ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்ததாக கைதான கைபதுல்லாகானுக்கும் டெல்லியில் பாகிஸ்தான் தூதரக ஊழியர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த அப்துல் ரஷீத்தும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கைபதுல்லாகான் என்பவரும் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் தேச துரோக பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மேற்கு கொல்கத்தா நகரில் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக வேவு பார்த்த 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் கைதான கைபதுல்லாகான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு கைபதுல்லாகான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உளவு பார்த்து வந்துள்ளார். 2013-ம் ஆண்டு அவர் தனது உறவினர்களுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்து இருக்கிறார். இதன்பிறகுதான் அவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்.
குறிப்பாக பாகிஸ்தான் உளவுத்துறை கட்டளையின் பேரில் ராணுவத்தில் உள்ளவர்களை எப்படியாவது உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்த திட்டம் தீட்டப்பட்டது.
இதற்காக பண ஆசை காட்டி ராணுவத்தில் பணியாற்றுபவர்களை தனது வசம் இழுக்க கைபதுல்லாகான் தீவிர முயற்சி மேற்கொண்டார். கடைசியாக இந்த வலையில் சிக்கியவர்தான் எல்லை பாதுகாப்பு படை புலனாய்வு பிரிவின் தலைமைக் காவலர் அப்துல் ரஷீத். இது ஐ.எஸ்.ஐ. அமைப்பினருக்கு மிகவும் வசதியாகிப் போனது.
இந்த நிலையில், ராணுவத் தகவல்கள் அன்னிய உளவு அமைப்புக்கு பரிமாறப்படுவது மத்திய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு உளவு ஏஜெண்டுகளாக பணியாற்றுபவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
கைபதுல்லாகான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர் நேற்று(நவம்பர் 30-ந்தேதி) சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். இந்த தகவலும், மத்திய உளவுத்துறையினருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, கைபதுல்லாகான் மூலம் பாகிஸ்தான் தூதரக ஊழியரையும் கையும், களவுமாக பிடிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் திட்டம் தீட்டி இருந்தனர். ஆனால் கைபதுல்லாகான் கைதான தகவல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
இதைத்தொடர்ந்தே இந்திய உளவுத்துறையில் உள்ள ஒருவரே இதில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு மத்திய புலனாய்வுத் துறையினர் வந்தனர்.
அப்போதுதான் கைபதுல்லாகான் கைதான தகவலை அப்துல்ரஷீத் தெரிவித்து இருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. அப்துல் ரஷீத்தை பிடித்து துருவித் துருவி விசாரணை நடத்தியபோது, அனைத்து குட்டும் வெளிப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார்.
அவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பரிமாற்றம் செய்து கொண்ட முக்கிய தகவல்கள், ரகசிய ஆவணங்கள், புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன.
அப்துல் ரஷீத் மீது ராணுவ கோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டு அனுமதியும் வழங்கியது.
