ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை முழுமையாகக் கட்டி முடிக்க முடியாத வயோதிபர்களுக்குத் தமது வீடுகளைப் பூரணப்படுத்தக் கூடிய கட்டிடப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ், தொழிற்நுட்ப உத்தியோகத்தர் ஏ.நசீர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வீடுகளைக் கட்டிப் பூச முடியாமலுள்ளவர்களுக்கு அதனைப் பூசிப் பூரணப்படுத்திக் கொள்வதற்காக சீமெந்துப் பக்கற்றுக்கள் வழங்கும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜீத் பிரமதாச அவர்களின் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதியமைச்சர்:- 'இந்த நாட்டிலே உள்ள ஏழை மக்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அல்லது கட்டிக் கொள்வதற்கு முதற்கட்டமாகவே இவ்வேலைத் திட்டம் அமைச்சர் சஜித் பிரமதாச அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மக்களின் தேவைகளைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கமானது பல வழிகளிலும் உதவி செய்து வருகிறது.
அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் 15 அத்தியவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதே போல் 100நாள் திட்டத்தில் 27 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மக்களுக்கு இன்நன்மை இன்னும் கிடைக்கவில்லை என்ற கோசம் காணப்படுகிறது. எந்தத் திட்டமானாலும் அது உடன் நடைமுறைக்கு வருவதில்லை. இரண்டொரு மாதங்கள் காலமெடுக்கலாம். மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிட்சயம் அரசாங்கத்தின் நன்மைகள் கிடைத்தே தீரும்' எனத் தெரிவித்தார்.



