அலுவலக விசேட செய்தியாளர்கள்-
அப்போது இளைஞனாக இருந்த எங்களது மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட கனவின் ஊடாக உருவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த இயக்கத்தை, இன்னும் உத்வேகத்துடன் கொண்டுசெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரான கிழக்குமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இவ்வருட இறுதிக்குள் 10000இளைஞர்களை ஒன்று திரட்டவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகரங்கள் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு 2015” (LACE- 2015) எனும் தலைப்பில் மாபெரும் இளைஞர் மாநாடும், இளைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வும் 2015-10-31திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த ஹக்கீம், ஒன்று திரட்டும் இளைஞர்களை தனியாக அரசியல் செயற்பாடுகளுக்கு மட்டும் பயிற்சியளிக்காது ஏனைய துறைகளிலும் குறிப்பாக தொழில் ரீதியான விளக்கமளிப்புக்கள் சமூக சேவை மற்றும் கலை கலாச்சார செயற்பாடுகள் போன்ற இன்னோரன்ன துறைகளிலும் தனியான மற்றும் கூட்டு செயற்பாடுகளுக்கு அவர்களை தயார்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயட்ப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பாராளமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் றவூப் ஹக்கீம், தான் அம்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தற்போது அம்மண்ணை கௌரவப்படுத்தி வழங்கப்பட்டுள்ள கிழக்குமாகாண சுகாதார அமைச்சு காலாவதியாக்கும் வேளையில் அங்கு பாராளமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத்தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரான கிழக்குமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நமது சமூகத்துக்கு ஆற்றிய அளப்பெரிய சேவைகள் மற்றும் அவர் காட்டிய வழிகள் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுத்தந்தமை போன்ற விடயங்கள் இப்போதைய இளைய சமூதாயத்துக்கு புரியவைக்கப்படவேண்டியுள்ளது. அதேவேளை அப்போதைய இளைஞர் சமுதாயத்துக்கு இருந்த சமூக உணர்வுகள் இப்போதைய இளைஞர்களிடம் அருகிவரும் இவ்வேளையில் அவர்களை ஒன்றிணைத்து சமூக உணர்வுக்குள்ளும் எதிர்கால நம் சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த மாபெரும் இளைஞர் மாநாடு என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நகரங்கள் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களும் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் பாராளமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஐ.எல்.எம்.மாகிர் கே.ஏ.அப்துல் றசாக் (ஜவாத்) கட்சியின் சிரேஷ்ட பிரதிதித் தலைவரும் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத், கட்சியின் முக்கியஸ்தர்கள் துறை சார்ந்த வளவாளர்கள் உலமாக்கள் பெரும் திரளான இளைஞர் என பலரும் இணைந்துகொண்டிருந்த இம்மநாட்டில் கல்வி, விளையாட்டு, கலை கலாச்சாரம், சமயம் கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்த இளைஞர்கள் முதன் முறையாக (LAMA) தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதுடன் நிகழ்வில் பங்குகொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
