ரமழான் ஒரு வரப்பிரசாதம்...!

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமழானின் வருகை கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமழானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச்சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. 

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், மற்றும் சொல், செயல், எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமழான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.

ரமழானின் முழுப்பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது. அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப்புகழும் ரமழானை நமக்கு அருள்புரிந்த அல்லாஹ்வுக்கே. 

மக்கள் உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்தோடு தொழவும் பள்ளியில் குர்ஆன் ஓதிக்கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமையான தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம். 

இந்தப் பக்திப் பரவசநிலை புனித ரமழான் ஒருமாதத்தில் மட்டுமின்றி தினந்தோறும் இருப்பது போல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு அதன்மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்துவிட்டால் இம்மைக்கும் மறுமைக்கும் நன்றே எனும் ஆவலும் எண்ணமும் ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமழானில் மட்டுமின்றி ரமழானுக்குப் பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்: (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் ((நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகின்றான்) (அல்குர்ஆன் 2:185)

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

இதயத்தையும் பார்வையையும் செயல்களையும் ஒட்டு மொத்தவாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம்தான் ரமழான்!

ரமழான் மாதமானது அருள் நிறைந்த மாதமாகும். நன்மைகளை அதிகம் செய்யும் மாதம். பிழைபொறுக்கத்தேடும் மாதம். அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறுகின்ற மாதம். சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம். சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம். ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதமாகும். நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம். குர்ஆன் இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம். துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்றெல்லாம் இம்மாதத்திற்கு பல சிறப்புகள் உள்ளன.

இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாஹ்வின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும் ரமழான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பியை அடைந்துகொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

கூடுதல் நன்மைகளைப் பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.

நோன்பைத்தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிட்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்;சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு 2 மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான். இரண்டாவது தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.

நூல்: புகாரி, அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ

அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்

ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டுவிடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும் அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான் விலங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறான். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன. என்று நபிகளார் (ஸல்); அவர்கள் கூறிச்சென்றுள்ளார்கள். நூல்: புகாரி, அபூ ஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ 

கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமழான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான். யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ, நூல்: புஹாரி 1901, முஸ்லிம் 1393

சுவர்க்கத்தில் தனி வாசல்

' சுவர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸஹ்ல் ரலியல்லாஹூ அன்ஹூ, நூல்: புகாரி 1896, முஸ்லிம் 2121

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

இம்மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்துகள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும். 


மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச்சிறந்தது. வானவர்களும், ரூஹூம் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

உம்றா செய்தால் ஹஜ் நன்மை

ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும். 'ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்.' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ, நூல்: புகாரி 1782, முஸ்லிம் 2408

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ரமழான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் 3 நிகழ்வுகள்

திருக்குர்ஆன் இறக்கப்பட்டமை:

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது! (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2;;:183)

உலகம் அழியும் வரை உள்ள மக்களுக்கு வழிகாட்டக்கூடிய அருள்மறையாம் திருக்குர்ஆன் புனித ரமழான் மாதத்தில் இறக்கி அருளப்பட்டது. இந்த மாதத்தை அடைந்தவர்கள் தக்வா - இறையச்சத்தை பெறுவதற்காக நோன்பு நோற்க இறைவன் கட்டளை இட்டுள்ளான்.

பத்ருப்போர்: 

காபிர்களிடத்தில் இஸ்லாத்தைப்பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்திய இப்போர் - சத்தியம் மற்றும் அசத்தியத்திற்கிடையிலான போர் இந்த ரமழான் மாதத்தில் இடம்பெற்றது. ஆகையால்தான் அன்றைய தினத்தை யவ்முல் புர்கான் அதாவது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவித்த நாள் என்றழைக்கப்படுகிறது.

எதிரிகளிடம் அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்துவிதமான போர்த்தளபாடங்கள், போர்த்தந்திரங்கள், படைப்பலம் இவை எதுவுமே முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் முஸ்லிம்களிடம் எதிரிகளித்தில் இல்லாத தக்வா-இறையச்சம் இருந்தது. இறைவன் கண்ணுக்குத்தெரியாத மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு வெற்றியை கொடுத்தது இந்த ரமழான் மாதத்தில்தான்;.

மக்கா வெற்றி:

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த உலகமக்களை இஸ்லாத்தின் பக்கமும் முஸ்லிம்கள் பக்கமும் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்ச்சி இதுவாகும். 'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது' என்ற கருத்தை தவிடு பொடியாக்குவது போல் கத்தியின்றி, ரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபியவர்கள் போரின்போது கடைப்பிடிக்கக் கூடிய தர்மத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

இஸ்லாத்தின் பரம எதிரிகளான அபூ ஸூப்யான்; மற்றும் இக்ரிமா போன்றவர்களை மன்னித்தார்கள் நபி (ஸல்)அவர்கள். மக்காவில் இருந்து தன்னை விரட்டி அடித்தவர்களை 'இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை' என்று பறைசாற்றினார்கள். ரமழான் மாதத்தில் நடைபெற்ற இந்த வெற்றி தக்வா-இறையச்சத்தின் காரணமாக இறைவன் அளித்த வெற்றியாகும்.

நாம் இந்த சம்பவங்களில் இருந்து இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை பெற்றுக்கொள்ள முடிகிறது. நோன்பு நோற்பதால் அடையக்கூடிய தக்வா-இறையச்சத்தை இறைவன் நம் அனைவருக்கும் அதிகப்படுத்த போதுமானவன். எனவே நோன்பின் மாண்புகளை அறிந்து அதன்படி நடப்போமாக! 

றிப்கா அன்சார் 
பிரதி அதிபர்
கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -