முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி, குர்ஆன் ஹதீதை யாப்பாக முன்வைத்து மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்றப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.. அக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் தேசியம் என்ற சக்தியின் கீழ் தேசிய அரசியல் நீரோட்டத்தின் நனைந்திருந்த காலம். இனத்தின்பெயரால் முஸ்லிம் தேசியம் என்ற ஒரு திரட்சிக்கு தேவையிருந்த பயங்கரவாத சூழ்நிலை - முஸ்லிம்களின் அனைத்து உரிமைகளும் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருந்த நிலை போன்றவற்றின் மத்தியில், அன்னாரின் கொள்ளை வெற்றிபெற்றது.
2000ம் ஆண்டில் மு.கா. தலைவர் அஷ்றப் அவர்களின் மறைவுடன் முஸ்லிம் காங்கிரசின் கொள்கை என்பதைவிட பெருந்தலைவர் அஷறப் அவர்களின் கொள்கைகளுக்கும் சாவுமணி அடிக்கப்பட்டு இன்று 16 வருடங்களான நிலையில், ஐக்கிய இலங்கை, நாம் ஒரு தாய் மக்கள், நாம் இலங்கையர் என்ற பாரிய புகைக்குள் ஆங்காங்கே ஞானசார தேரர், சிங்ஹலே என்பன வெடில்களை கொளுத்திக் கொண்டிருக்கின்ற ஓர் அபாயகரமான சூழலில் முஸ்லிம் தேசியம் என்ற எண்ணக்கரு மீண்டும் புதுவடிவில் வளர்ச்சிகண்டு வருவது சாதகமானதா? பாதகமானதா என்ற விவாதம் நிச்சயம் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளிக்கொணர வேண்டும். ஏனெனில் முஸ்லிம்களின் இலங்கையில் இருப்பை கேள்விக்குறியாக்காமல் நிலைப்படுத்துவதும், ஏனைய சகோரதர இனங்களோடு ஐக்கியமாக வாழ்வதும் இஸ்லாம் காட்டித்தந்த வழிகளில் இருக்கவேண்டும்.
இங்கு ஆராயப்படவேண்டிய விடயம் 'கிழக்கின் எழுச்சி' என்பதாகும். அண்மைய காலங்களில் முஸ்லிம் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கட்சிகளின் தேசியக் கூட்டணி என்ற கோசம் தமிழ்க் கூட்டமைப்பு என்ற தொணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால், ஒரு அவை யாழ்பானத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதேவேகத்தில் பிரசித்தமடைந்த சூட்டோடுதான் உருவானது எனலாம்.
இன்று அக்கோசத்தினை பிரபல அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் வழக்கொழிந்துவிட்டது என்றே கூறவேண்டியுள்ளது. அதன்வழியிலேயே 'கிழக்கின் எழுச்சி' என்ற விடயத்துடன் 'முஸ்லிம் தேசியம்' என்ற விடயமும் ஆய்வுக்கு எடுக்கப்படவேண்டியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் தேசியம் மற்றும் கிழக்கின் எழுச்சி என்ற கோசம் வலுப்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. மு.கா.வின் முன்னாள் பொருளாளர் வபா பாறூக் அவர்களை முன்னிலைப்படுத்தி, தலைமைத்துவ சபை என்ற ஒரு குழுவை உருவாக்கி ஜுன் 2016 இல் வலுவடைந்துள்ளது. கௌரவ ஹஸனலி அவர்களின் பிரச்சினையை மையப்படுத்தியே, கிழக்கின் எழுச்சியானது மு.காவின் தலைமைத்துவமானது கிழக்குக்கு வரவேண்டும் என்ற சுலோகத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கின் எழுச்சியின் கதாநாயகன் கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மு.காவின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்கள் என்பதை வபாபாறூக் அரசியனுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இங்குதான் இடியுள்ளது. அதாவது இவ் 'கிழக்கின் எழுச்சி' என்பதன் பின்னணி மிகவும் சூட்சுமமாக பின்னப்பட்டுள்ளதா? அல்லது இது வபா பாறூக் அவர்களின் நியாயமான, ஆத்மீக தேடலில் முஸ்லிம் காங்கிரஸ் வழிதவறிச் செல்வதில் இருந்து அதனைப்பாதுகாப்பதா? என்பது.
முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தை கிழக்கிற்கு கொண்டுவருதல் எனும் புறப்பாடுதான் இந்த கிழக்கின் எழுச்சி என்று தெளிவுறுத்தப்பட்தற்கமைய, இஸ்லாமிய ஆட்சி வரலாறுகள் உதாரணமாக கூறப்பட்டு சகல திட்டங்களும் சஹாபாக்கள், கலீபாக்களின் எளிமையான வாழ்க்கை முறையிலமைந்த தலைமைத்துவத்தைப்போன்று, இஸ்லாமிய அரசியல் முன்னெடுக்கப்படுவது தெளிவாகின்றது – அதாவது மக்களை அன்று தலைவர் அஷ்றப் அவர்கள் எவ்வாறு குர்ஆன் - ஹதீதை வைத்து முஸ்லிம் தேசியத்தை நெறிப்படுத்த முனைந்தாரோ அதேவழியில் இன்று 'கலீபாக்களின்' ஆட்சிவரலாறுகள் கூறப்பட்டு இடாம்பீகமற்ற எளிமையான மாற்று மத நாடொன்றின் கீழ் ஐக்கியமான எளிமையான வகையில் கிழக்கின் எழுச்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பது எனது கருத்தாகும்.
இக்கோட்பாடு எந்தளவு மக்கள் மனதை அதாவது, கிழக்கு அதிலும் அம்பாறை மாவட்ட மக்களை எப்படி கவர்ந்திழுக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டியது என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் இக்கொள்கை பெரும் விமர்சனத்தையே ஏற்படுத்தும் ஏனெனில் மக்கள் மு.கா. ஆதரவாளர்களாக இருந்தாலும் வேறு கட்சிக்காரர்களாக இருந்தாலும் குர்ஆன் - ஹதீதை வைத்து அரசியல் நடாத்தும் முஸ்லிம் காங்கிரசிற்கு எவ்வாறு பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்களோ அதேபோன்று இதற்கு எதிர்ப்புகளை வெளிப்படுத்துவார்களா? இல்லை ஆத்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்வார்களா? என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
கடந்த காலங்களிலும் அண்மைக்காலங்களிலும் முஸ்லிம் சமூகம் பணத்துக்காக காட்டிக்கொடுக்கப்படுவதும், கோடிகளுக்கு பேரம் பேசப்படுவதும் அரசியல் அரங்கில் சாதாரண விடயமாகவே உள்ளது என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல கோடிகள் அம்பாறை மாவட்டத்தில் கரைக்கப்பட்டது யாம் அறிந்த விடயமே!
இஸ்லாமிய அரசியல் என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஒரு கடினமான பாதை என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனனில் பௌத்தநாடான இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆங்காங்கே பரந்து வாழ்ந்துவரும் சூழுல்நிலையில் பல சந்தர்ப்பங்களிள் சிங்கள அரசியலை சார்ந்துபோக வேண்டிய நிலைப்பாடு கடந்த காலங்களில் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் இன்று வாக்காளர்கூட இஸ்லாமிய அரசியல் என்பதை விட பணத்திற்கான அரசியல் என்ற வகையில்தான் செயற்படுகின்றனர். கழகங்களாகவும், சமூகசேவை அமைப்புக்களாகவும், மாதர் சங்கங்களாகவும் அரசியல்வாதிகளிடத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமது வாக்குரிமையை விற்றுவிடுகின்றனர் - அந்தப் பணத்துக்குள் நீதமான அரசியல் வாதிகளை புதைத்துவிடுகின்றனர்.
அதனுடன் இணைந்து இஸ்லாமிய அரசியலும் புதைந்துவிடுகின்றது. இந்நிலையானது தொன்றுதொட்டு எமது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. சுய அரசியல் சிந்தனைகளுக்கு அப்பால் மக்களை மேலும் அரசியல் சூனியமாக்கி வாக்குகளை பணத்தால் வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
மு.காவின் தலைவர் ரவூப்ஹக்கீம் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் தெரியாதவர், அரசியல் வியாபாரி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வருவதுடன், அண்மையில் கௌரவ செயலாளர் நாயகம் அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டே இன்று கிழக்கின் எழுச்சி என்ற கோசம் வந்துள்ளதுபோல் தோன்றுகின்றது.
அதன் அடிப்படையில் தலைவர் கௌரவ ஹக்கீம் கூறியது போன்று தொடர்ந்து ஒருவருக்கு பதவிகள் செல்லமுடியாது என்றவகையில் அவர் பதவியிறக்கப்பட்டு, கிழக்கின் மைந்தர் ஒருவர் தலைமைத்துவப்பதவிக்கு வரவேண்டும் என்ற கோசம் கிழக்கின் எழுச்சி என்ற எண்ணக்கருவின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. இக்கருத்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவும் மு.காவின் இயலாமைகள் வெளிப்பட்ட சந்தர்ப்பங்களில் உதாரணமாக கரையோர மாவட்டம் போன்ற பின்னடைவுகளில் கூட தெளிவாகப் பேசப்பட்ட கருத்து என்பதுடன் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலருக்கும் உள்ளாந்த ரீதியாக இருக்கும் ஒரு சிந்தனைதான்.
தலைமைத்துவ பதவி வெற்றிடம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், பேரியல் அஷ்றப்புக்கு அப்பதவி கொடுக்கப்படவேண்டும் என வாரிசுரிமை அரசியலை முன்னிலைப்படுத்தியவர்கள் கூட இன்று அதுபிழையான கொள்கை என ஏற்றுக்கொள்கின்றனர்.
அதேபோல் கௌரவ ரவூப்ஹக்கீமை தலைவராக்கியவர்கள் கூட இன்று அதுபிழையான முடிவு என வெளிப்படையாகவே கூறுகின்றனர். இரண்டும் பிழைஎன் கண்டவர்கள்; கட்சியைவிட்டு பிரிந்துசென்று தமக்கென புது வழியை அமைத்துக்கொண்டனர். ஆனால் தேர்தல் காலங்களில் அனைவரும் விற்றுவிடுவது தலைவர் அஷ்றபின் நாமத்தையும் புகைப்படத்தையும்தான் என்பது, முஸ்லிம் காங்கிரஸ் என்ற சக்தியின் வலுவையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. அதன் வழியில்தான் புதிய கட்சி என்பதைவிட இருக்கும் கட்சியில் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையொன்று இன்று கிழக்கின் எழுச்சியென வலுப்பெற்றுள்ளது.
கிழக்கின் எழுச்சியின் பின்னால் அரசியல் வாரிசுகள், மு.கா.வின் முக்கியஸ்தர்கள் பலரின் பெயர்கள் தொடர்புபட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
எனினும், இதன் வளர்ச்சியானது முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய நிலையில் பாரியளவு தாக்கம் ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், கட்சி வளர்க்கப்பட்ட அதே வடிவில் தொழுகை, நோன்பு போன்ற ஆத்மீக தேடலின் ஊடாக துஆரப்பிராத்தனைகள் மூலம் இறைவனுடைய நாட்டத்தால் கட்சிமீட்பிலும் ஏதாவது மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் கிழக்கின் எழுச்சிக் குழுவினர் உள்ளனர்.
எது எவ்வாறாயினும் தற்கால அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரசினுடைய இருப்பு என்பது அதிலுள்ள தலைமத்துவத்தில் ஏற்படும் மாற்றத்தில் மட்டும் தங்கியிருக்காது. உயர்பீட உறு;பபினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகர, பிரதேசசபை உறுப்பினர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், போராளிகள் என்பவர்களின் மனோநிலையிலும் மாற்றம் வரவேண்டும் - அதாவது சமூகத்திற்காக சிந்திக்கக்கூடிய, சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய வழிவகைகள் இன, மத, பிரதேசவாதங்களுக்கு அப்பால் ஆய்ந்தறியப்படவேண்டும். உட்கட்சிப் பூசல்கள் பெரிதாக ஊதப்பட்டு இன்னும் பிரச்சினைகள் வளர்க்கப்படுமானால் மக்களும் கிழக்கின் எழுச்சியுடன் இணைந்துவிடவும் வாய்ப்புண்டு. அதேவேளை மக்களின் பார்வையில் கிழக்கின் எழுச்சியுடன் தொடர்புடையவர்கள் யார்? இவர்களின் செயற்பாடுகள் எவ்வாறமையும் என்ற வினாக்களும் எழுந்துள்ளன. இந்தக் கேள்விக்கெல்லாம் விடைகள் வரும்போது கிழக்கின் எழுச்சி – முஸ்லிம் காங்கிரஸ் என்ற சங்கமம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.
எஸ்.எம். சஹாப்தீன்.
நிந்தவூர்.