என்.எம்.அமீன் -
‘நிஸார்’ என நான் அன்பாய் அழைக்கும் எனது பால்ய நண்பன் அல்-ஹாஜ் M.C.M. நிஸார் அவர்கள் தனது குடும்பத்தினரை மாத்திரமன்றி, தனது வாழ்நாளில் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஒரு பெரும் திரளான மக்களை துயரத்தில் ஆழ்த்தி எம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்.
அன்று அவரது ஜனாஸாவில் மக்கள் வெள்ளம் திரண்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவரது மறைவின் பின்னரான 40ஆம் தின ‘கத்முல் குர்ஆன்’ நிகழ்வு நடைபெற்று சில தினங்கள் கழிந்த நிலையிலும், இதுவரை என்னால் அந்த சோக அதிர்ச்சியிருந்து மீளமுடியாதுள்ளது.
70 வருடங்கள் கடந்த நினைவுகள் என் கண் முன் தோன்றுகின்றன. மாத்தறை நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில் அமையப்பெற்றுள்ள மீயல்லை எனும் சிறிய கிராமத்தில் நாம் இருவரும் பிறந்து, அன்று அப்போதைய மீயல்லை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தில் (இன்று அல்-மினா மகா வித்தியாலயம்) எமது பாடசாலைக் கல்வியை ஆரம்பித்தோம்.
நிஸாரின் தந்தை மர்ஹும் I.L.M.காஸிம் அவர்கள் அப்போது கிராமத் தலைவராக (தற்போதைய கிராம சேவை உத்தியோகத்தர் பதவி) பணியாற்றினார். அதன்பின்னர் மீயல்லையின் கிராமத் தலைவராக பணிபுரிந்த எனது தந்தை மர்ஹும் U.L.M. முஹம்மது அவர்களும், நிஸாரின் தந்தையும் உறவுமுறையில் சகோதரர்களாகவும்,மிக நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.
இந்தக் காலப்பகுதியில் எமது பாடசாலையில் தமிழ் மொழி மாத்திரமே கற்பிக்கப்பட்டது. அப்போது அப்பிரதேச முஸ்லிம்கள் கால்நடை வியாபாரம், முட்டை வியாபாரம் போன்ற சிறிய வியாபாரங்களில் ஈடுபட்டுவந்ததுடன் அநேகமான பெற்றோர்கள் கல்வி அறிவு அற்றவர்களாக பிற்போக்குத் தன்மை காரணமாக தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய அக்கறை காட்டவில்லை.
ஆனால் நிஸாரின் தந்தையும், எனது தந்தையும் அதற்கு மாற்றமாக எம்மை கல்விகற்க மாத்தறைக்கு அனுப்பிவைத்தனர். 1950 இல் நாம் இருவரும் புனித தோமஸ் கல்லுரியில் சோ்க்கப்பட்டோம். 1952 இல் எனது தந்தையின் தீர்மானத்தக்குக்கு அமைய நான் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இணையும் வரை நாம் இருவரும் ஒன்றாகவே கல்வி கற்றோம்.
இருப்பினும், விடுமுறை காலங்களில் ஊர் வரும் வேளை நாம் இருவரும் சந்தித்து மகிழ்ச்சியாக ஊர்சுற்றுவதை ஒரு போதும் தவறவிடவில்லை. பிறகு, 15 வருடங்களின் பின்னர் மீண்டும் எமக்கு மாத்தறை தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களாக ஒன்றாக பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு எமது உறவும் நீடித்தது.
அவர் பல்துறை நிபுணத்துவங்களை ஒன்றுதிரட்டிய தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருந்தார். விளையாட்டு மற்றும் கலைத்துறையில் அவர் சிறந்து விளங்கினார். நான் ஆங்கில மொழியில் எனது கல்வியைத் தொடர, அவர் தமிழ் மொழியில் தனது கல்வியைத் தொடர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் புவியியல் துறையில் விஷேட புலமை பெற்றார்.
பிற்பட்ட காலப்பகுதியில், எனக்கு தமிழ் மொழியுடன் தொடர்பாக எழுந்த சந்தேகங்களை அவரது உதவியுடன் தீர்த்துக் கொண்டேன். செயற்பட்டு அரசியலில் ஈடுபட நான் உரிய காலத்துக்கு முன்னரே ஓய்வு பெற்றாலும், அவர் தொடர்ந்தும் மீயல்லையில் ஆசிரியர் தொழிலில் மிக ஆர்வத்துடன் செயற்பட்டார்.
அவரிடம் அனைத்துப் பண்புகள், தகைமைகள், தலைமைத்துவம் மற்றும் திறன்கள் இருந்தபோதும் தனது உத்தியோகத்தில் ஒரு அதிபராக அல்லது மற்றைய உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவதில் அவர் ஒருபோதும் நாட்டம் கொள்ளவில்லை. அவர் மீயல்லை அல்-மினா மகா வித்தியாலய ஆசிரியராக கடமையாற்றிய காலப்பகுதியில் அதிபர் பதவி வெற்றிடம் நிழவிய வேளை நான் தனிப்பட்ட முறையில் பல தடவைகள் அவரிடம் அந்தப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டினேன்.
ஆனால் தனது ஆசிரியர் குழாமில் பணிபுரியும் சக கனிஷ்ட ஆசிரியருக்கு அதிபர் பதவியை ஏற்க இடமளிக்கும் வகையில் அவர் பெருந்தன்மையுடன் அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அந்தப் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியராக தொடர்ந்தும் தனது சேவையை மிகுந்த அர்ப்பணிபுடன் முன்னெடுத்தார். குறிப்பாக, தனது ஓய்வுநிலைக்குப் பிறகும் எவ்வித கட்டணங்களும் இன்றி இலவசமாக மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை நடாத்தி நோ்மையுடன் தனது உத்தம பணியைத் தொடர்ந்தார்.
தனது தொழிலுக்குப் புறம்பாக, ஊரின் சமூக மற்றும் சமய விடயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று உழைத்தார். இந்த கிராமத்தில் யாரும் செய்யாத வகையில் தனது சொந்த நிலத்தை மீயல்லை ஜும்மா மஸ்ஜிதுக்கு அன்பளிப்புச் செய்யுமளவுக்கு அவரது தாராள குணம் வியாபித்திருந்தது. இவ்வாரான அவரது தியாகங்கள் பல உள்ளன.
சமகால சமூகத்தில் அவரது தரத்திலான தலைமைகள், நிச்சயமாக தனது பெயருக்கு எதிரே பல கௌரவ பதவிகளை இணைப்பதையே இலக்காகக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு தலைவருக்கான அனைத்துத் தகைமைகளையும் கொண்டிருந்த அவர் பதவிகளை புறந்தள்ளிவிட்டு சமூகத்தக்கான தனது நோ்மையான சேவையை அமைதியான முறையில் முன்னெடுத்தார்.
இது இன்றைய சமூகத்தில் எந்தவொரு தரப்பினர் மத்தியிலும் எம்மால் காணமுடியாத மிக அரிதான ஒரு காதாபாத்திரமாகும். அவரது இனிமையான புன்னகையும்,மறக்கமுடியாத நினைவுகளும் எனது இறுதிநாள் வரை என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக! ஆமீன்.
அல்-ஹாஜ் M. M. ராஸிக், மாத்தறை.
