தெமட்டகொடையில் இளைஞர் ஒருவர் கடத்தி தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டாரென சந்தேகிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திரவிற்கு நல்லாட்சி அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும் வழங்கவில்லை. பொலிஸார் தாராளமாக அவர் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, சாட்சியங்களுடன் ஹிருனிக்கா எம்.பி. குற்றவாளியென நிரூபிக்கப்படுவாராயின் ஆளும் தரப்பு உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கம் அவர் மீது எடுக்கக் கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாம் ஆராய்வோம் என்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் கூறினார்.
கடந்தகால அரசாங்கத்தைப் போன்று எம்.பிமார்களை சிங்கப்பூரில் ஒளித்து வைத்து பாதுகாப்பு வழங்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தகவல் திணைக்களத்தில் நேற்றுக் காலை (30)நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி குறித்து நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில், ஹிருனிக்கா எம்.பி. யின் மேற்படி செயற்பாடு இந்த அரசாங்கத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியிருப்பதாகவும் நல்லாட்சிஅரசாங்கம் அவரை பாதுகாத்து வருவதாகவும் பொதுமக்களிடையே கருத்து நிலவி வருவதாக ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதற்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
ஹிருனிக்கா எம்.பி. ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர் ஆவார். இவர் செய்திருப்பது சரியாக இருப்பினும் தவறாக இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் நாம் அதற்கான பொறுப்பினை ஏற்க தயாராக உள்ளோம். ஆனால் இச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தலையிடவில்லை.
சட்டம் எப்போது வேண்டுமானாலும் அவர் மீது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
நாம் அவரை பாதுகாக்க நினைத்திருந்தால் கடந்தகால அரசாங்கத்தைப் போன்று நாமும் அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி ஒளித்து வைத்திருக்கலாம். ஆனால் எமக்கு அதற்கான அவசியமில்லை. நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே அது முறையாக பின்பற்றப்பட வேண்டுமென்றே நாமும் பொலிஸ் மா அதிபரை கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அரசியல்வாதி ஒருவர் செய்யும் தவறுக்காக முழு அரசாங்கத்தையும் அந்த கட்சியையும் குறை கூறுவது நியாயமற்றது. பொலிஸ் விசாரணைகளின் முடிவில் உண்மை வெளிவரும் என்றும் கூறினார்.
