தெல்தொட்டையில் காணி பகிர்வு இடைநிறுத்தம் - அமைச்சர் திகாம்பரம் அதிரடி நடவடிக்கை

ண்டி - தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்டத்தில் முறையற்ற வகையில் இடம்பெற்றுவந்த காணி பகிர்வு நடவடிக்கை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நேரடியாகச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார். 

கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள லிட்டில்வெளி தோட்டத்தில் நகருக்கு அண்மையில் உள்ள காணிகளை தெல்தோட்டை பிரதேச செயலாளர் முறையற்ற வகையில் பகிர்ந்தளித்து வருவதாக தெரிவித்து லிட்டில்வெளி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இதுவிடயம் தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுவந்தனர். 

லிட்டில்வெளி தோட்டத்தில் வசிக்கும் 124 குடும்பத்தினர் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளற்ற 120 வருடங்கள் பழமையான லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு லயன் அறையில் 3, 4 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களை கருத்திற்கொள்ளாது தோட்டத்திற்கு சம்பந்தமில்லாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியாட்களுக்கு பிரதேச செயலாளர் தோட்ட காணிகளை பகிர்தளித்து வருவதாகவும் 
தற்போது வெளியாட்கள் வீடுகளை அமைத்து வருவதாகவும் அமைச்சரிடம் முறையிடப்பட்டது. 

மக்களின் முறைப்பாட்டுக்கு செவிசாய்க்கும் வகையில் அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று (11.12.2015) காலை தெல்தொட்ட பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களும், தெல்தொட்ட பிரதேச செயலாளர், தெல்தொட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார். 

கலந்துரையாடலின் முடிவில் தெல்தொட்ட லிட்டில்வெளி தோட்டத்தில் முன்னெடுக்கப்படு வரும் காணிப் பகிர்வை உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு பிரதேச செயலாளருக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் உத்தரவிட்டார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இதுவிடயம் தொடர்பாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார். 

அதன்பின்னர், லிட்டில்வெளி தோட்டத்திற்குச் சென்ற அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தௌிவுபடுத்தினர். 

இங்கு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், 

'லிட்டில்வெளி தோட்டத்தில் இடம்பெற்று வந்த முறையற்ற காணி பகிர்வை உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு நான் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை விரைவில் சந்தித்து எடுத்துரைப்பேன். அதன்பின்னர் முறையான வகையில் மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பேன். லிட்டில்வெளி பகுதியில் உள்ள காணி JEDP வசம் இருந்தது. 

ஆனால் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாது உள்ள தரிசு நிலங்களை சுவீகரிக்கும் திட்டத்தின் கீழ் லிட்டில்வெளி தோட்ட காணி அபகரிக்கப்பட்டுள்ளது. அப்போது அமைச்சுப் பதவி வகித்த இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனமாக இருந்துள்ளனர். அதனால் இன்று இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. 

ஆனால் இ.தொ.கா அமைச்சு பதவி வகித்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என்று மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அறிக்கை விடுவது கேலிக் கூத்தாக இருக்கிறது. மக்களை பிழையாக வழிநடத்தும் இவ்வாறான கருத்துக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொறுப்பு கூற வேண்டியவர்கள் பொறுப்புடன் கருத்துக்களை வௌியிட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். 

சுவீகரிக்கப்பட்டுள்ள காணி மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும் அது அப்படி வழங்கப்படவில்லை என்பது தௌிவாகிறது. இது உங்கள் தோட்டம் உங்களை தவிர வேறு யாருக்கும் காணி பகிர்ந்தளிக்க நான் இடமளிக்க மாட்டேன். உங்களுக்கு முறையாக இந்த காணிகளை பெற்றுத் தர நான் நடவடிக்கை எடுப்பேன். 

அதனால் சட்டவிரோதமாக நீங்கள் பிடித்து வைத்திருக்கும் காணிகளை விடுவிக்கவும். இந்த பிரச்சினைக்கு நான் விரைவில் சிறந்த தீர்வை பெற்றுத் தருகிறேன். நீங்கள் எதற்கும் அச்சமடையத் தேவையில்லை' என்று தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -