வலம்பரி கவிதா வடட்டத்தினி 22வதி கவியரங்கு 25-11-2015. நிகழ்வுகள்..!

செவிக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த கவிமணி எம்.சி.எம்.சுபைர் அரங்கில் நடைபெற்ற வகவத்தின் 22வது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி கவியரங்க வரிசையில் 22வது கவியரங்கு கொழும்பு குணசிங்கபுர அல்ஹிக்மா கல்லூரியில் கல்ஹின்னை கவிஞர் கவிமணி எம்.சி.எம்.சுபைர்அரங்கில் 25-11-2015 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம் (கவிஞர் ஈழத்து நூன்) கலந்து கொண்டு கவிமணி எம்.சி.எம்.சுபைர் பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹு சைன் தலைமை தாங்கினார்.

செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்த ஸ்தாபக உறுப்பினர் எஸ்.ஐ.நாகூர் கனி நன்றியுரை நிகழ்த்தினார். ஆரம்ப நாட்களில் கவிஞர் தாசிம் அகமதுவும், தானும், கவின்கமலும் வகவத்தை வளர்க்க பட்ட கஷ்டங்களையும் தனது உரையில் நாகூர் கனி சுட்டிக்காட்டினார்.

சிறப்புரையாற்றிய எம்.ஏ.ஏம்.நிலாம் அவர்கள்,

“ 1933ம் ஆண்டு கல்ஹின்னயில் பிறந்த கவிமணி எம்.சி.எம். சுபைர் அவர்கள் ஆரம்பத்தில் ஒரு ஆசிரியராக கடமையாற்றினார். அவர் ஒரு கட்டுரையாளராக, கவிஞராக, நாட்டார் பாடல் ஆய்வாளராக, வானொலி பேச்சாளராக, சஞ்சிகை ஆசிரியராக, நூல் வெளியீட்டாளராக திகழ்ந்தார். 

அதன் மூலம் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. கவிமணி, கவித்தாரகை, இலக்கியமணி என்றெல்லாம் போற்றப்பட்டார். பண்டாரவளை பாடசாலை இன்று நிமிர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக எம்.சி.எம். சுபைர் அவர்களே விளங்கினார். அதற்கு நன்றிக் கடனாய் அப் பாடசாலையின் ஒரு மண்டபத்துக்கு ‘கவிமணி சுபைர் அரங்கு’ என அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. 

அவரிடம் கவிதை பிரவாகித்து ஓடியது. 1956ம் ஆண்டு ‘மலர்ந்த வாழ்வு’ என்ற முதல் கவிதைத் தொகுதியை வெளிக்கொணர்ந்தார். இலங்கையில் மாத்திரமின்றி இந்திய, மலேசிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. இவரது ஆக்கங்கள் இவரிடமிருந்து கேட்டுப் பெற்றே பிரசுரமாகின என்பது குறிப்பிடத்தக்கது. பண்டாரவளையிலிருந்து “மணிக்குரல்” எனும் பத்திரிகையை நாலாண்டு காலம் நடாத்தினார். 

சிறுவர் இலக்கியம் படைப்பதிலும் சிறப்புற்று விளங்கிய கவிமணி ‘மலரும் மனங்கள்’ ‘எங்கள் தாய்நாடு’ போன்ற நூல்களைத் தந்துள்ளார். 1977ம் ஆண்டு அழ.வள்ளியப்பாவினால் வெளியிடப்பட்ட சிறுவர் பாடல் தொகுப்பில் இடம்பெற்ற இருவரில் ஒருவர் சுபைர் என்றால் அவரது ஆற்றலை விளங்கிக் கொள்ளலாம். 

 
மனைவியின் மறைவுக்குப் பிறகு 18 ஆண்டுகள் எழுதாமல் இருந்த கவிஞர் அப்துல் காதர் அவர்களை மீண்டும் எழுத வைத்தவர் நமது கவிமணி சுபைர் அவர்கள்தான். எழுத்தாளர், ஆய்வாளர் மாத்தளை ஏ.எம்.புவாஜி அவர்களின் “கவிமணி எம்.சி.எம்.சுபைர்” என்ற நூல் அன்னார் பற்றி தெரிந்துகொள்ள பெரிதும் வழிகோலும்.

எமது இளம் சமுதாயத்துக்கு கவிமணி சுபைர் போன்றேரை அறிமுகப் படுத்துவதோடு தென்னிலங்கை இலக்கியவாதிகளையும் அறிமுகஞ் செய்ய வேண்டும். தென்னிலங்கை ஆணிவேரை கண்டறிவதும், அதனை பிரபல்யப் படுத்துவதும் எமது பொறுப்பு” எனவும் சிறப்பதிதி எம்.ஏ.எம்.நிலாம் தனது உரையில் தெரிவித்தார்.

பிரதம அதிதி எம்.ஏ.எம்.நிலாம் அவர்களுக்கு ஸ்தாபக உரையின் ஒரு பிரதி ஸ்தாபகத்தலைவர் கவிஞர் தாசிம் அகமதுவினால் கையளிக்கப்பட்டது.

கவிஞர் நியாஸ் ஏ. சமதின் தாயாரும், காப்பியக்கோ டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் சகோதரியுமான புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனின் மூத்த மகளாரின் மறைவுக்காகவும், கவிஞர் ஜவாத் மரைக்காரின் துணைவியாரின் மறைவுக்காகவும் பிராத்தனைகள் புரியப்பட்டன.

கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம் தலைமையில் வகவத்தின் 22வது கவியரங்கு சிறப்பாக நடந்தது. கவிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழும் ஆறுமுகம் ஒவ்வொரு கவிஞரை அழைப்பதற்காகவும் இசைக் கருவிகளை உபயோகித்தார். 

கிட்டார், புல்லாங்குழல், மௌத்ஓகன், டெம்போரின் போன்ற வாத்தியங்களை இசைத்து சபையை கலகலப்பாக்கினார். கவிஞர்கள் கலைவாதி கலீல், அஷ்ரப் சிஹாப்தீன், சட்டத்தரணி உஸ்மான் மரிக்கார், கவிக்கமல், க.லோகநாதன், வெளிமடை ஜஹாங்கீர், கலாபூஷணம் மஸீதா அன்ஸார், இப்னு அஸூமத், சங்கர் கைலாஷ், எம். பிரேம்ராஜ், எஸ் தனபாலன், எம்.எஸ்.அப்துல் லத்தீப், நாச்சியாவீவு பர்வீன், பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வான், எம்.எச்.எம். நௌசர், எஸ்.எம்.அலி அக்பர் ஆகியோர் கவி மழை பொழிந்தனர்.

வகவ கவிஞர்கள் மேமன் கவி, கலா விஸ்வநாதன், ஈழ கணேஷ் ஆகியோர் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அல்ஹாஜ் அஸ்ரப் அஸீல், உடுவை தில்லை நடராசா, த.மணி, சுஹைப் எம். காசிம், ஏ.ஸி.எம்.சுபியான், முபாரக் அப்துல் மஜீத், முஸ்டீன், போருத்தொட்ட ரிஸ்மி, ரினோஸா நௌஸாட், எஸ்.ஏ.கரீம், எஸ்.பத்மன், எஸ்.சிறீநிகேதன், எஸ். சிவம், ரி.என்.இஸ்ரா, எம்.என்.எம்.இக்பால், கம்மல்துறை எம்.ஆர்.எம்.இக்பால், எம்.ஐ.நிசாம்தீன், ரஷீத். எம். ஹாயிஸ், நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ், சர்ஜூன் நூர்தீன், எஸ்.எச்.எம்.இத்ரீஸ், எம்.எஸ்எம்.சப்ரிஸ் போன்றோர் சபையை அலங்கரித்தனர். 

டிசம்பர் மாத கவியரங்கம் கலாபூஷணம், காத்திபுல் ஹக் எஸ்.ஐ. நாகூர் கனியின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அல்ஹாஜ் அஸ்ரப் அஸீஸின் ஏற்பாட்டில் அனைவருக்கும் பகற்போசனமும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -