அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆகும் போது அரசாங்கத்தின் பொறிமுறைகள் குறித்த தெளிவான கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்புகளை அமுலாக்குவதற்கான பொறிமுறைகள் குறித்த சில விடயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் சில உண்மைகள் ஏன் நாட்டுக்கு மறைக்கப்படுகின்றன? என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் மங்கள சமரவீர, விசேட நீதிமன்றங்களின் கட்டமைப்பு குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் ஆகும் போது இந்த விடயம் குறித்த தெளிவான நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் நேற்றையதினம் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் தீவிர நிலை ஏற்பட்டது.
இதனால் இரண்டு தடவைகள் நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றியதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தாஜுதீன் குறித்து வெளியிட்ட கருத்தை அடுத்து முதல்முறையாக நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்போது எதிர்கட்சியை சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தாக்க முயற்சித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பின்னர் சபை ஆரம்பிக்கப்பட்ட போது தெரிவித்தார்.
மீண்டும் சபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரும் தாஜுதீனின் விடயம் தொடர்ந்து தீவிரநிலையை ஏற்படுத்தி இருந்தது.
இதனை அடுத்து மாலை 4.50 முதல் நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு, மாலை 6.10க்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
முஜிபுர் ரஹ்மான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டமை குறித்த காட்சிகளை பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்ததுடன், தாஜுதீன் குறித்த நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து சபை அமர்வு இடம்பெற்றது.
எனினும் வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவொன்று, நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.
