ஐ.எஸ். தீவிரவாதிகள் மாத்திரமல்ல, அனைத்து பயங்கரவாதிகளையும் அழிப்பதே எமது இலக்கு என சவுதியின் இரண்டாம் முடிக்குரிய இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து போராட, சவுதியின் தலைமையில் 34 நாடுகள் கொண்ட சர்வதேச இஸ்லாமிய கூட்டணி உருவாக்கப் பட்டதை அடுத்து, இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரியாத் நகரை தலைமையகமாக கொண்ட சர்வதேச இஸ்லாமிய கூட்டு இராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலும் பல நாடுகளில் பரவலாக காணப்படும் பயங்கரவாத அமைப்புக்களை இல்லாதொழிக்க பாடுபடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சவுதி தலைமையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள சர்வதேச இஸ்லாமிய கூட்டணிக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
