -