கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படும் புனரமைக்கப்படாத கட்டடங்களில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யுத்ததின் பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் பாவனை இல்லாத வீடுகள் மற்றும் பற்றைக்காடாக இருக்கும் பிரதேசங்களில் பாலியல் வன்புனர்வு, போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கால்நடைகளை கடத்திச் செல்லுதல், போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதால் தாம் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதன் மூலம் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க முடியும் என கூறும் மக்கள்,
யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக பெற்றோருடன் தங்கியிருத்தல், மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகள் பாதுகாப்பிற்காக உறவினர் வீடுகளில் தங்கியிருத்தல்,
மற்றும் யுத்தத்தின் பின்பு வெளிநாடுகளில் வாழுதல், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக வெளி மாவட்டங்களில் தங்கியிருத்தல் போன்ற காரணங்களால் பலவீடுகள் பாவனையில் இல்லை எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.



