முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது சமூகத்துக்காக குரல் கொடுப்பதையும், சேவை செய்வதையும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எமது சிங்கள அரசியல் வாதிகள் சமூகத்துக்காக குரல் கொடுப்பதில்லை.
இதனால் எமது அரசியல் வாதிகள் முஸ்லிம் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து சமூக உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பிக்களும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேசுகின்றார்கள்.
வாதிடுகிறார்கள். ஆனால் எமது அமைச்சர்களும், எம்.பிக்களும் மௌனமாக இருக்கிறார்கள். இதனால் எமது சமூகத்துக்காக குரல் கொடுக்க ஒருவருமில்லை. அதனாலே நாம் பௌத்த குருமார்கள் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றோம்.
வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களே மீள்குடியேற்றப்படுகின்றார்கள்.
ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்படுவதில் கரிசனை காட்டப்படவில்லை. மீள்குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த கால அரசாங்கத்தின் காலத்தில் மஹிந்தவால் குடியேற்றப்பட்ட வவுனியா போகஸ்வெவ குடியேற்றத்திலுள்ள சிங்கள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, குடிப்பதற்கு நீரின்றி புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்தகால அரசு பிரிவினை வாதத்துக்கு கீழ்ப்படியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு கீழ்ப்படியவில்லை. வடக்கிலிருந்து அகதிகளாக்கப்பட்ட மக்களை அச்சமின்றி மீள்குடியேற்றியது. வடக்கில் 6 குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
இவ்வாறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு அருகிலிருந்த இராணுவ முகாம்கள் உதவிகளைச் செய்து வந்தன. குடி நீரையும் விநியோகித்தது. உலர் உணவுப் பொருட்களை வழங்கி வந்தது. ஆனால் கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்பு ஆட்சிமாறியதும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் வடக்கிலிருந்து 1700 சிங்களக் கும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
போகிஸ்வெவ சிங்களக் குடியேற்றத்தின் 35 கிலோ மீற்றர் பாதை வாகனம் செல்லமுடியாதுள்ளது. இன்னும் செப்பனிடப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒவ்வொருமாதமும் வடக்குக்கு விஜயம் செய்து அங்குள்ள தமிழர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
ஆனால் வவுனியாவில் அல்லலுறும் சிங்கள குடியேற்றங்களிலுள்ள மக்களைச் சென்றுபார்ப்பதில்லை. ஏன் அவர்களை மஹிந்த ராஜபக் ஷ அங்கு குடியேற்றினார் என்பதனாலா?
வடக்கும், கிழக்கும் இணைக்கப்படவுள்ளது. பிரிவினைவாதிகள் இதற்காக இரகசிய பேச்சுவார்த்தைகள் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கையும் இணைத்து தமிழ், முஸ்லிம்கள் ஆளுவதற்கான முன்னேற்பாடே போகஸ்வெவ குடியேற்றம் புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்குக் காரணமாகும்.
கோகிலாய் கிராமத்தில் 220 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அக்குடும்பங்களை அங்கிருந்தும் வெளியேற்றுவதற்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கோகிலாய் கிராமத்தில் நிலஅளவை மேற்கொள்ளச் சென்ற நிலஅளவையாளர்கள் வட மாகாணசபை தமிழ் உறுப்பினரால் தமது பணியினைச் செய்ய முடியாதவாறு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கோரியுள்ளோம்.
ஆனால் ஜனாதிபதி இதுவரை நேரம் ஒதுக்கித்தரவில்லை. சிங்கள குடியேற்றங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் நிர்வாகிக்க முடியாது விட்டால் நிர்வாகத்தை இராணுவ முகாமிடம் கையளிக்கும் படி வேண்டிக் கொள்கிறோம்.
இன்று வடக்கில் இராணுவத்தினரும் அமைதியாகவே இருக்கிறார்கள். தமது பதவியைப்பற்றியும், பதவி உயர்வு பற்றியுமே நினைக்கிறார்கள்.
எமது நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க 27 ஆயிரம் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள்.
இராணுவத் தளபதியிடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம் சிங்கள குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பு வழங்குங்கள் என்று, என்றும் தெரிவித்தார்.
videivelli