”அமையவிருக்கும் புதிய மாகாண அரசில் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கு பிரத்தியேகமான ஏற்பாடுகள் அவசியம்;”

என்.எம்.அப்துல்லாஹ்-

வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை

கடந்த 7-4-2016 அன்று வடக்கு மாகாணசபையில்; வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கௌரவ.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான வடக்கு மாகாணசபையின் முன்மொழிவுகள் என்னும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. மேற்படி பிரேரணையின் முதலாவது வாசிப்பு நிறைவடைந்த நிலையில் அதன் மீதான அடுத்த கட்ட வாதங்களும், வாக்கெடுப்பும் பின்னர் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்படி விடயத்தில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக்கு எழுத்து மூலம் பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அரசியலமைப்பு மாற்றம் மீதான வடக்கு மாகாணசபையின் முன்மொழிவுகள் மீது வடக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்தவரின் கரிசனைகள் என்னும் தலைப்பிலான கடிதத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு மாகாண மக்களின் அபிலாஷைகளைப் பிரதி பலிக்கின்ற வகையில் வடக்கு மாகாணசபையால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற' அரசியல் தீர்வு மற்றும் அரசியல்யாப்புக்கான கொள்கை வரைவு முன்மொழ்வுகள் ஆவணத்தை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக நாம் வரவேற்கின்றோம். ஜனநாயக ரீதியில் விடயங்களைக் கையாளும் முயற்சியாகவே இதனை நாம் நோக்குகின்றோம். 

அதிலே முன்மொழியப்பட்டிருக்கின்ற அம்சங்கள் மக்கள் நலன் சார்ந்தவை என்பதும், அது வடக்கு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கின்றன என்பதிலும் எமக்கு முழுமையான நம்பிக்கையுண்டு. அவற்றுக்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்கின்றோம்.

Ø இலங்கைத்தீவின் மக்களாகிய நாம் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என்கின்ற இனத்துவங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும்; ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள் தேசிய நலன்களையும், பிராந்திய நலன்களையும் முன்னிறுத்தி எமக்கான புதிய அரசியலமைப்பை வேண்டிநிற்கின்றோம்.

Ø வடக்கில் தொண்டு தொட்டு வாழ்ந்து வருகின்ற வடக்கு முஸ்லிம் மக்கள் இலங்கைத்தீவில் வாழுகின்ற முஸ்லிம் தேசிய இனத்துவத்தின் ஒரு அங்கமாக இருக்கின்ற போதிலும், அவர்கள் வாழ்கின்ற வடக்குப் பிரதேசத்து மக்களோடு சமத்துவத்தோடும், சகவாழ்வோடும் வாழ்கின்ற விருப்பையுடையவர்கள்.

Ø வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அடிப்படை உணர்வுகளை என்றென்றும் புரிந்து கொண்டவர்களாகவும், அவர்களது உரிமைப்போராட்ட முயற்சிகளை மதிப்பவர்களாகவும்; விடுதலை இலக்கை நன்கு அறிந்தவர்களாகவும் இருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில், அத்தகைய அரசியல் விடுதலைக்கான முயற்சிகளில் தமிழ் மக்களோடு தோளோடு தோள் நின்ற வரலாற்றையும் கொண்டவர்கள்.

Ø துரதிர்ஷ்டவசமாக 1990களில் வடக்கு முஸ்லிம்களின் மீது முன்னெடுக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை வடக்குமுஸ்லிம் மக்கள் பொறுத்துக்கொண்டு மன்னிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதங்களுக்கும், அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கும் உரியதீர்வினை தமிழ் மக்களிடமும், அவர்களின் தலைவர்களிடமும் இலங்கை அரசாங்கத்திடமுமே அம்மக்கள் வேண்டி நிற்கின்றார்கள்.

Ø முன்னர் குறிப்பிடப்பட்டது போன்று 'வெளியேற்றம் என்பது ஒருதுன்பியல் நிகழ்வு' என்பதை அங்கீகரித்து, மீண்டுமொரு தடவை இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஏற்படாமல் இருப்பதை தமிழ் மக்களும், அவர்களது தலைவர்களும், இலங்கை அரசாங்கமும் உறுதி செய்தல் அவசியமாகும். அத்தோடு அதற்குப்பதிலீடாக அம்மக்களின் முழுமையான, மீள்வருகை, மீள் குடியேற்றம், சகவாழ்வும் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

Ø வடக்கின் சகல மக்களையும் போல முஸ்லிம் மக்களும் சமத்துவமாகவும், நீதியாகவும், நடாத்தப்படுதல் என்பதே எமது விருப்பும், எதிர்பார்ப்புமாகும்.

Ø வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கு, விசேட அதிகாரங்களை உள்ளடக்கிய 'முஸ்லிம் விவகார , கலாசாரத்துறை' அமையவிருக்கும் புதிய மாநில அமைப்புக்குள் உள்வாங்கப்படுதல் அவசியமாகும்.



Ø வடக்குக்கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பாக 'வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுதல்' என்ற விடயம் அமைக்கின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு விரோதமாக இருப்பதனாது வடக்கு முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் நன்மையளிக்காது. அத்தோடு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இதுவிடயத்தில் தமது விருப்பை வெளிப்படுத்தும் பூரண சுதந்திரமுடையவர்கள் என்பதையும் அவர்களது சுயாதீனமான கருத்து இதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நாம்அறிவோம்.

Ø வடக்கு கிழக்கு இணைப்பில் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் சாதகமான விடயங்கள் இருப்பதைப் போல ஒருசில பாதகமான விடயங்களும்; இருக்க வாய்ப்பிருக்கின்றது. அத்தகைய பாதகமான விடயங்களை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்தாலோசிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

தங்களுடைய முன் மொழிவுகளுக்கு மேலதிகமாக இவ்விடயங்களையும் கவனத்தில் கொள்வீர்கள் என எதிர் பார்க்கின்றோம். எனவும் குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி கடிதத்தில் வடக்கு மாகாண புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், உலமாக்கள் போன்றோர் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -