M.T. ஹைதர் அலி-
திருகோணமலை மாவட்டத்தின் அதிபர்கள் சங்க தலைவர் திரு. செய்னுலாப்தீன் அதிபர், கிழக்கு மாகாண அதிபர் சங்க செயலாளர் திரு. சஹீத் அதிபர் உட்பட திருகோணமலை மாவட்டத்தின் வலயக்கல்வி அலுவலகங்களான கிண்ணியா, ஈச்சலம்பற்று, மூதூர், திருகோணமலை, மற்றும் திருகோணமலை வடக்கு கோமரன்கடவல போன்ற வலய பாடசாலைகளில் பதில் கடமை புரியும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள அதிபர்கள் 2016.04.12ஆந்திகதி காலை 10.00 மணியளவில் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களை சந்தித்தனர்.
தமது கோரிக்கைகளை முன்வைத்து பேசியதுடன் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின்போது தமது சார்பாக திருமலை மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை அவர்களின் சேவையின் அடிப்படையில் நிரந்தரமாக்க எதிர்வரும் 2016.04.26ஆந்திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறும் வேண்டிகொண்டனர்.
அதற்கமைவாக மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் கடந்த யுத்த காலங்களில் எவ்விதமான வளங்களுமில்லாமல் பாடசாலைகளைப் பொறுப்பேற்று அந்தப்பாடசாலைகளின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் தமது பங்களிப்பினை வழங்கிய கடமை நிறைவேற்று அதிபர்களை அவர்களின் சேவைக் காலத்தினை கருத்திற்கொண்டு, அதிபர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
அத்தோடு, கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமையாற்றிய அதிபர்களையும் கவனத்திற்கொண்டு அவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்பதோடு, கடந்த கால யுத்த காலங்களில் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்நின்று உழைத்தவர்கள். இந்த கடமை நிறைவேற்று அதிபர்கள்.
கடந்த காலங்களில் இவ்வாறு பதில் அதிபர்களாகக் கடமையாற்றியோர்கள் குறிப்பிட்டளவு சேவைக் காலத்தினைத் தகமையாக்கொண்டு அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர். அதற்கேற்ப இப்போது அதிபர் சேவை வகுப்பு (111)ற்கான பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே, இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக அதிபர்களின் வேண்டுகோளுக்கமைவாக மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் பிரேரனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
