சுலைமான் றாபி-
2016ம் ஆண்டுக்கான நிந்தவூர் பிரதேச ஒருங்கமைப்புக் கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரும், நிந்தவூர் பிரதேச ஒருங்கமைப்புக் குழுவின் தவிசாளருமான பைசால் காசிம் தெரிவித்தார். நேற்றைய தினம் (06) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போதே தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெள்ள காலத்தில் கலியோடை அணைக்கட்டினால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பிரச்சினை, நெல் களஞ்சியப் பிரச்சினை, நெல் கொள்வனவு பிரச்சினைகள் ஆராயப்பட்டதோடு, நிந்தவூர் நகர அபிவிருத்தி , சுகாதார சேவை, போக்குவரத்து சேவை , மீன் பிடித்தொழில் ஆகியவைகளின் தேவைகளும் கண்டறியப்பட்டு அவைகளுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இப்பிரதேசத்தில் காணப்படும் மேலும் பல தேவைகள் எதிர்வரும் வாரம் நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமென பிரதியமைச்சரும், நிந்தவூர் பிரதேச ஒருங்கமைப்புக் குழுவின் தவிசாளருமான பைசால் காசிம் தெரிவித்தார்.

