திருகோணமலையில் இருந்து ஏ.எம்.கீத்-
13.11.2015 இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக புல்மோட்டை திரியாய் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான மழையினால் வெள்ள நீரினால் பெரும்பாலான இடங்கள் சூழப்பட்டுள்ளதுடன் மூதூர் மற்றும் கிண்னியா பிரதேசங்களில் சில இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் அப் பிரதேசவாழ் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் மேலும் திரியாயில் நேற்றைய தினம் (13.11.2015) வயலிற்கு சென்ற 06 பேர் வெள்ளநீரினால் சூழப்பட்ட வேளையில் இலங்கை கடற்படை வீரர்களால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) காலையில் பெய்வதற்கு அரம்பித்த அடை மழை இன்று சனிக்கிழமை (14) காலை வரை தொடர்ந்து பெய்த வண்ணமாக உள்ளது.இவ்வாறு மழை பெய்து வருவதால் கந்தளாய் பிரதேசத்தில் நெற் செய்கை பண்ணப்படவிருக்கும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதோடு இப்பிரதேசத்தில் இருக்கின்ற கிராமங்களான பேராறு,மத்ரஸாநகர், பொட்டம்காடு, மற்றும் ரஜஎல பகுதியில் இருக்கின்ற தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது. வடிகாண்களின் நீர் மட்டம் உயர்ந்து வீதியின் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கந்தளாய் பேராறு ஆற்றின் நீர் மட்டமும் உயர்ந்து நீர் அதிக வேகத்துடன் சேற்று நீராக ஓடுகின்றது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நிலை தொடர்பாக பொறியியலாளர் டபிள்யூ.எல்.என்.புத்திக்கவுடன் வினவிய போது:கந்தளாய் குளத்தில் நீர் மட்டம் மூன்று மீற்றர் வரையில் அதிகரித்துள்ள போதிலும் வான் கதவுகள் தற்போதைக்கு திறக்கப்பட மாட்டாது. அதற்கான நீரும் போதுமானதாக இல்லை அத்தோடு மக்களின் தேவைகள் மற்றும் பயிர்செய்கைகள் நெற் செய்கைகளுக்கும் போதுமான தாக உள்ளது என்றும் தெரிவித்தார்.


