கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிஃல் நஸீர் அஹ்மத்திடம் அக்கரைப்பற்று பென்சின் கழக (Benzene Club) சமூக சேவை தலைவர் ராஸீக் எம். முஸ்தபா அவர்களால் 'இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு' தொடர்பான 27 அடங்கலான விடயங்கள் கையளிக்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக மக்களிடம் கோரப்பட்ட ஆலோசனைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பென்சீன் கழகம் அக்கரைப்பற்று அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்கள்
மற்றும் பிறை எப்.எம். வானொலி சேவை ஊடாக வழங்கப்பட்ட பொது அறிவித்தலுக்கமைவாக அக்கரைப்பற்று மாநகர சபையின் பொதுப் பூங்காவில் 2016.02.26ம் திகதி பி.ப. 4.30 மணிக்கு நடைபெற்ற விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்திற்கு 126 பேர் சமூகமளித்திருந்தார்கள்.
இக்கூட்டம், அக்கரைப்பற்று பென்சீன் கழகத்தின் சமூக சேவைப் பிரிவுத் தலைவர் முகம்மது முஸ்தபா றாசீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக சமர்ப்பிக்கின்றோம்.
01 சர்வதேச நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவாறு இலங்கையிலும் ஷஷஉயிர் வாழும் உரிமை|| உறுதிப்படுத்துவதற்கான உறுப்புரைகள் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
02 இலங்கையின் தேசியக்கொடி சகல இன, மத மக்களும் திருப்திப்படக் கூடியவாறு பொதுவான இலச்சினைகளாலும், நிறங்களாலும் வடிவமைக்கப்பட வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
03. ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கம் நடைபெறும்போது சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியாக உரிமைகளும் அதிகாரங்களும்; மீண்டும் ஒரு முறை அழுத்தி எழுதப்படல் வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
04. ஷஷதகவல் பெறும் உரிமை|| எல்லாத்தரப்பு மக்களுக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
05. ஜனாதிபதி ஆட்சிக் காலமும், பாராளுமன்ற ஆட்சிக் காலமும் 4 வருடங்களாகக் குறைக்கப்படல் வேண்டும் என்றும், சாத்தியமாகும் பட்சத்தில் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல் ஒரே தினத்தில் நடாத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் சார்பற்ற பொருளாதார நிபுணத்துவ நிரந்தர சபை உருவாக்கம் செய்யப்பட்டு நாட்டின் பொருளாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் இச்சபை வேண்டுகிறது.
06. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீடிக்கப்படுமிடத்து ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதம நீதியரசர், ஏனைய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதியரசர்கள் நியமனங்கள் அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட வேண்டும், இதன்போதே நிறைவேற்றுத் துறையிலிருந்து நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியும் என இச்சபை நம்புகிறது.
07. இலங்கை முஸ்லிம்களை பிரநிதித்துவப்படுத்தக் கூடிய, அரசியல் கட்சி சாராத பெரும்பான்மை முஸ்லிம்களின் அபிமானம் பெற்ற குறைந்த பட்சம் இரண்டு முஸ்லிம்களாவது அரசியல் அமைப்பு சபையில் உள்வாங்கப்பட வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
08. சனத்தொகை அதிகரிப்புக்கேற்ப பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 225 இலிருந்து அதிகரிக்கப்படுவதற்கேற்றவாறு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு,
தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றப்படக் கூடாது என்றும் இச்சபை வேண்டுகிறது.
09. சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற எல்லா மாவட்டங்களிலும் அவர்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அரசிய லமைப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என இச்சபை கோருகின்றது.
10. கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களையும் பிரதிநிதிப்படுத்துகின்ற வகையில் முழு அமைச்சரவை அந்தஸ்துள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் பதவி முஸ்லிம் மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
11. பொலிஸ் துறை, அரசியல் தலையீடு இன்றி இயங்குவதற்கு ஏற்றவாறு, முன்பிருந்த தைப் போன்று சுதந்திரமான பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனங்கள் பாராளுமன்ற பெரும்பான்மையினால் தீர்மானிக்கப்பட வேண்டும் என இச்சபை வேண்டுகிறது.
12. ஏற்கனவே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசார முறைமை பேணப்பட வில்லை என்ற அவதானத்தை இச்சபை உணருகிறது. அதனால், தொழில் வாய்ப்பு பல்கலைக்கழக அனுமதி போன்றவற்றில் 2012 ஆண்டைய கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் தற்போதைய சனத்தொகைக் கேற்ப நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை போன்ற தெரிவும், நியமனமும் வழங்கப்படுவதற்கான உத்தரவாதம் அரசியல் மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என இச்சபை வலியுறுத்துகிறது.
13. முஸ்லிம்கள் விகிதாசாரத்தின்படி செறிவாக வாழுகின்ற அம்பாறை, புத்தளம், மன்னார் ஆகிய மாவட்ட கச்சேரிக்கு அரச அதிபராகஃமாவட்டச் செயலாளராக முஸ்லிம்கள் நியமிப்பதற்கான ஏதுக்கள் மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
காணிப் பிரச்சினை மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான இழுபறி தொடர்வதற்கு இவ்வாறான நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டமையே காரணம் என்பதை இச்சபை உணர்ந்து இதனை வலியுறுத்துகிறது.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் எந்தவொரு சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் பரீட்சார்த்தியும் தெரிவு செய்யப்படவில்லை என்பதை இச்சபை சுட்டிக் காட்டுகிறது.
14. அரச, தனியார் காணி தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல்கள் செய்யப்படும் முன்னர், சம்பந்தப்பட்ட மக்களுக்கு எவ்வித முன்னறிவித்தல் வழங்காமலும், நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், மாவட்ட, பிரதேச அரச அதிகாரிகள் தான்தோன்றித் தனமான முறையில் நடந்து கொண்டுள்ளதை சுட்டிக்காட்டுவதோடு, முறைகேடான இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டுமென சபை கோருகின்றது.
15. ஏற்கனவே அரசியலமைப்பில் கூறப்பட்ட உரிமைகளை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக அதி உச்சபட்ச (பதவி நீக்கம்) தண்டனை வழங்கப்பட வேண்டும்.
திணைக்களங்களின் மேலாணமையை மிறுகின்றவாறு வேறு திணைக்களங்கள் தலையீடு செய்யாமலிருப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இச்சபை கோருகின்றது.
(குறிப்பாக வனவிலங்கு, வனபரிபாலனம் திணைக்களங்களின் அதிகாரிகள் தமது இன ரீதியான சிந்தனைகளால் பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தில் அத்துமீறுதல்)
16 தற்போதைய நடைமுறையிலுள்ளவாறு சிங்கள மக்களைப் பிரநிதிப்படுத்துகின்ற 07 மாகாண முதலமைச்சர்களும், தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்துகின்ற 01 முதலமைச்சரும் தெரிவாகக் கூடிய சாத்தியம் உள்ள போது முஸ்லிம் மக்களைப் பிரிதிநிதிப்படுத்தக் கூடியவாறு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தெரிவாகக் கூடிய ஏற்பாடுகள் மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என இச்சபை கோருகிறது.
17. அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை தமிழ் முஸ்லிம் எனப் பிரித்தாள்வதற்கு தமிழர் தரப்பு ஏற்கனவே அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு, நிந்தவூர் - காரைதீவு, சம்மாந்துறை - நாவிதன்வெளி, கல்முனை தமிழ் பிரிவு- முஸ்லிம் பிரிவு எனவும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து திருக்கோவில் கல்வி வலயம் என்றும் பிரிந்து வாழ்கின்ற முன்னுதாரணங்களைக் கொண்டு வடக்கு கிழக்கும் தற்போதைக்குள்ளவாறு தனித்தனி மாகாணங்களாகவே செயற்பட வேண்டும் என்பதை இச்சபை வலியுறுத்துகிறது.
18. மாகாண சபை முறைமையின் கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக்கூடாது என இச்சபை வேண்டுகிறது.
19. காணி அதிகாரங்களில் எந்த ஒரு சிறுபான்மையையும் பாதிக்கப்படாதவாறு காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ஏலவே இருந்தவாறு காணிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு - பயங்கரவாhதம் காரணமாக முஸ்லிம்களிடமிருந்து கைசோர்ந்து போன காணிகள், காணி பிரச்சினைகள் முற்றுமுழுதாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இச்சபை வேண்டுகிறது.
20. காணி தொடர்பாக மாகாண சபைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் இச்சபை வேண்டுகிறது.
21. சிங்கள, தமிழ் மக்களின் காணிகள் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தமிழ்ஃசிங்கள உதவி பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை இச்சபை சுட்டிக் காட்டுவதோடு இந்நடை பின்பற்றப்படாத, வடக்கு கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் முஸ்லிம்களின் காணிகள் உள்ள பிரிவுகளுக்கு உதவிப் பிரதேச செயலாளர்களாக முஸ்லிம்களும் நியமிக்கப்பட வேண்டும் என இச்சபை கோருகின்றது.
22. மனித அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் ஏழை மக்கள் ஏமாற்றப்படுவதை இச்சபை உணருகிறது.
அதனால் வட்டியில்லாத அபிவிருத்திக் கடன் கொடுப்பனவுத் திட்டத்தை எல்லா அரச வங்கிகளினூடாகவும் நடைமுறைப் படுத்துவதற்கும், தனியார் நிதி நிறுவனங்கள் அரச சிவில் சேவை அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஏழை மக்கள் ஏமாற்றப்படுவதை தடை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை இச்சபை வலியுறுத்துகிறது.
23. விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்களுக்கு நாட்டில் ஏற்படுகின்ற காலநிலைக்கு ஏற்ப, நீர்ப் பற்றாக்குறை ஏற்படுகின்ற போது குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்களை நீரைத்தேக்கி வைக்கக்கூடியவாறு அபிவிருத்தி செய்வதனால் மக்களையும் நாட்டையும் கட்டியெழுப்ப முடியும்
அதனால், விவசாயிகள் நிவாரணம் பெறக்கூடியவாறு உரத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கும், அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் உத்தரவாத விலையை வெளிச் சந்தையிலும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என இச்சபை கோருகின்றது.
24. பாடசாலைக் கல்விக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குமிடையிலான போட்டித் தன்மையினால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டுள்ளதாக இச்சபை உணருகின்றது.
அதனால் அரச பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் செயற்படுவதற்கு தடை விதிப்பதற்கும், அரச பாடசாலை வகுப்புக்களில் மாணவர் தொகையை 25 ஆக மட்டுப்படுத்துவதற்கும் இதனால் ஏற்படுகின்ற மேலதிக ஆசிரியர் ஆளணி, பௌதீக வளங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்குள்ள தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும்,
25. தனியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டு 01 தொடக்கம் எல்லாப் பாடங்களுக்கும் மாலை நேர விடுமுறை காலங்களில் வகுப்புக்கள் நடாத்துவதால் சாதாரண மக்களால் இதனை ஈடு செய்வது கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதை இச்சபை உணருகிறது.
அதனால் ஆண்டு 09க்கு முன்னுள்ள வகுப்புக்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் பாடம் நடத்துவதை தடை செய்வதற்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என இச்சபை கோருகின்றது.
26. குடும்ப ஏழ்மை நிலை காரணமாக இடைவிலகலில் செல்கின்ற மாணவர்கள், சிறுவர் தொழிலாளர்களாகவும், சமூக விரோதச் செயல்களில் ஈடு படுவோராகவும் மாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதனை பாடசாலை சமூகம் கண்டறிந்து உடனடியாக அறிக்கை செய்து அதற்கான நிவாரணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு பிள்ளை ஆரம்ப கல்விமுதல் உயர்தரம் வரை கட்டாயகல்வியாக கற்க வேண்டும் எனவும்,
குறித்த பிள்ளைகளின் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது நிவாரணங்கள் வழங்குவதற்கோ ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும், தொழிலுக்காகவேண்டி கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற சலுகைகளை அரசாங்கத்தால் அனுமதி மறுக்கப்படவேண்டும் என்பதையும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் இனிமேலுள்ள பிரஜைகள் அனைவரும் நமது நாட்டிலும் உலகத்திலும் கௌரவமாக மதிக்கப்படுவோராக இருப்பார்கள் என்பதையும் இச்சபை நம்புகிறது.
27. சுகாதாரம் ஏற்றுமதி, இறக்குமதி, மருந்து வில்லைகள், உணவு, பழவகைகள், குடிபானம், இனிப்புப் பண்டங்கள், ஆடை மற்றும் பாவனைப் பொருட்களினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைக்
கண்டறிந்து பெண்கள், கரு, குழந்தைகள், மனித வாழ்வியலுக்கு ஏற்ப எதிர்கால சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், நீண்ட காலத்துக்குப் பின், ஏற்படுகின்ற விளைவுகளை கட்டுப்படுத்தும் முகமாக ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவ சபை உருவாக்கப்பட்டு அச்சபை, இலாபம், மோசடிகளுக்கு துணை போகாமலிருக்க அரசியலமைப்பு சபை நல்லெண்ணத்துடன் கண்காணிக்கப்பட வேண்டுமென இச்சபை கோருகிறது.
சமூக சேவைப் பிரிவு.
