நீர்கொழும்பு கொச்சிக்கடை எத்கால பிரதேசத்தில் சிசு ஒன்று பிரசவிக்கப்பட்டவுடனே அதன் தாயினால் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்துக்கமைய புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கணவர் மதுபாவனைக்கு அடிமையாகியிருப்பதனால் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தம்பதியினருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளதாகவும் அவர்களில் மூவர் சிறுவர் இல்லங்களில் வசித்துவருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி தனது ஏழாவது குழந்தையை பிரசவித்திருந்ததுடன் தனது 12 வயதான மகனிடம் வீட்டின் பின் புறமாக குழி ஒன்றை தோண்ட செய்து அதனுள் குழந்தையை புதைத்ததாக கைதான பெண் தெரிவித்திருந்தார்.
இப் பெண் குழந்தையை பிரசவிக்கும் வரை அவர் கருவுற்றிந்த விடயம் பிரதேசவாசிகளுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த நிலையில் 12 வயதான அப்பெண்ணின் மகன் தனது நண்பர் ஒருவரிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்ததனையடுத்து இவ்விடயம் அனைவருக்கு தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எத்கல கிராம சேவகருக்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து அவரினூடாக கொச்சிக்கடை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் மேற்படி இருவரையும் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்துக்கமைய புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு மரண பரிசாதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தம்பதியினர் கொச்சிக்கடை எத்கல பிரதேசத்தில் தென்னந்தோப்பு ஒன்றினை பராமரித்தவாறு அதில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
