எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக 1506 குடும்பங்களைச்சேர்ந்த 5946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவௌி பிரதேசத்தில் பாலர் பாடசாலையொன்றில் 40 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பிரதேச செயலாளர்களுக்கான விசேட கூட்டம் இன்று (15) காலை இடம்பெற்றதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குச்சவௌி -கிண்ணியா- பட்டனமும் சூழலும் பிரதேசங்களில் வௌ்ளநீர் தேங்கி நிற்பதால் பிரதேச சபைகளின் ஊடாக பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி வடிகான்களை வெட்டி நீரை வடியச்செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குச்சவௌி பிரதேச செயலாளர் பிரிவில் 640 குடும்பங்களைச்சேர்ந்த 2457 பேரும் கிண்ணியா பிரதேச செயலகத்தில் 852 குடும்பங்களைச்சேர்ந்த 3443 உறுப்பினர்களும் திருகேகாணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் 14 குடும்பங்களைச்சேர்ந்த 46 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை குச்சவௌியில் தங்கவைக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களுக்கும் சமைத்த உணவுகளை வழங்குமாறும் -பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை பெற்று தேவைக்கேற்ற விதத்தில் உதவிகளை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
