பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டதற்கான பிரதான காரணம் ஹெவ்லொக் ரக்பி விளையாட்டுக் கழகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலையே என தெரியவந்துள்ளது.
ஹெவ்லொக் ரக்பி விளையாட்டுக் கழகத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் இளம் அரசியல்வாதி ஒருவருக்கும், பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனுக்கும் இடையில் இடம்பெற்ற தகராரினாலே இந்த படுகொலை இடம்பெற்றதாக பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளம் அரசியல்வாதி ஹெவ்லொக் ரக்பி விளையாட்டுக் கழகத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டபோது, வசீம் தாஜுதீன் அதற்கு எதிராக செயற்பட்டுள்ளார். அந்த அச்சமயத்தில் ஹெவ்லொக் ரக்பி விளையாட்டுக் கழகத்தில் வலுவான வீரராக வசீம் தாஜுதீன் செயற்பட்டு வந்தார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வசீம் தாஜுதீன் மற்றும் இளம் அரசியல்வாதி ஆகியோருக்கு இடையில் கடும் தகராறு ஏற்பட்டுள்ள அதேவேளை, அதன் பிரதிபலிப்பாகவே வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் பல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
