நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டது ஆனால் இனப்பிரச்சனை இன்னும் முடியவில்லை -முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

ஏறாவூர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் - 

கிழக்கு மாகாணத்தின் தன்மானத்தை தரக் குறைவாக நடத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆதங்கப்பட்டுள்ளார்.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் திரகோணமலை சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரி ஒருவர் மாகாணத்தின் முதலமைச்சரை தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சூடு பிடித்துள்ளன.
நாட்டில் கடந்த சில நாட்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை இடர் பற்றிய பேச்சுக்களையும் புறந்தள்ளி விடும் அளவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் விவகாரத்தை இனவாதிகள் தூக்கிப்பிடித்திருக்கின்றார்கள்.

தென்னிலங்கையில் தமது வியாபாரச் சந்தையைத் தளமாகக் கொண்டுள்ள சிங்கள இனவாத ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஊதிப்பெருப்பித்து விற்றுவருகின்றன.

அதன்விளைவாக மட்டக்களப்பில் பிக்கு ஒருவரின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்தப் பிக்கு கையிலேந்தியிருந்த பதாதையில் வடக்கு மாகாணம் புலிகளிடம் கிழக்கு மாகாணம் சோனகர்களிடம் (உதுர கொட்டின்ட, நெகெனஹிர தம்பிலாட்ட’ இந்த தம்பிலா என்பது சிங்களவர்கள் முஸ்லிம்களை மிகத்தரக்குறைவாகக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்) என்று எழுதப்பட்டிருந்தது. திருகோணமலையிலும் பிக்குகள் கூடி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

கடந்த 2006.03.25ம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பின்னர் 20.05.2016ம் திகதி சம்பூர் மகா வித்தியாலயம் பிரதேச தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு முதல்வர் ஆளுநரால் அழைக்கப்பட்டிருந்தார்.

அதே நிகழ்வில் அமெரிக்க தூதரும் சம்பூர் மீள்குடியேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கு வருகை தர இருந்தமையால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கடற்படை தளபதியிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

இந்த நிகழ்விற்கு முதலமைச்சர் அழைக்கப்பட்டிருந்தும் நெறிமுறை தவறி முதலமைச்சரை நடத்தியமை தொடர்பில்தான் முதலமைச்சர் முதலமைச்சருக்கான அந்தஸ்துக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்படிருக்க வேண்டும். இதுதான் நடைமுறை, இருந்தும் எவ்வாறு ஆளுநர் கடற்படை தளபதியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் எனும் கேள்வி எழுகிறது.

ஆகவே, இதுபோன்ற ஆளுநர் அதிகாரங்களால் கிழக்கு மாகாண சபை தன்னகத்தே கொண்டுள்ள அதற்கு உரித்தான அதிகாரங்களை இழக்கின்ற மாகாண சபையாக இருக்க முடியாது.

தொடர்ந்தும் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை கிழக்கு ஆளுநர் தன்னிச்சையாக கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது.
கடந்த காலத்தில் நடந்ததை போன்று இன்னும் இச்சபையை நடாத்த அனுமதிக்கவும் முடியாது. கடற்படை தளபதியைக் கடிந்துகொண்டது மாத்திரமன்றி ஆளுனரிடமும் நீங்கள் முறையாக நடக்கவில்லை. இந்த சங்கடமான நிகழ்வு ஏற்பட்டமைக்கு முழுப்பொறுப்பும் நீங்களே என்ற தொனியிலும் முதலமைச்சர் அங்கு பேசினார்.

கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பவர்கள் இவ்வாறு அதிகாரம் பறிக்கப்படும் நேரத்தில் நியாயத்தை கேட்டால் அது முறையற்றது என சில ஊடகங்கள் திரிவுபடுத்தி தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களை ஒப்பிட்டால் கிழக்கு மாகாணத்தில்தான் படையினர் உட்பட சில அரச அதிகாரிகள் மற்றும் ஆளுநர் தலையீடு அதிகமாகவுள்ளது.

அவற்றை பிழையான நிலைமைகள் தோன்றும்போது அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி நிறுத்தவேண்டும் அதைத்தான் கிழக்கு முதல்வரும் செய்தார்.
அதேவேளை, சிலர் இந்த நிகழ்வில் குளிர்காயவும் எத்தனிக்கின்றனர்.
மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடுகளில் பல்வேறு புறக்கணிப்புக்கள் காணபப்டுகின்றன.

95 வீதமான பாடசாலைகள் மாகாண அதிகாரங்களுக்குள் இருக்கின்றன. ஆனால் 95 வீதமான நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசின் கீழ் உள்ளமை ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

மாகாணத்திலே இருக்கின்ற பெரும்பாலான அமைச்சின் கீழுள்ள செயற்பாடுளுக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் நடக்கின்றன.
மாகாண சபையில் அதிகாரமுள்ளது என எழுத்துக்களில் கூறிவிட்டு, நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசின்கீழ் வைத்திருக்கும் காணத்தினால்தான் நாட்டில் பிரச்சனைகள் எழுகின்றன என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

பல வருடகாலம் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம், கட்சிகளுக்குள் பிரச்சனைகளை மூடிவிட்டி, எமது கால்களுக்குள் கட்டுப் போட்டிவிட்டு பிரச்சனைகளுக்காகத் தீர்வு காணாமல் ஏமாற்றப்பட்டோம் இந்த வரலாற்றை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இனிமேலும் புரையோடிப் போயுள்ள எமது பிரச்சனைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்காமல் வரலாற்றுத் துரோகங்களை செய்;து விடக்கூடாது.
வர இருக்கின்ற தீர்வு மாகாண சபைகளுக்கு இருக்கின்ற காணி பொலிஸ், போன்ற பல அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்ட தீர்வாக அமைய வேண்டும்
சிறுபான்மை இனங்கள் ஒற்றுமைப்பட்டு அத்தனை உரிமைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆயினும், பேரினவாதத்தின் திட்டமிட்ட புறக்கணிப்புக்களுக்கு இன்னும் துணை போகின்ற அரசியல் போக்கு நமது சிறுபான்மைச் சமூகங்களிலுள்ள அரசியல்வாதிகள் ஒரு சிலரிடம் இருந்து கொண்டிருப்பது வேதனையளிப்பதாய் உள்ளது.

முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகத்தோடு இணைந்து அரசியல் உரிமைகளுக்காக ஒருமித்துப் பயணித்து வரலாறு படைக்க வேண்டும்.
சில விஷம சக்திகளின் சூழ்ச்சிகளில் சிக்கி இப்போதிருக்கின்ற இந்தப் போக்கையும் தவற விட்டுவிட்டால் சிறுபான்மை இனங்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறுவதில் தோல்வி அடைந்தவர்களாக ஆகி இன்னும் பல தசாப்தங்களுக்குக் காத்திருக்க வேண்டுவரும்.

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுதான் சரியான தீர்வு என்பதற்காக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், எந்த பிரதேச மக்கள் தாங்கள் பாரபட்சம் காட்டப்பட்டு ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்று போராட்டம் நடாத்தினார்களோ அந்தப்பிரதேச மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை நாட்டின் எல்லாப் புறமும் உள்ள மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு நிருவாக அதிகாரத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் இன்றி திண்டாடுகின்றன.

இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சற்று கடுமையான விமர்சனங்களையும் கண்டிப்புக்களையும் மேற்கொண்டு வருவதோடு சந்தர்ப்பம் கிடைக்கம்போதெல்லாம் அதிகார அடக்குமுறையைக் கைக்கொள்ளும் அதிகாரிகளையும் கண்டித்து வருகின்றார்.
அவ்வாறான ஒரு நிகழ்வே கிழக்கு மாகாணம் திருகோணமலை சம்பூரிலும் கடற்படை அதிகாரியோடு முறுகலை ஏற்படுத்தியது.
அந்த முறுகலுக்குப் பின்னர் கிழக்கு மாகாண சபை முதல்வர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால், முதலமைச்சரின் கருத்தை இன வாத ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
அதிகாரப் பகிர்வின் நன்மைகளை அனைத்து இன மக்களும் அனுபவிக்கச் செய்வதே நிரந்தர சமாதானத்துக்கும் நீடித்து நிலைக்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என்பது யதார்த்தமானது என்பதை முதலமைச்சர் இடித்துரைத்துள்ளார்.

அந்த வகையில் இந்த நாட்டிற்கே இன ஐக்கியத்திற்கு முன்னுதாரணமாகவுள்ள கிழக்கு மாகாண சபையை அகௌரவப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது.
தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இன ஐக்கியத்துடன் இணைந்து இந்த மாகாண சபையை ஆளுகின்றார்கள். எமது திட்டங்களும் வெளிப்படைத் தன்மையுள்ளதாக இருக்கின்ற அதேவேளை எல்லோரும் இன ஐக்கியத்துக்காகப் பாடுபகின்றோம் என்பதும் இந்த நாட்டுக்கு வெளிப்படையாகத் தெரியும்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 18 இலட்சம் மக்களும் இந்த ஒற்றுமையின் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.

இனப் பிரச்சினையால் சின்னா பின்னமாகிப் போன இந்த நாட்டைக் கட்டி எழுப்புவதில் கிழக்கு மாகாண சமூகம் கவனமாகச் செயற்பட்டு வருகின்றது.
ஆகையினால். கிழக்கு மாகாண ஒட்டு மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மாகாண சபை நிருவாகத்தையோ அல்லது முதலமைச்சர் அந்தஸ்தையோ தரக்குறைவாக நடாத்தும் எந்த சந்தர்ப்பங்களையும் நாம் அங்கீகரிக்கப் போவதில்லை.

கடந்த கால வன்முறைகளினால் ஈடு செய்ய முடியாத இழப்புக்களை இந்த கிழக்கு மக்கள் தாங்கிக் கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருக்;கின்றார்கள்.

கடந்த வாரம் சம்பூரிலே நடந்த சம்வம் தனிப்பட்ட முறையில் அது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் அல்ல. அது இந்த ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கும் இந்த சிறப்பான மாகாண நிருவாகத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

சாதாரண ஒரு கடற்படை அதிகாரி ஒரு மாகாணத்தின் முதலமைச்சரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்துவது இந்த நல்லாட்சிக்கு நல்லதல்ல.
எந்தத் தடைகள் வந்தாலும் சகல விதத்திலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம், ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தான் மாகாண நிருவாகம் ஈடுபட்டுள்ளது.
அதிகார அடக்குமுறையிலிருந்து மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணம் விடுபட வேண்டும்.

இந்த மாகாணங்கள் இன்னமும் ஒரு அதிகார அடக்கு முறையில்தான் இருந்து வருகின்றன.

இங்கு பேரினவாத அதிகார மனப்பான்மையுடன் தான் பலர் நடந்து கொள்கின்றார்கள். இதனால் இன ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் இந்த அதிகார மமதை மனப்பான்மை தூண்டுகிறது.
மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டிய பொறுப்பை மாகாண சபைகள் சுமந்து நிற்கின்றன.

இதற்கெல்லாம் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறுவது மிக முக்கியம்.

வடக்கு கிழக்கு மாகாணசபைகள் மத்திய அரசின் பேரினவாத அதிகார மமதையிலிருந்து விடுபட வேண்டியிருக்கின்றது.
2 இலட்சம் பேர் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி தினமும் எங்கோ ஓர் மூலையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது.

இதனை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தால் மாகாண சபைக்கு முன்னதாகவே அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும் நிதியும் அதன்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
எங்கே என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம் ஆனால் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களை எமக்குத் தராமல் மத்திய அரசு கையகப்படுத்திக் கொண்டுள்ளதால் எம்மால் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது.

ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு மாகாணங்களை அடக்கி ஆள்கிறது.

95 வீதமான பாடசாலைகள் மாகாண நிரவாகத்தின் கீழிருந்தும் நிதியை மத்திய அரசே கையாள்கிறது.

குறைந்தபட்சம் கல்விக்காக 8 வீதம் கூட மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை. கிழக்கு மாகாணம் கல்வியிலே எட்டாவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது. இது கவலையளிக்கும் விடயம்.
இதனை மாற்றாதவரை எதுவும் நடைபெறாது. சமாதானத்தையும் அடையப் பெற முடியாது.

இந்த நாட்டில் இனியொரு புரட்சி வெடிக்குமாக இருந்தால் அது கிழக்கு மாகாணத்திலிருந்துதான் அதுவும் தொழிலில்லாத இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களால்தான் இடம்பெறுமென்பதை இந்த நாட்டுக்கு நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதிகாரப் பகிர்வு வருகின்ற போது நாங்கள் எங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.

இந்த நாட்டில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள், தோட்டத் தொழிலாளர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக அச்சமின்றி வாழ அதிகாரத் தரப்பு உதவ வேண்டும்.

உண்மையான அதிகாரப் பகிர்ந்தளிப்பு இடம்பெற வேண்டும் விரும்புகின்ற வேளையிலே
இவ்வாறான கபடத்தனமான நடவடிக்கைகளை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கடந்த அரசாங்கத்தாலே கொண்டு வரப்பட்ட வாழ்வின் எழுச்சி போன்ற திட்டங்களால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
இப்பொழுதும் அவ்வாறான நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.
600 பாடசாலைகள் திட்டத்திலே முழு அதிகாரங்களைக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு அவை வழங்கப்படாமல் மத்திய அமைச்சு மாத்திரம் அதனைக் கையாளும் வழிவகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வெறுமனே அதிகாரப் பகிர்வு என்று வார்த்தைகளால் கூறிக் கொண்டு நிதி ஒதுக்கீடுகளை மாகாண சபைக்குத் தராமல் முடக்கிக் கொண்டு அரசியல் செய்யும் கபடத் தனம் இருக்கின்ற வரையிலும் இது உண்மையான இதய சுத்தியுள்ள அதிகாரப் பகிர்வாக இருக்க முடியாது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான, கிட்டத்தட்ட 36 ஆயிரம் மில்லியன் ரூபாவை மத்திய அரசுக்குள் வைத்துக் கொண்டு வெறுமனே 400 மில்லியன் ரூபாய்களை மாத்திரம் உள்ளுராட்சி சபைகளுக்கு கையளித்து விட்டு 99 சதவீதமான அதிகாரங்களை உள்ளுராட்சி சபைகளுக்குக் கொடுத்து விட்டோம் என்று கூறுவது ஒரு ஏமாற்று வித்தையாகும்;.

இலங்கையில் தற்போது யுத்தம் முடிவடைந்திருந்தாலும் யுத்தத்திற்குக் தோற்றுவாயாக இருந்த இனப்பிரச்சினை இன்னமும் இருந்து கொண்டுதானிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் இப்பொழுது கனிந்திருக்கின்றது.
இதனை இலங்கை ஆட்சியாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெண்ணெய் திரண்டு வருகின்றபோது தாழியை உடைத்துவிடும் செயல்களில் எவரும் இறங்கிவிடக் கூடாது.
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் அனுபவித்த இன்னல்கள் சொல்லுந்தரமன்று. இனி நமக்கு அத்துன்பம் கனவிலும் வரக்கூடாது.

இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினையைத் தீர்த்து நாட்டை சமாதமானப் பூங்காவாக மாற்றுகின்ற பொறுப்பை ஆட்சியாளர்கள் தட்டிக் கழிக்கக் கூடாது.

முதலில் 13 வது அரசியல் திருத்தச் சட்டமூலம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் தமது பழைய வரலாறுகளையும் முரண்பாடுகளையும் புறந்தள்ளிவிட்டு உடனடியாக ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் தேவையாகும்.

சிறுபான்மை இனங்கள் முன்னரிலும் பார்க்க இன்னமும் விழிப்பாக இருக்க வேண்டும். எந்த நெருக்கடிகள் வந்தாலும் அதிகபட்ச உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் ஒருமித்துப் போராட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

எதிர்கால சந்ததிகளின் தேவை கருதி இரு சமூகங்களும் இந்த இன ஒற்றுமையைப் இறுக்கமாகப் பற்றிப்பிடித்தாக வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -