ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளையும், அதன் குறைபாடுகளையும் கண்டறியும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அங்கு விஜயம் செய்தார்.
வைத்திய அத்தியேட்சகர் டாக்டர்.வை.பி.ஏ.அஸீஸ் தலைமையிலான குழுவினர் சுகாதார அமைச்சர் நசீரை வரவேற்று, வைத்தியசாலையின் சுற்றுச்சூழலை பார்வையிடச் செய்ததோடு, வைத்தியசாலையின் தேவைகள், குறைகளைத் தெரிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்றும் அங்கு இடம் பெற்றது.
இதில் தலைமை வகித்துப் பேசிய வைத்திய அத்தியேட்சகர் வை.பி.ஏ.அஸீஸ்:- 'எமது வைத்தியசாலைக்குப் பல அநீயாயங்கள் மேலதிகாரிகளால் இழைக்கப்பட்டுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரினால் எமது தாதியர் விடுதிப் புனர்நிர்மானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய்.50 இலட்சத்திற்குமான வேலைகள் ஒரு சதமெனும் குறைவில்லாமல் டீயுஞ வின்படி செய்துதரப்பட வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் விசேட வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் எனப் பலரும் பலவிதமான குற்றங் குறைகளையும், வைத்தியசாலையின் தேவைகளையும் அமைச்சரிடம் நேருக்கு நேர் எடுத்துக் கூறினர்.
தாதிய உத்தியோகத்தரான திருமதி.மறுஜுனா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகையில்:-
எமது வைத்தியசாலையின் நிலைமையைக் கருத்தில் கொண்டு நாங்கள் இரவு, பகல் கடமைகளைச் செய்து வருவதனால், எங்கள் குடும்ப வாழ்க்கை பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது. எங்கள் கணவன், பிள்ளைகளின் தியாகங்களுக்கு மத்தியில் நாம் இதனை ஒரு சமூகப் பணியாகக் கருதியே செய்து வருகின்றோம்.
இப்படியாகப் பல தியாகங்களுக்கு மத்தியில் நாம் சம்பாதிக்கும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைக் கூட தராமல் மறுத்திருக்கின்றனர். இன்னும் வைத்தியர்களுக்கு ரூபாய் 10000மும், தாதியருக்கு ரூபாய் 3000மும் வழங்க வேண்டுமென்று அரசாங்கம் பணித்திருந்த போதிலும் இந்த ரூ.3000த்தையும் தாதியர்கள் பெறக் கூடாது என்பதற்காக எமது சுனுர்ளு எங்களது சம்பளத்திலிருந்து ரூ.3000த்தையும், வட்டி ரூ.150வும் சேர்த்து ரூ.3150தை இந்த சுனுர்ளு வெட்டி எடுத்துள்ளார். இப்படியான குறுகிய சிந்தனையுள்ள ஒரு மேலதிகாரி எங்களுக்குத் தேவையில்லை' எனத் தெரிவித்தார்.
வைத்தியசாலை ஊழியரான திருமதி.ஜாபிறா கருத்து வெளியிடுகையில்:-
சிற்றூழியர்களான நாங்கள் இங்கு பெருங் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றோம். ஒரு வாட்டுக்கு 04 பேர் தேவையான இடத்தில் ஒருவர் மட்டுமே கஷ்டப்படுகிறோம். ஊழியர் பிரச்சினையைத் தீர்த்துத் தாருங்கள்' எனக் வேண்டிக் கொண்டார்.
அனைத்தையும் செவிமடுத்த அமைச்சர் நசீர் கருத்துத் தெரிவிக்கையில்:-
உங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நான் நன்கறிவேன். அரசாங்கத்துடைய எல்லா வைத்திய சாலைகளிலும் பல குறைபாடுகள் இருக்கின்றன. அதிலும் சனத்தொகை ஆகக் கூடுதலாகக் காணப்படும் சம்மாந்துறை போன்ற வைத்தியசாலைகளிலும் பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்துதருவதற்காகவே சுகாதார அமைச்சர் நசீர் இந்த அடத்திற்கு வந்துள்ளேன்.
முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர் விட்ட இடத்திலிருந்து அப்பணிகளை நான் தொடர்ந்தும் செய்துதரத் தயாராக இருக்கிறேன். மூன்று இனமக்களும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்குகின்ற நிதிகள் போதாமலிருக்கின்ற காரணத்தினால் மத்திய அரசுடன் இணைந்து சில நிதிகளைக் கொண்டு வந்து மாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேவையும் எமக்கிருக்கிறது. உங்களது கடமைகளை நீங்கள் சரிவரச் செய்யுங்கள். உங்களது கொடுப்பனவுகள், உங்களுக்குரித்தான அத்தனையையும் நான் பெற்றுத் தரத் தயாராக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.


