வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்கரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதனைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.
இராணுவ முகாம்களை அந்தந்த இடங்களில் பாராமரிப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து இன சமூகங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்படுதல் உலக நாடுகளுடன் நட்புடன் செயற்படுதல் அவசியமானது.
கடந்த காலங்களில் சீனா போன்ற நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கியிருந்தன.குழுக்களாக பிரிந்து செயற்படுவது பாதக நிலையை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியில் நட்புறவான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்கர் இதன் போது தெரிவித்துள்ளார்.