பா.திருஞானம்-
வசந்த காலத்தையொட்டி நுவரெலியா நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவந்த பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அச்சுவரொட்டியில் பொலிஸ் எச்சரிக்கை எனக்கூறி யோசியுங்கள், கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள், திருடர்கள் ஏமாற்று பேர்வழிகள் உங்கள் மத்தியிலும் இருக்கலாம் என கூறியுள்ளதோடு அவசர நேரங்களில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியையும் பொலிசாரையும் தொடர்பு கொள்ள 052-2222226, 052-2222223, 052-2222444, 052-2222225, 072-6534317 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வசந்தகால நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சுற்றுலா பயணிகளிடம் பொலிசார் பாதுகாப்பு அற்ற பிரதேசங்களில் நடமாடுவதையோ இருப்பதையோ தவிர்த்து கொள்ளுமாறும், தெரியாதவர்களிடம் உணவு பொருட்களை வாங்கி உண்ணுவதை தவிர்க்க வேண்டும் தங்கள் பொருட்கள், தங்க நகைகள் மீது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொலைபேசி, மடிக்கணினி, கமரா போன்ற சாதனங்களின் நுஆஐ இலக்கங்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாகனங்கள் வாடகைக்கு எடுக்கும் போது அனுமதியளித்த வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் அத்தோடு பெண்களையோ சிறுவர்களையோ தனித்து விட வேண்டாம். உங்களது வாகனங்களை தரிக்கும் போது வாகன கதவு, யன்னல்கள் போன்றவற்றை முறையாக தாளிட்டு செல்ல வேண்டும். மோட்டார் வண்டிகளை நிறுத்தி வைக்கும் போது தாளிட்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்
மேலும் இந்த வசந்த காலத்தையொட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10 மணிமுதல் 'சினிசிட்டா' விளையாட்டரங்கில் பொலிஸாரின் விசேட நிகழ்ச்சியும் கண்காட்சியும் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. 













