இப்போட்டிக்கான ஆக்கங்கள் கடந்த ஜனவரி 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கோரப்பட்டதுடன், பெப்ரவரி 24ஆம் திகதி இறுதித் திகதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பாடசாலை மட்டம், அறபுக் கல்லூரி மட்டம் மற்றும் பல்கலைக்கழக மட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆக்கங்கள் பெறப்பட்டிருந்தன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் மொத்தமாக 297 ஆக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பாடசாலை மட்டத்தில் 38 ஆக்கங்களும், அறபுக் கல்லூரி மட்டத்தில் 239 ஆக்கங்களும், பல்கலைக்கழக மட்டத்தில் 20 ஆக்கங்களும் நேரடியாகவும் தபால் மூலமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவர்களின் பக்கச்சார்பற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் போட்டி நிபந்தனைகளுக்கு உட்படாத 22 பாடசாலை மட்ட ஆக்கங்கள், 157 மத்ரஸா மட்ட ஆக்கங்கள் மற்றும் 12 பல்கலைக்கழக மட்ட ஆக்கங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட 16 பாடசாலை மட்ட ஆக்கங்களில் முதல் மூன்று இடங்கள் பணப்பரிசிற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், தெரிவுசெய்யப்பட்ட 82 அறபுக் கல்லூரி ஆக்கங்களில் முதல் மூன்று இடங்கள் பணப்பரிசிற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 8 ஆக்கங்களில் ஒன்று மட்டும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக பரிசளிப்பு விழாவும் அறபு எழுத்தணி கண்காட்சியும் எதிர்வரும் மே 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீட கேட்போர் கூடம் மற்றும் பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சி ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை காரணமாக பின்னோக்கி மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் பங்கேற்கவுள்ளார். மேலும், கௌரவ அதிதியாக மாஹோ வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர்.எம்.ஐ. முஹம்மது அலி ஜின்னா (நளீமி) கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வின் போது போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதுடன், மதிப்பீட்டிற்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ள அறபு எழுத்தணி கண்காட்சியில் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்கள் இடம்பெறவுள்ளதாகவும், போட்டியில் பங்கேற்றவர்கள் உட்பட பொதுமக்களும் கண்காட்சியை பார்வையிட முடியும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செயலாளர் ஏ.ஆர்.எப்.எஸ். பர்வீன் மற்றும் பொருளாளர் கலாநிதி ஏ.எம். றாசிக் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பீட விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தகவல்களை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எம்.சீ.எஸ். ஸாதிபா தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment