கல்வித் துறையில் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அஷ்-ஷெய்க் அலியார் அவர்களின் கல்விச் சேவை, சமூகப் பங்களிப்பு, மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் பல்கலைக்கழக வளர்ச்சியில் அவர் ஆற்றிய மறக்க முடியாத பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அவர்கள் பிரதான உரையை ஆற்றினார். அவர் தனது உரையில், அஷ்-ஷெய்க் அலியார் அவர்களுடன் நீண்டகாலமாகப் பேணியிருந்த நெருக்கமான உறவுகளை நினைவுகூர்ந்த அவர், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் அமைதியான ஆனால் உறுதியான பங்களிப்பை வழங்கிய கல்வியாளராக அலியார் அவர்கள் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
அவரது எளிமை, மென்மையான பேச்சு முறை, மனிதநேயம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை மாணவர்களுக்கும் சக கல்வியாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். “அவர் மிகவும் மென்மையாகப் பேசுவார்; அவருடன் உரையாடும்போது யாராலும் குரலை உயர்த்திப் பேச முடியாது” என்று குறிப்பிட்ட உபவேந்தர், கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமல்ல; மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் வாழ்க்கை நோக்கையும் வடிவமைப்பதாகும் என வலியுறுத்தினார்.
“Knowledge, Skill, Attitude, Mindset” ஆகிய நான்கு கூறுகளில் குறிப்பாக “Attitude” மற்றும் “Mindset” உருவாக்கத்தில் ஆசிரியர்களின் வாழ்வியல் முன்மாதிரி மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், அஷ்-ஷெய்க் அலியார் அவர்கள் தமது நடத்தை மற்றும் பண்புகளின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, பல்கலைக்கழகத்திலும் சமூகத்திலும் அவர் ஆற்றிய மார்க்க, சமூக மற்றும் மனிதநேயப் பணிகளையும் நினைவுகூர்ந்த உபவேந்தர், கடந்த கால சிரமங்களையும் துயரங்களையும் பொறுமையுடன் எதிர்கொண்ட அவர், எதிர்கால வாழ்க்கையை அமைதியுடனும் இறைநம்பிக்கையுடனும் தொடர வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி அஷ்-ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்கள், பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெறும் கல்வியாளர்களை குடும்பத்தினருடன் அழைத்து கௌரவிக்கும் உயரிய பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இந்நிகழ்வு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அலியார் அவர்கள் தமது ஆசிரியராக மட்டுமல்லாமல் வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்ததாக உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்ப காலத்தில் இஸ்லாமியக் கற்கைகளும் அரபு மொழித் துறையும் கலைப்பீடத்தின் கீழ் இயங்கிய காலத்தை நினைவுகூர்ந்தார். அக்காலத்தில் ஆசிரியர்–மாணவர் உறவு குடும்ப உறவைப் போன்றிருந்ததாகவும், ஆசிரியர்களின் வீடுகளுக்குச் சென்று கல்விசார் பணிகளைச் செய்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
அரபு மொழித் துறையின் பாடத்திட்ட மறுசீரமைப்பில் அஷ்-ஷெய்க் அலியார் அவர்கள் வகித்த பங்கை அவர் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக “Curriculum” மற்றும் “Syllabus” அடிப்படையிலான கல்வி அணுகுமுறைகளை துறையில் வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் அலியார் அவர்கள் எனப் பாராட்டினார். “Multi-disciplinary Unit” என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தி மாணவர்களின் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் Undergraduate Research Colloquium -ஐ வலுப்படுத்தியவர்களில் ஒருவராக அலியார் அவர்கள் திகழ்ந்ததாகவும், மலேசிய கல்வியாளர்கள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததையும் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை, பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை சமரசப்படுத்தி ஒற்றுமையை நிலைநிறுத்திய அமைதியான பாலமாக அலியார் அவர்கள் செயல்பட்டதாகவும், “பொறுமை” மற்றும் “விமர்சிக்காத பண்பு” ஆகியவை அவரிடமிருந்து கற்ற முக்கியமான வாழ்க்கைப் பாடங்களாகும் என்றும் பீடாதிபதி குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பள்ளிவாசல் அமைப்பதற்கான முயற்சிகள், நூலக வளங்கள், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர் மறக்க முடியாத பங்களிப்புகளை வழங்கியதாகவும் தெரிவித்தார். “பல வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவர் தனக்காக வாழவில்லை; மக்களுக்காகவே வாழ்ந்தார்” என உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இறுதியாக, ஓய்வு வாழ்க்கையிலும் அறிவுப் பணிகளைத் தொடரும் வகையில் மாணவர்களுடன் தொடர்பைப் பேணிவருவது பாராட்டத்தக்கது எனக் கூறிய அவர், அஷ்-ஷெய்க் அலியார் அவர்கள் ஆரோக்கியத்துடனும் மனநிறைவுடனும் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்.
பின்னர் கௌரவிக்கப்பட்ட அஷ்-ஷெய்க் ஏ.வி.எம். அலியார் (ரியாதி) அவர்கள் தனது ஏற்புரையில், “அமானத்” எனும் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு ஆழமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை மேற்கோள் காட்டிய அவர், பொறுப்புகள் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும் போது சமூகம் வீழ்ச்சியடையும் என எச்சரிக்கப்பட்டிருப்பதை நினைவுபடுத்தினார்.
தனக்கு ஒப்படைக்கப்பட்ட கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை நேர்மையுடனும் அமானத்துடனும் நிறைவேற்ற முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், “நான் செய்த செயல்களின் தீமைகளிலிருந்தும், செய்யத் தவறிய விடயங்களின் விளைவுகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்” என்ற துஆவை மேற்கோள் காட்டி தாழ்மையுடன் உரையாற்றினார்.
இந்த நிகழ்வு தனிப்பட்ட ஒருவருக்கான கௌரவ நிகழ்வாக மட்டுமல்லாமல், பலரின் பங்களிப்பால் உருவாக்கப்பட்ட கல்வி மரபின் தொடர்ச்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த கால மற்றும் தற்போதைய நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பின்றி எந்த சாதனையும் சாத்தியமில்லை எனத் தெரிவித்த அவர், தன்னுடன் இணைந்து பணியாற்றிய துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
“என்னால் இயன்ற அளவு இந்த நிறுவனத்திற்காகச் சேவையாற்றியுள்ளேன்; அதில் நன்மை இருந்தால் அது அல்லாஹ்வின் அருளால்” எனத் தாழ்மையுடன் குறிப்பிட்ட அவர், தனது பணிக்காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக மன்னிப்பும் கோரினார்.
இங்கு, அரபு மொழித் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எவ்.எச்.ஏ. ஷிப்லி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தனது உரையில், “அலியார் சாருக்கு முன், அலியார் சாருக்கு பின் என்று இந்தப் பீடத்தின் வளர்ச்சிப் பாதையை வகுக்கலாம்” எனக் குறிப்பிட்ட அவர், வசதிகள் குறைந்த சூழலிலும் அர்ப்பணிப்புடன் பீடத்தின் கல்விசார் அடித்தளத்தை வலுப்படுத்தியவர் அலியார் அவர்கள் எனப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து அரபு மொழித் துறையின் தலைவர் கலாநிதி ஏ.எம். றாசிக் அவர்கள் உரையாற்றியபோது, 2000 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக வளர்ச்சியுடன் நேரடியாக இணைந்திருந்த அர்ப்பணிப்புமிக்க கல்வியாளராக அலியார் அவர்கள் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அரபு மொழியில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, மாணவர்களுடன் பேணிய நெருக்கமான உறவு, பாடத்திட்ட வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளில் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இஸ்லாமியக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் அவர்கள் தனது உரையில், “ஒரு ஆசிரியரின் உண்மையான வெற்றி, அவர் உருவாக்கிய மாணவர்களின் வாழ்க்கையில்தான் பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டார். அஷ்-ஷெய்க் அலியார் அவர்கள் உருவாக்கிய பல மாணவர்கள் இன்று கல்வி, சமூக மற்றும் மார்க்கத் துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவது அவரது சேவையின் மிகப்பெரிய சான்றாகும் என்றும் தெரிவித்தார்.
பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் அவர்கள் தனது உரையில், அலியார் அவர்களுடனான இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான நட்புறவை நினைவுகூர்ந்தார். University Kebangsaan Malaysia-வில் PhD தொடரும் வாய்ப்பை சமூகப் பொறுப்புக்காகத் துறந்த தியாக உணர்வை எடுத்துரைத்த அவர், “அறிவு முதிர்ச்சியும் உயரிய ஒழுக்கமும் கொண்ட விரிவுரையாளராக அவர் திகழ்ந்தார்; இளம் கல்வியாளர்களுக்கு அவர் ஒரு சிறந்த Role Model” எனப் பாராட்டினார்.
நிகழ்வின் இறுதியில், அஷ்-ஷெய்க் ஏ.வி.எம். அலியார் (ரியாதி) அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நன்றியுரையை அரபு மொழித் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான எம்.ரீ. ஹபீபுல்லாஹ் வழங்கினார்.
இந்நிகழ்வில் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், அலியார் அவர்களின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பிரியாவிடை நிகழ்வு, ஒரு கல்வியாளர் தனது வாழ்நாள் முழுவதும் செய்த அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறைக்கான ஒரு ஊக்கமூட்டும் கல்வி மரபின் நினைவுச் சின்னமாகவும் அமைந்திருந்தது.

0 comments :
Post a Comment